போக்குவரத்துக் கழக குடந்தை கோட்டம் மேம்படுத்தப்படுமா?
பேராவூரணி: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்டத்தை மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். கும்பகோணம் கோட்டத்தில் 18 பணிமனைகள் உள்ளன. கோட்டத்தின் ஒரு நாள்
தமிழ்நாடுபோக்குவரத்துக் கழக குடந்தை கோட்டம் மேம்படுத்தப்படுமா?
பேராவூரணி: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்டத்தை மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். கும்பகோணம் கோட்டத்தில் 18 பணிமனைகள் உள்ளன. கோட்டத்தின் ஒரு நாள்
பேராவூரணி: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்டத்தை மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
கும்பகோணம் கோட்டத்தில் 18 பணிமனைகள் உள்ளன. கோட்டத்தின் ஒரு நாள் வருவாய் மட்டும் சுமார் 80 லட்சத்திற்கு மேல் இருக்கும் எனக் கூறப்படுகிறது. ஆனாலும், பெரும்பாலான பேருந்துகள் மிகவும் பழுதடைந்த நிலையிலேயே இயக்கப்படுகின்றன. இதனால், தினசரி 50-க்கும் மேலான பேருந்துகள் இடைவழியிலேயே நின்றுவிடுவது வாடிக்கையான நிகழ்வாக உள்ளது. பழுதடைந்த பேருந்துகளுக்குப் பதிலாக புதிய பேருந்துகள் விடப்படுவதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது. பொதுமக்கள் புதிய பேருந்துகளை எதிர்பார்த்த நிலையில், சென்னையில் நீண்ட நாள்களாக ஓடிய பேருந்துகளே வண்ணம் பூசப்பட்டு மீண்டும் விடப்பட்டன.
இந்தக் கோட்டத்தின் அனைத்துப் பணிமனைகளிலும் சில பேருந்துகளைத் தவிர, இதர அனைத்தும் பத்தாண்டுகளுக்கு மேல் ஓடிய பேருந்துகளாக உள்ளன. மேலும், ஓட்டுநர், நடத்துநர், மெக்கானிக் பற்றாக்குறையால் ஏற்கெனவே உள்ள ஊழியர்கள் மீது கூடுதல் பணிப்பளு திணிக்கப்படுகிறது.
உதாரணமாக, தஞ்சை நகரப் பணிமனையில் 126 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இங்கு 54 தொழில்நுட்பர் பணியிடத்திற்கு சிலர் மட்டுமே பணியில் உள்ளனர். பேருந்துகளுக்கு தேவையான டயர், உதிரிப் பாகங்களை வாங்கிக் கொடுக்காததால், பேருந்துகள் பழுதடையும்போது பல வழித்தடங்களில் பேருந்து இயக்கப்படுவது நிறுத்தப்படுகிறது.
தமிழகத்திலுள்ள அனைத்துக் கோட்டங்களிலும் சுமார் 20 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை பழுதடைந்த நிலையிலேயே உள்ளன.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.சி. பழனிவேலு கூறியது:
அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்ட பணிமனைகளின் செயல்பாடுகள் திருப்தியளிக்கக் கூடியதாக இல்லை. மேலும், கோட்டத்திலுள்ள 18 பணிமனைகளில் பெரும்பாலானவை அடமானத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
விபத்து குறித்த வழக்குகளில் நீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்றாததால் பேருந்துகள் ஜப்தி செய்யப்படுகின்றன. எனவே, போக்குவரத்துத் துறையின் குறைபாடுகளைக் களைய, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்று மட்டும் கூறிக்கொண்டு, மோசமான பேருந்துகளை இயக்கி, பயணிகளைச் சிரமப்படுத்துவது சரியல்ல. பொதுத் துறை நிறுவனங்களைப் பாதுகாப்பதில் அரசு அக்கறை காட்ட வேண்டும் என்றார் அவர்.
எனவே, அறிவிப்புகளோடு அரசு நின்று விடாமல், போக்குவரத்துத் துறையைச் சீரமைக்க வேண்டும் என பயணிகள், பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.