திருச்சி : பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒன்றரை மாதம் இருக்கும் நிலையில், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உருண்டை வெல்லத்தின் விலை கடந்த 20 நாள்களில் கிலோவுக்கு ரூ.15 வரை அதிகரித்துள்ளது. இந்த விலையேற்றம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தைப் பொருத்தவரை வெல்லம் அதிகம் உற்பத்தி செய்யப்படுவது சேலம், கரூர், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட சில மாவட்டங்களில்தான். ஆனால், கடந்த சில மாதங்களாகவே வெல்ல உற்பத்தி குறையத் தொடங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக உருண்டை வெல்லம் மற்றும் அச்சு வெல்லத்தில் விலை எதிர்பாராத அளவுக்கு உயரத் தொடங்கியுள்ளது. இந்த விலையேற்றத்தால் சிறு வியாபாரிகளும், பொதுமக்களும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சராசரியான விலையில் இருந்த வெல்லத்தின் விலை திடீரென உயரத் தொடங்கியுள்ளதற்கான காரணம் தெரியாமல் பொதுமக்களும், தெரிந்த காரணத்தை வெளியே கூற முடியாத நிலையில் வியாபாரிகளும் உள்ளனர்.
தீபாவளி பண்டிகையின்போது சில்லறை விலையில் ஒரு கிலோ ரூ.36 முதல் ரூ.38-க்கு விற்கப்பட்ட உருண்டை வெல்லம், கடந்த வாரம் ரூ.40-க்கும், தற்போது கிலோ ரூ.51 முதல் ரூ.53 வரையிலும் விற்கப்படுகிறது.
அச்சு வெல்லம் தற்போது ஒரு கிலோ ரூ.56 முதல் ரூ.57 வரை விற்கப்படுகிறது. கடந்த மாதம் ஒரு கிலோ அச்சு வெல்லத்தின் விலை ரூ.47 - ரூ.49 வரை மட்டுமே.
மொத்த விற்பனையைப் பொருத்தவரை 30 கிலோ கொண்ட ஒரு சிப்பம் உருண்டை வெல்லம் கடந்த மாதம் ரூ.880-க்கு விற்கப்பட்டு வந்தது. தீபாவளி பண்டிகையின்போது, 30 கிலோ எடை கொண்ட முதல் தர சிப்ப உருண்டை வெல்லத்தின் விலை ரூ.920.
கடந்த வாரத் தொடக்கத்தில் ரூ.1,040 ஆக இருந்த ஒரு சிப்பம் உருண்டை வெல்லம் தற்போது ரூ.1,380-க்கு மொத்த விற்பனையில் விற்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஒரே வாரத்தில் 30 கிலோவுக்கு ரூ.160 உயர்ந்திருந்த உருண்டை வெல்லம், 20 நாள்களில் 30 கிலோ கொண்ட ஒரு சிப்பத்துக்கு மட்டும் ரூ.500 வரை உயர்ந்துள்ளது.
இதுகுறித்து வியாபாரிகள் மேலும் கூறியது:
"மூலப் பொருள்களின் விலை உயர்வு, போக்குவரத்துச் செலவு அதிகரிப்பு போன்றவை ஒரு புறமிருக்க, உருண்டை வெல்லத்தை பொங்கல் பண்டிகைக்காக அரசு மொத்தமாகக் கொள்முதல் செய்வதே இந்த விலை உயர்வுக்குக் காரணம் என்று வெல்லம் விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த விலை பொங்கல் பண்டிகை வரை குறைய வாய்ப்பில்லை என்ற போதிலும், மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது' என வியாபாரிகள் கூறினர்.
இதேபோல, பொங்கலுக்காகப் பயன்படுத்தப்படும் பச்சரிசியின் விலையும் கடந்த சில நாள்களாக உயரத் தொடங்கியுள்ளது. அரிசி, வெல்லத்தைப் போன்று பாசிப் பருப்பு, ஏலக்காய், முந்திரி பருப்பு, உலர்ந்த திராட்சை, பாமாயில் ஆகியவற்றின் விலையும் கடுமையாக உயரத் தொடங்கியுள்ளன.
கடந்த சில நாள்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.53-க்கு விற்கப்பட்டு வந்த பாசிப்பருப்பு தற்போது ரூ.56-க்கும், ஒரு கிலோ ஏலக்காய் ரூ.1,320-க்கும், ஒரு கிலோ உலர்ந்த திராட்சை ரூ.170-க்கும், முந்திரிப் பருப்பு ஒரு கிலோ ரூ.350-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்தப் பொருள்கள் சில்லறை விலையில் வெவ்வேறு விலையில் விற்கப்படுகின்றன.
இந்த திடீர் விலையேற்றத்துக்குப் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், வியாபாரிகள் தரப்பில் முக்கியமாகக் கூறப்படும் புகார் அரசு கொள்முதல் செய்ய உள்ளது பற்றியே.
பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழகத்தில் உள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும் சர்க்கரைப் பொங்கல் வைப்பதற்கான 6 பொருள்கள் இலவசமாக வழங்கப்படும் என அண்மையில் முதல்வர் கருணாநிதி சட்டப்பேரவையில் அறிவித்தார்.
பச்சரிசி மற்றும் வெல்லம் தலா 500 கிராம், பாசிப்பருப்பு 100 கிராம், முந்திரிப் பருப்பு 10 கிராம், உலர்ந்த திராட்சை, ஏலக்காய் தலா 5 கிராம் என ஆறு வகையான பொருள்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும், அவை "பொங்கல் பை'யில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலவச "பொங்கல் பை' வழங்குவதற்காக வெல்லம் உள்ளிட்ட அனைத்துப் பொருள்களையும் மொத்தமாகக் கொள்முதல் செய்வது குறித்து வியாபாரிகளிடம் அரசுத் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
"பொங்கல் பை' வழங்குவதில் தட்டுப்பாடு வந்துவிடக் கூடாது என்பதற்காக பெரும்பாலான வியாபாரிகளிடம் அரசுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என கட்டளையிடுவதால், வெளிச் சந்தையில் உருண்டை வெல்லம் போன்ற பொருள்கள் தட்டுபாடு ஏற்படத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உச்சத்துக்குச் சென்று கொண்டிருக்கிறது உருண்டை வெல்லத்தின் விலை. இந்த விலையேற்றம் உற்பத்தியாளர்களுக்கு எந்தப் பலனையும் தரப் போவதில்லை என்ற புகாரும் நிலவுகிறது.
எனவே, அத்தியவாசியப் பொருள்களின் விலையேற்றம் தவிர்க்க முடியாத நிலையாகிவிட்ட நிலையில், உருண்டை வெல்லம் செயற்கையாகவே உயர்த்தப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.