நேற்றைய தொடர்ச்சி...
காங்கிரஸ் பிளவுக்குப் பிறகு 1971-ல் நடந்தது 5-வது சட்டப்பேரவைத் தேர்தல். இந்திரா காங்கிரஸின் ஆதரவுடன் அசுர பல மெஜாரிட்டியுடன் கருணாநிதி தலைமையில் திமுக ஆட்சி அமைந்தது. திமுக ஆட்சியில் அமர்ந்த ஓராண்டிலேயே, கட்சியில் பிளவு ஏற்பட்டு எம்.ஜி.ஆர். தனியாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கிவிட்டார். அதிமுக தொடங்கிய ஒரே ஆண்டில் 1973 மே 22-ம் தேதி திண்டுக்கல் மக்களவைக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது.
1971-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக உறுப்பினர் ராஜாங்கத்தின் மறைவைத் தொடர்ந்து நடைபெற்ற திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நான்குமுனைப் போட்டி நிலவியது. திமுக சார்பில் பொன். முத்துராமலிங்கம், அதிமுக சார்பில் மாயத் தேவர், ஸ்தாபன காங்கிரஸ் சார்பில் என்.எஸ்.வி. சித்தன், இந்திரா காங்கிரஸ் சார்பில் சீமைச்சாமி ஆகியோர் களமிறங்கினர் என்றாலும், போட்டி என்னவோ அதிமுக வேட்பாளர் மாயத் தேவருக்கும், ஸ்தாபன காங்கிரஸ் வேட்பாளர் என்.எஸ்.வி. சித்தனுக்கும் இடையில்தான் இருந்தது.
கட்சி தொடங்கி ஒரே ஆண்டில் மிகப்பெரிய வெற்றியை திண்டுக்கல் மக்களவைக்கான இடைத்தேர்தலில் அதிமுக அடைந்தது என்பது மட்டுமல்லாமல் ஆளும் திமுகவின் வேட்பாளர் மூன்றாவது இடத்துக்கும் தள்ளப்பட்டார். தமிழக அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்திய முக்கியமான இடைத்தேர்தல் எது என்று சொன்னால் அதில் முதலிடம் திண்டுக்கல் இடைத்தேர்தலுக்குத்தான்.
அடுத்த ஆண்டே கோயம்புத்தூர் மேற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. திமுக உறுப்பினர் கோபாலின் மறைவால் 1974-ல் நடந்த இந்த இடைத் தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற்றபோது, அதிர்ஷ்டக் காற்று அதிமுகவின் பக்கம் வீசுவது உறுதியாகிவிட்டது. 1977-ல் எம்.ஜி.ஆர். தலைமையில் அதிமுக ஆட்சியும் அமைந்தது.
1980 மக்களவைத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணியின் வெற்றியைக் காரணம் காட்டி எம்.ஜி.ஆர். தலைமையிலான அதிமுக ஆட்சி கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்றது 7-வது சட்டப்பேரவைக்கான தேர்தல். இந்தத் தேர்தலில் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக - காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்தி அதிமுகவே மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அந்தத் தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுக - காங்கிரஸ் உறவிலும் விரிசல் எழத் தொடங்கியது. அந்த நேரத்தில் திருப்பத்தூர் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த வெ. வால்மீகியின் மறைவைத் தொடர்ந்து நடைபெற்றது ஒரு இடைத்தேர்தல்.
ஆட்சிக்கு வந்துவிட்ட எம்.ஜி.ஆர். மீண்டும் இந்திரா காந்தியுடனும், காங்கிரஸýடனுமான தனது உறவைப் புதுப்பித்துக் கொள்ள ஒரு வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருந்த நேரத்தில் திருப்பத்தூர் இடைத்தேர்தல் அவருக்குக் கைகொடுத்தது. காங்கிரஸ் அவரிடம் ஆதரவு கோராமலேயே, திருப்பத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் எ. அருணகிரிக்குத் தனது ஆதரவை அளித்து வெற்றிபெறச் செய்தார் எம்.ஜி.ஆர். திருப்பத்தூர் இடைத்தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் திமுகவுடனான உறவை முறித்துக் கொண்டு அதிமுகவுடன் அத்யந்த நட்பு பாராட்டத் தொடங்கிவிட்டது.
