சென்னை, செப். 23: இணையதள சர்வர் கோளாறு பிரச்னை காரணமாக, தமிழகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் அனைத்தும் முடங்கிய நிலையில் உள்ளன.
தமிழகத்தில் முதல் முறையாக ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்யும் புதிய வசதி கடந்த 15-ம் தேதி தொடங்கப்பட்டது. இதற்காக வேலைவாய்ப்பு துறை பிரத்யேக இணையதள முகவரியையும் வெளியிட்டது.
ஆனால், சிறிது நேரத்திலேயே சர்வர் கோளாறு காரணமாக ஆன்லைன் பதிவு சேவை செயல் இழந்தது. இதைத் தொடர்ந்து கடந்த ஒரு வார காலமாக இந்த இணையதளமும் ஆன்லைன் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தமிழகத்தில் உள்ள 36 வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் ஏற்கெனவே நடைமுறையில் இருந்த இணையதளமும் முடக்கப்பட்டது.
அதற்குப் பதிலாக புதிய இணையதளத்தை செயல்படுத்த கடந்த 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை தாற்காலிகமாக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு, புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகள் நிறுத்தப்படுவதாக அரசு அறிவித்தது.
ஆனால், எமர்ஜிஸ் என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து எல்காட் நிறுவனம் புதிதாக வடிவமைத்த எம்பவர் என்ற நவீன மென்பொருளின் உதவியுடன் ஆன்லைன் முன்பதிவு வசதியை செயல்படுத்துவதில் தொழில்நுட்ப நிபுணர்கள் போராடி வருகின்றனர்.
குவியும் விண்ணப்பங்கள்:
இந்த நிலையில் வேலைவாய்ப்புத் துறையின் புதிய இணையதளம் இப்போது முழுவதுமாக செயல் இழந்துள்ளது.
இதனால், ஏமாற்றம் அடைந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களும், பெண்களும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களை முற்றுகையிட்டு வருகின்றனர்.
ஆனால், ஏற்கெனவே நடைமுறையில் இருந்த எஸ்.ஜி.டி. மற்றும் யு.ஆர். ஆகிய எளிய முறையில் இயங்கிய மென்பொருள்கள் முடக்கப்பட்டது. இதனால், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் உள்ள கணினிகளில் பதிவு மற்றும் புதுப்பித்தலுக்கான விவரங்களை தொகுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பதிவு புதுப்பிக்க கால நீட்டிப்பு செய்யப்படுமா?: தமிழகத்தில் கடந்த 2006, 2007, 2008 மற்றும் 2009-ம் ஆண்டில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவைப் புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு அரசு சிறப்புச் சலுகையாக மீண்டும் ஒரு வாய்ப்பை அளித்துள்ளது. இதன்படி, வரும் அக்டோபர் 4-ம் தேதிக்குள் அந்தந்த வேலைவாய்ப்பு அலுவலகங்களில் புதுப்பித்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.