தமிழ்நாடு

மூல வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படுமா?

தேனி  :÷ஆண்டிபட்டி, க.மயிலை பகுதிகளின் குடிநீர்த் திட்டம் மற்றும் பாசன வசதிகளை மேம்படுத்த மூல வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணைக் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.    தேனி மாவட்டம்,

கோ.ராஜன்

தேனி  :÷ஆண்டிபட்டி, க.மயிலை பகுதிகளின் குடிநீர்த் திட்டம் மற்றும் பாசன வசதிகளை மேம்படுத்த மூல வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணைக் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

   தேனி மாவட்டம், வருசநாடு பகுதியில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து வரும் கோடாலியாறு, கோடையாறு, கூட்டாறு, உடங்கலாறு, அருணா ஆறு, சாஸ்தா ஆறு, யானைகெஜம், சின்னச்சுருளியாறு ஆகியவற்றின் சங்கமமாக மூல வைகை ஆறு உள்ளது.

÷மூல வைகை ஆறு, பெரியாறு, கொட்டகுடி ஆறு ஆகியவற்றின் மூலம் வைகை அணையில் தேக்கப்படும் தண்ணீர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களின் குடிநீர்த் திட்டங்களுக்கும், பாசனத்துக்கும் பயன்படுகிறது.÷ஆண்டிபட்டி மற்றும் க.மயிலை ஒன்றியங்களில் மூல வைகை ஆற்றின் மூலம் கிடைக்கும் நிலத்தடி நீரைப் பயன்படுத்தி 30 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. க.மயிலை ஒன்றியத்துக்கு உள்பட்ட 18 ஊராட்சிப் பகுதிகளுக்கு மூல வைகையிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

தடுப்பணை தேவை:÷ஆண்டுதோறும் மழைக் காலத்தில் மூல வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், அதன் கரைகள் அரிக்கப்பட்டு விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்குகிறது. மேலும், குடிநீர் திட்டங்களுக்காக அமைக்கப்பட்டுள்ள உறைகிணறுகள், குழாய்கள் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு சேதமடைகின்றன.

÷கோடை காலத்தில் நீர் வரத்தின்றி ஆறு வறண்டு காணப்படுவதால், அப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் 500 அடிக்கும் கீழே சென்று விடுகிறது. மணல் திருட்டு அதிகளவில் நடைபெறுகிறது.

÷எனவே, மழைக் காலத்தில் மூல வைகையில் பெருக்கெடுத்து வரும் தண்ணீரை சேமிக்கும் வகையில் ஆற்றின் குறுக்கே தடுப்பணைக் கட்ட வேண்டும் என இப்பகுதியினர் நீண்ட நாள்களாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

நிதி ஒதுக்கீடு இல்லை:÷இக்கோரிக்கையை ஏற்று 1984-ம் ஆண்டு முதல் வாலிப்பாறை அருகே உள்ள தாண்டிங்குளம் உள்ளிட்ட சில பகுதிகளில் தடுப்பணை கட்டுவதற்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆனால் தற்போது வரை இத்திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

÷இந்நிலையில், மூல வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைந்தால் வைகை அணைக்கான நீர் வரத்து குறைந்துவிடும் என்றும், பாசனத்துக்கும், குடிநீர்த் திட்டங்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்றும் வைகை அணைப் பாசன விவசாயிகள் இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாகக் கூறப்படுகிறது.    

÷இது குறித்து மூல வைகை ஆற்றுப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:÷வைகை அணைக்கு மூல வைகை ஆறு மட்டுமின்றி பெரியாறு, கொட்டகுடி ஆறு மூலமும் நீர் வரத்து உள்ளது. எனவே தடுப்பணை கட்டிய பின், வைகை அணைக்கான நீர் வரத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. தடுப்பணை கட்டும் பணியை அரசு விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

÷இது குறித்து வைகை அணைப் பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளர் போஜையனிடம் கேட்டபோது, மதுரையில் உள்ள பெரியாறு-வைகை பொதுப்பணித் துறை மூலம், மூல வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அரசின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதும் பணிகள் தொடங்கும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீயணைப்பு பணியின் போது சிலிண்டா் வெடித்து விபத்து: 13 போ் காயம்

வாக்காளா் இறுதிப் பட்டியல் இன்று வெளியீடு!

மகளிருக்கு ரூ.5,000 வழங்க அதிமுகவின் அழுத்தமே காரணம்: எடப்பாடி கே.பழனிசாமி

23.2.1976: இருஅடுக்கு ரயில் பெட்டி மேற்கூடு - பெரம்பூர் தொழிற்சாலை தயாரிக்கிறது

ஆஸி.யிடம் போராடி வீழ்ந்தது இந்தியா!

SCROLL FOR NEXT