1987-ல் எம்.ஜி.ஆரின் மறைவும், அதனால் அதிமுகவில் ஏற்பட்ட பிளவும், 1989 தேர்தலில் திமுகவை ஆட்சியில் அமர்த்தியது. காங்கிரஸýம் 1989-ல் நடந்த ஒன்பதாவது சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டது. பொதுத் தேர்தலின் போது, மருங்காபுரி, மதுரை கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
திமுக மீண்டும் ஆட்சியில் அமர்ந்த பிறகு நடந்த இந்த இரண்டு தொகுதிகளுக்கான தேர்தல்கள் பரபரப்பாகப் பேசப்பட்டன என்பது மட்டுமல்ல, அதிமுகவின் செல்வாக்கு எம்.ஜி.ஆரின் மறைவால் சற்றும் பாதிக்கப்படவில்லை என்பதையும் உணர்த்தின. தேர்தல் தோல்விக்குப் பிறகு ஜெயலலிதா அணியும், ஜானகி அணியும் சமரசமாகி, மருங்காபுரியிலும், மதுரை கிழக்கிலும் தேர்தல் நடைபெற்றபோது, ஒன்றுபட்ட அதிமுகவாக இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு இரண்டு தொகுதிகளையும் கைப்பற்றியது. 13 ஆண்டு கால வனவாசத்துக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த திமுகவின் வயிற்றில் புளியைக் கரைத்தது இந்தத் தேர்தல் முடிவுகள்.
1991-ல் ராஜீவ் படுகொலையால் ஏற்பட்ட அனுதாப அலையும் கைகொடுத்ததால் அதிமுக - காங்கிரஸ் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. முதல்வர் ஜெயலலிதா பர்கூர், காங்கேயம் என்று இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டிருந்ததால், காங்கேயம் தொகுதி உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தார். அந்தத் தொகுதிக்கான இடைத்தேர்தலில், தனது அமைச்சரவை சகாவான ஆர்.எம். வீரப்பனை நிறுத்தி வெற்றி பெறவும் செய்தார்.
காங்கேயம் இடைத்தேர்தல் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாவிட்டாலும், அந்தத் தேர்தலில் குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்வு நடந்தது. ஆர்.எம். வீரப்பனை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் அவர் போட்டியே இல்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதுதான் அது. தமிழகத்தில் நடந்த கேலிக்கூத்தான இடைத்தேர்தல் என்று சரித்திரத்தில் பதிவு செய்யப்பட வேண்டிய தேர்தல் அது.
2001-ல் அமைந்த 12-வது சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டது என்றாலும், அடுத்த சில மாதங்களில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் அவர் பதவி விலக வேண்டி வந்தது. ஓ. பன்னீர்செல்வம் முதல்வராகப் பதவி ஏற்றார்.
2002-ல் ஆண்டிப்பட்டி தொகுதி உறுப்பினர் தங்கத் தமிழ்ச்செல்வன் தனது பதவியை ராஜிநாமா செய்து மீண்டும் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றிபெற வழிகோலினார். ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வழிகோலிய 24.02.2002ல் நடைபெற்ற ஆண்டிப்பட்டி இடைத்தேர்தல், தமிழக சரித்திரத்தில் ஒரு திருப்புமுனைத் தேர்தல்தான் என்பதில் சந்தேகம் இல்லை.
2006-ல் அமைந்த 13-வது சட்டப்பேரவைக்குப் பல சிறப்புகள் உண்டு. முதலாவது சிறப்பு கருணாநிதி ஐந்தாவது முறையாக முதல்வராகப் பதவி ஏற்றார் என்பது.
இரண்டாவது சிறப்பு, தமிழகத்தில் முதல் முறையாக ஒரு துணை முதல்வர் நியமிக்கப்பட்டார் என்பது. மூன்றாவது, தனிப்பெரும்பான்மை இல்லாத மைனாரிட்டி அரசாக இந்த அரசு ஐந்தாண்டுகள் தொடர்ந்தது என்பது. நான்காவதாக, இடைத்தேர்தல்களில் புதியதொரு உத்தி கடைப்பிடிக்கப்பட்டு, தேர்தல் நடைமுறைக்கே புதிய இலக்கணம் படைக்கப்பட்டது என்பது.
12.01.2009-ல் திருமங்கலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல் தமிழக அரசியலில் மட்டுமல்ல, இந்திய அரசியலிலேயே ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை யார் மறுக்கக் கூடும்? இடைத்தேர்தல்கள் ஏற்படுத்திய திருப்புமுனைகள் இருக்கட்டும். தேர்தலுக்கே திருப்புமுனை ஏற்படுத்திய பெருமை திருமங்கலம் இடைத்தேர்தலுக்கு உண்டு என்றல்லவா சரித்திரம் பதிவு செய்யும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.