பல்கலை.யில் மாற்று எண் போடாமல் மொழிப்பாடத் தேர்வுத்தாள் திருத்தம்
சென்னை, நவ. 25: சென்னைப் பல்கலைக்கழக மொழிப்பாடத் தேர்வுத் தாள்கள் மாற்று எண் போடாமல் இந்த முறை திருத்தப்படுகிறது. முறைகேடு நடைபெறுவதற்குத் துணை போவதுபோல் இந்தப் புதிய நடைமுறை அமைந்துள்ளது என கல்லூரி
சென்னை, நவ. 25: சென்னைப் பல்கலைக்கழக மொழிப்பாடத் தேர்வுத் தாள்கள் மாற்று எண் போடாமல் இந்த முறை திருத்தப்படுகிறது. முறைகேடு நடைபெறுவதற்குத் துணை போவதுபோல் இந்தப் புதிய நடைமுறை அமைந்துள்ளது என கல்லூரி ஆசிரியர்களும் சமூக ஆர்வலர்களும் குற்றம்சாட்டுகின்றனர்.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இணைந்துள்ள அரசு, அரசு உதவி பெறும் கலை - அறிவியல் கல்லூரிகளுக்கு பருவத் தேர்வுகள் நவம்பர் 1 தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இதில் தேர்வுகள் முடிவடைந்த ஆங்கிலம், தமிழ் மொழிப்பாடத் தேர்வுத் தாள்களைத் திருத்தும் பணி கடந்த இரு தினங்களாக நடைபெற்று வருகிறது.
Advertisement
தேர்வுத்தாள்கள் திருத்தும்பணி நேர்மையாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் இருக்கவேண்டும் என்பதற்காக, தேர்வுத் தாள்கள் அனைத்தும் மாற்று எண் போடப்பட்டு மையங்களுக்கு அனுப்பப்படும்.
பள்ளித் தேர்வுகளில் மட்டும் அல்லாமல் பல்கலைக்கழகத் தேர்வுகளிலும் இந்த நடைமுறை பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், இந்த முறை சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிப்பாடத் தேர்வுத்தாள்கள் இரண்டும் மாற்று எண் போடப்படாமல், திருத்தப்படுகின்றன.
இதுகுறித்து கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் கூறியது:
தேர்வுத்தாள் திருத்தும் பணியில் உண்மைத்தன்மை இருக்க வேண்டும் என்பதற்காகவே மாற்று எண் போடும் முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் பல்கலைக்கழகம் மொழிப்பாடத் தேர்வுகளுக்கு இந்தப் புதிய நடைமுறையைக் கொண்டு வந்திருப்பது, முறைகேடுகளுக்கு வழிகோலுவதுபோல் அமைந்துள்ளது. அரசுக் கல்லூரிகளில் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் தமிழ் வழியில் படித்து வருபவர்கள். இவர்களிடையே ஆங்கிலப்பாட தேர்ச்சி விகிதம் குறைவாகவே இருக்கும்.
தனியார் கல்லூரிகளில் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் ஆங்கில வழியில் படித்து வருபவர்கள். இவர்கள் தமிழில் அதிக மதிப்பெண் எடுப்பது கடினம். இந்த நிலையில், பல்கலைக்கழகம் கொண்டு வந்திருக்கும் புதிய நடைமுறையால் குறிப்பிட்ட கல்லூரியின் விடைத்தாள்கள் மற்றும் குறிப்பிட்ட மாணவரின் விடைத் தாள்கள் எந்த மையத்துக்கு செல்கின்றன என்பதை எளிதாகக் கண்டுபிடித்து விடலாம்.
இது மாணவர்கள் பணம் கொடுத்து அதிக மதிப்பெண் பெற வழிவகுக்கும். திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர் தனக்கு விருப்பமான மாணவருக்கு அதிக மதிப்பெண்ணும், விருப்பமில்லாத மாணவருக்கு குறைந்த மதிப்பெண்ணும் வழங்குவதற்கு வாய்ப்பாக அமையும். இதனால் மாணவரின் எதிர்காலம் பாதிக்கப்படும்.
செம்மொழி அந்தஸ்து பெற்றுள்ள தமிழை மேம்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், பல்கலைக்கழகத்தின் புதிய நடைமுறை தமிழின் முக்கியத்துவத்தைக் குறைக்கும் முயற்சியாக அமைந்துள்ளது என்றார்.
கல்லூரி ஆசிரியர்கள் சிலர், இந்தப் புதிய நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சென்னைப் பல்கலைக்கழக உயர் அதிகாரி ஒருவர் கூறியது:
தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட வேண்டும் என்பதற்காகவே, தமிழ் மற்றும் ஆங்கில பாடத் தேர்வுத் தாள்கள் மட்டும், மாற்று எண் போடாமல் திருத்தும் நடைமுறை புதிதாகக் கொண்டுவரப்பட்டுள்ளது.
மற்ற பல்கலைக்கழகங்கள் ஏற்கெனவே இந்த நடைமுறையைப் பின்பற்றி வருகின்றன. மற்ற பாடத் தேர்வுத் தாள்கள் வழக்கம்போல் மாற்று எண்கள் போடப்பட்டு திருத்தப்படும் என்றார்.