முகப்பு
தமிழ்நாடு

மருந்துக் கடைகளில் முழு நேர பார்மசிஸ்ட்: அரசு உறுதி செய்ய வலியுறுத்தல்

ஸ்ரீவில்லிபுத்தூர்  : போலி மருந்து மற்றும் காலாவதியான மருந்து விற்பனையைக் குறைத்திட, மருந்துக் கடைகளில் முழு நேர பார்மஸிஸ்ட் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். முழுக்க முழுக்க சுதந்திரப் பொருளாதாரக்

Updated On : 27 டிசம்பர், 2023 at 4:05 PM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூர்  : போலி மருந்து மற்றும் காலாவதியான மருந்து விற்பனையைக் குறைத்திட, மருந்துக் கடைகளில் முழு நேர பார்மஸிஸ்ட் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

முழுக்க முழுக்க சுதந்திரப் பொருளாதாரக் கொள்கைகளைப் பின்பற்றும் மேலை நாடுகளிலும், அரபு நாடுகளிலும்கூட, மருந்துத் தொழில் கடுமையாகக் கண்காணிக்கப்படுகிறது. அங்கு மருந்தியல் படிக்காதவர்கள் மருந்துகளைத் தயாரிப்பதோ, பகுப்பாய்வு செய்வதோ, விற்பதோ முடியாது. முழுவதும் மருந்துத் தொழில் மருந்தியல் படித்தவர்களின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. மருந்துக் கடைகளில் மருந்தாளுநர் தவிர பிறர் வேலை செய்ய முடியாது. கடை உரிமையாளர் காசை மட்டும் தான் தொடலாம், எடுக்கலாம், கொடுக்கலாம். மருந்துச் சீட்டையோ, மருந்தையோ எடுப்பதும், கொடுப்பதும் குற்றம். விற்பனை கவுண்டருக்குப் பின்னால், வெள்ளைக் கோட்டில், பெயர் பொறித்த பிளேட்டுடன் கூடிய மருந்தாளுநர் மட்டுமே நிற்க வேண்டும். பிறர் நின்றால் தண்டனை உண்டு. நம் நாட்டில் 8, 9-ம் வகுப்பு கூட முடிக்காத சேல்ஸ் பாய் முதல் கடை முதலாளி வரை அனைவரும் மருந்து தருவார்கள், வைத்தியமும் செய்வார்கள்.

நம் நாட்டில் மருந்து தர, முதலில் கடையில் முழு நேரமும் பார்மஸிஸ்டே கிடையாது. அரசு, மருந்துக் கடைகளில் பெயர் பொறித்த வெள்ளை கோட் அணிந்து தான் மருந்தாளுநர்கள் இருக்க வேண்டும் என்ற விதியை அமல்படுத்த முடியுமா

நிச்சயமாக முடியாது. அப்படி ஒரு விதியை அரசு கொண்டு வந்தபோது, மருந்துக் கடைக்காரர்கள் சங்கம் (அஐஞஇஈ) அதை கடுமையாக எதிர்த்தது. அவர்களின் செல்வாக்குக்கு அடிபணிந்து அரசும் விதியை விருப்பப்பட்டால் அணிந்தால் போதும் என்று மாற்றிவிட்டது.

வெள்ளை கோட் அணிய வேண்டும் என்பது ஒரு சிறு விஷயம். அதைக்கூட ஏன் எதிர்த்தார்கள்? இந்த விதி கண்டிப்புடன் அமல்படுத்தப்பட்டால், மருந்தாளுநர் இல்லாமல் கடை நடத்தப்படும் குட்டு வெளிப்பட்டுவிடும். அதனால் தான் இந்த எதிர்ப்பு. மருந்தாளுநர் பெயரில் மருந்துக் கடைக்கு லைசென்ஸ் வழங்கப்படுவதால், அவர் மருந்து விற்பனை ரிஜிஸ்டரில் தினமும் கையெழுத்திட வேண்டும். அந்த கையெழுத்தை மட்டும் போட மருந்தாளுநர்கள் நியமிக்கப்படுகிறார்கள், மிகக் குறைந்த சம்பளத்தில்.

ஆனால், பல மேலை நாடுகளில் மருந்தாளுநருக்கு மட்டுமே மருந்துக் கடை தொடங்க லைசென்ஸ் வழங்கப்படுகிறது. வேறு யாரும் மருந்துக் கடை வைக்க முடியாது.

