முகப்பு
தமிழ்நாடு

திரிசங்கு நிலையில் 500 ஆசிரியர் பயிற்றுநர்கள்

கடையநல்லூர் : தமிழகம் முழுவதும் பள்ளிகளிலுள்ள காலிப்பணியிடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு மூன்று மாதங்களான பின்பும் பணி விடுவிப்பு செய்யப்படாததால், 500 ஆசிரியர் பயிற்றுநர்களின் நிலை கேள்விக்குறியாகிய

Updated On : 27 டிசம்பர், 2023 at 5:43 PM
பகிர்:

கடையநல்லூர் : தமிழகம் முழுவதும் பள்ளிகளிலுள்ள காலிப்பணியிடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு மூன்று மாதங்களான பின்பும் பணி விடுவிப்பு செய்யப்படாததால், 500 ஆசிரியர் பயிற்றுநர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளதுடன் மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்பட்டுள்ளது.

  தமிழகம் முழுவதும் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ், வட்டார வள மையங்களில் சுமார் 7000 பேர் ஆசிரியர் பயிற்றுநர்களாக, பட்டதாரி ஆசிரியர் ஊதிய விகிதத்தில் பணியாற்றி வருகின்றனர்.

  இவர்களில் வருடந்தோறும் 500 ஆசிரியர் பயிற்றுநர்களை பணிமூப்பின் அடிப்படையில், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு பணியிடமாற்றம் செய்யவேண்டும் என்ற அரசு ஆணையின் அடிப்படையில், ஒவ்வோராண்டும் 500 ஆசிரியர் பயிற்றுநர்கள் கலந்தாய்வின் மூலம், பள்ளிகளுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

  அதுபோல், இந்த ஆண்டும் (2010-11) தமிழகம் முழுவதும் உள்ள வட்டார வள மையங்களில் பணிபுரிந்து வரும் ஆசிரியர் பயிற்றுநர்கள் 500 பேருக்கு பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு பணியிடமாறுதல் செய்வதற்கான கலந்தாய்வு 9.7.2010 அன்று சென்னையில் நடைபெற்றது.   ஆனால், கலந்தாய்வு மூலம் பணியிடமாற்றம் பெற்றவர்கள் இன்றுவரை பணி விடுவிப்பு செய்யப்படவில்லை.

  பணியிடமாற்றம் பெற்ற ஆசிரியர் பயிற்றுநர்கள் பணி விடுவிப்பு செய்யப்படாததால் பல பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதன் காரணமாக, ஆசிரியர்களின்றி மாணவர்களின் கல்வியும் பாதித்து வருவதாக மாணவர்களின் பெற்றோர் புகார் தெரிவிக்கின்றனர்.

  இதுதொடர்பாக, அனைத்து வள மைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்க மாநிலத் தலைவர் இரா. காசிப்பாண்டியன் கூறியதாவது:

  பள்ளிகளுக்குப் பணியிடமாற்றம் பெற்ற 500 ஆசிரியர் பயிற்றுநர்கள் பணி விடுவிப்பு செய்யப்படாததால் பெரும் வேதனையில் இருக்கின்றோம். மேலும், தற்போது பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை படைப்பாற்றல் கல்வி நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில் எங்களைப் போன்ற பயிற்சி பெற்ற ஆசிரியர் பயிற்றுநர்கள், பள்ளிப் பணிக்குச் செல்லும்போது அதன் முழுப்பலனும் மாணவர்களுக்கு கிடைக்கும்.

   எனவே, அரசு பணியிடமாற்றம் பெற்ற ஆசிரியர் பயிற்றுநர்களை உடனடியாக பணி விடுவிப்பு செய்யவேண்டும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.