ஈரோடு : தொழிற்பயிற்சி முடித்திருந்தாலும் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட மகளிர் குழுவினர் வேலைவாய்ப்பு கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனர்.
ஆட்சியாளர்கள் மட்டுமல்லாது அரசியல் கட்சிகளின் கவனத்தையும் மகளிர் சுய உதவிக்குழு ஈர்த்துள்ளது. தமிழகத்தில் தற்போது 4.25 லட்சம் மகளிர்
குழுக்களில் சுமார் 60 லட்சம் பேர் உறுப்பினர்களாகவுள்ளனர். இந்த எண்ணிக்கை அடுத்த சில ஆண்டுகளில் 1 கோடியை எட்டிவிடும் என்று ஆட்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மகளிர் முன்னேற்றம் என்பது ஒருபுறம் இருந்தாலும், இந்தக் குழுவினர் மூலம் மிகப்பெரிய அளவில் வாக்கு வங்கி உள்ளது என்பதை உணர்ந்துள்ள ஆட்சியாளர்கள், மகளிர் குழுக்களின் மேம்பாட்டிற்கு பல்வேறு பொருளாதார ரீதியான திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் மகளிர் குழுக்களுக்கு கடந்த ஆண்டு மட்டும் 5 ஆயிரம் கோடி வங்கி கடன் வழங்கப்பட்டுóள்ளது. குழு உறுப்பினர்களுக்கு இலவசமாக தொழிற்பயிற்சி
அளிக்கும் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. கட்டுமானப் பணி, வாகனம் பழுதுபார்ப்பு, மோட்டார் மற்றும் ஜெனரேட்டர் பழுதுபார்ப்பு, தரக்கட்டுப்பாடு, சணல், வாழை நார் மற்றும் ரெக்சின் பை தயாரித்தல் உள்ளிட்ட தொழிற்பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும், மாவட்டந்தோறும் சுமார் 300 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு மாவட்ட மகளிர் திட்ட அலுவலகம் மூலமாக இந்தப் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இவ்வாறு தொழிற்பயிற்சி பெறுபவர்களில் 50 சதம் பேருக்குக்கூட வேலைவாய்ப்பு அல்லது சுய தொழில்வாய்ப்பு கிடைப்பதில்லை.
மகளிர் குழு உறுப்பினர்களுக்குத் தொழிற்பயிற்சி அளிப்பதோடு மாவட்ட மகளிர் திட்ட அலுவலகம் ஒதுங்கிக்கொள்கிறது. இதனால் மகளிர் குழுவினர் தொழிற்பயிற்சி முடித்திருந்தாலும் வேலைவாய்ப்பு கிடைக்காத நிலை உருவாகியுள்ளது.
தொழிற்பயிற்சி முடித்து சுய தொழில் தொடங்குபவர்களுக்கு, பொருட்களை விற்பனை செய்வதற்கான சந்தை வாய்ப்புகள் இல்லை. இதனால் தொழில் தொடங்குபவர்களில் 20 சதவீதம் பேர் சில மாதங்களிலேயே நிறுவனத்தை மூடிவிட்டு, வேறு இடத்தில் வேலை தேடும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மகளிர் குழுவினர் தயாரிக்கும் பொருட்களில் தரமில்லை. இதனால் பொருட்களை சந்தைப்படுத்துவதில் சிரமம் உள்ளது என்று மகளிர் திட்ட இயக்குநர் தெரிவித்துள்ளார்.
தரமான பொருட்களை தயாரிப்பதற்கான பயிற்சியையும், அதற்கான கட்டமைப்பு வசதிகளையும் அரசு ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும், அந்தப் பகுதியில் உள்ள தொழில் வாய்ப்புக்கு ஏற்ப குறுப்பிட்ட தொழில் பிரிவுகளில் மட்டுமே பயிற்சி அளிக்க வேண்டும். மகளிர் குழு தயாரிக்கும் பொருட்களுக்கு, காதி விற்பனை மையங்கள் சந்தை வாய்ப்பினை அளிக்கும் என்று அரசு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தது. ஆனால் இந்த அறிவிப்பு இன்னும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.
அடுத்த ஆண்டு முதல் அதிக எண்ணிக்கையிலான மகளிர் குழு உறுப்பினர்களுக்கு தொழிற்பயிற்சிகளை அளிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இம் முயற்சி வரவேற்புக்குரியது என்றாலும் கூட, பயிற்சி முடிக்கும் அனைவருக்கும் சுயதொழில் அல்லது வேலைவாய்ப்பு கிடைப்பதற்கான வாய்ப்புகளையும் கண்டறிந்து செயல்படுத்த வேண்டும். அப்போதுதான், பயிற்சித் திட்டத்திற்கென செலவு செய்யப்படும் நிதி பயனுள்ளதாக இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.