தற்போதைக்கு போலி மற்றும் காலாவதியான மருந்துப் பிரச்னையைக் குறைத்திட (ஒழித்திட அல்ல) முதற்கட்டமாக மருந்துக் கடைகளில் முழு நேரமும் பார்மஸிஸ்ட் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். தவறு நடந்தால் அவரது டிப்ளமோ ரத்து செய்யப்பட வேண்டும். அப்படிச் செய்தால் தவறு நடக்காமல் பார்த்துக் கொள்ள பார்மஸிஸ்ட்டுகள் முன்வருவார்கள். முதலாளி கேட்டுக் கொண்டாலும், நிர்பந்தித்தாலும் எதிர்ப்பார்கள், மறுப்பார்கள் அல்லது ராஜிநாமா செய்து வெளியேறுவார்கள். தவறு நடப்பது வெளியே தெரிந்துவிடும்.

இப்படி மக்கள் நலன் காக்க முன்வரும் டி.பார்ம் படித்தவர்களுக்கு குறைந்த பட்சம் மாதச் சம்பளம் ரூ.5 ஆயிரம் வழங்கப்பட வேண்டும். எந்தக் கடைக்காரராவது இது தனக்கு கட்டுப்படியாகாது என்றால், கடையை மூடிவிட்டு வேறு தொழிலுக்குச் செல்லலாம்.

மருந்துக் கடைக்காரர்கள் பக்கம் நியாயம் என்ன? மருந்துக் கடைகளில் வியாபாரமே இல்லை. டாக்டர்கள் சீட்டு அனுப்புவதே இல்லை. அவர்களே மருந்துகளைக் கொடுத்து விடுகிறார்கள் என்பது அவர்களின் குற்றச்சாட்டு. இதில் உண்மை இல்லாமல் இல்லை. தனியார் மருத்துவமனைகளிலும், கிளினிக்குகளிலும் மருந்து கொடுப்பது தடை செய்யப்பட வேண்டும். மேலை நாடுகளில் இதுவும் கடுமையாக அமல்படுத்தப்படுகிறது. அங்கு 5 கி.மீ. சுற்று வட்டாரத்தில், மருந்துக் கடைகள் இல்லை என்றால் மட்டுமே டாக்டர்கள் தங்கள் மருத்துவமனைகளில் மருந்து ஸ்டாக் வைக்கலாம், கொடுக்கலாம். ஒரு கடை அந்த எல்லைக்குள் வந்தால் கூட போதும், டாக்டர்கள் மருந்து கொடுப்பதை உடன் நிறுத்த வேண்டும். இல்லையென்றால், டிரக் இன்ஸ்பெக்டர், டாக்டர் மீது நடவடிக்கை எடுத்து மருத்துவமனைக்கு சீல் வைக்கலாம். எமர்ஜென்ஸி உயிர் காக்கும் மருந்துகள் (அரசு தரும் பட்டியலில் உள்ளவை) மட்டுமே டாக்டர்கள் வைத்திருக்க வேண்டும்.

ஆனால், நம் நாட்டில் டாக்டர்கள் தங்கள் நோயாளிகளுக்கு தாங்களே மருந்து கொடுக்கலாம் என்று சென்ற நூற்றாண்டில் ஆங்கிலேயர் இயற்றிய சட்டம் அனுமதி கொடுக்கிறது. அதைத்தான் நமது டாக்டர்கள் தற்போது அழகாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதனால், தேவையில்லாத பல பிரச்னைகள் எழுகின்றன. இதைத் தடை செய்தாலே, மருந்துக் கடைகளுக்குப் போதிய வியாபாரம் நடக்க வாய்ப்பும், முறைகேடுகள் குறைய சந்தர்ப்பமும் அமையும்.

ஆக, ஒரு முறைகேடு பல முறைகேடுகளுக்கு வழி வகுக்கிறது. பணம் ஒரே இடத்தில் குவிவது மறுசாராரை தவறான பாதைக்குத் தள்ளுகிறது.

நோய் நாடி, நோய்முதல் நாடி, அது தணிக்கும் வாய் நாடி, மேலே விவரிக்கப்பட்டுள்ளது. அரசு நடவடிக்கை எடுக்குமா பொது மக்கள் நிர்ப்பந்திப்பார்களா அல்லது வழக்கம் போல் பிரச்னை வரும் போது மட்டும் பரபரப்பாகப் பேசுவதும், பின்னர் மறந்து விடுவதும் தொடருமா?

முழு கட்டுரையைப் படிக்க →