பணப் பத்திரங்கள் மூலம் நிதி திரட்ட ரயில்வே திட்டம்: அகலப் பாதை பணிகள் பாதிக்கும் அபாயம்
சென்னை, ஏப். 20: அகலப் பாதைப் பணிகளை நிறைவேற்ற பணப் பத்திரங்கள் மூலம் தேவையான நிதியை திரட்ட ரயில்வேத் துறை திட்டமிட்டுள்ளது. இதனால், தெற்கு ரயில்வே மண்டலத்தில் ரயில்வே வளர்ச்சிப் பணிகள் தேக்கம் அடையும
சென்னை, ஏப். 20: அகலப் பாதைப் பணிகளை நிறைவேற்ற பணப் பத்திரங்கள் மூலம் தேவையான நிதியை திரட்ட ரயில்வேத் துறை திட்டமிட்டுள்ளது. இதனால், தெற்கு ரயில்வே மண்டலத்தில் ரயில்வே வளர்ச்சிப் பணிகள் தேக்கம் அடையும் நிலை உருவாகியுள்ளது.
நாடு முழுவதும் இந்த ஆண்டில் புதிய ரயில்வே வழித்தடங்களை ஏற்படுத்த, ரூ. 9,583 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே மண்டலத்தில் மட்டும் இந்த ஆண்டு ரூ. 734 கோடி மதிப்பீட்டிலான அகலப் பாதைப் பணிகளுக்கு (புதிய அகலப் பாதை உள்பட) அனுமதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, ரூ.539 கோடியில் 2-வது அகலப் பாதைப் பணிகளை நிறைவேற்றவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
எனினும், தமிழகத்தில் அகலப் பாதை திட்டப் பணிகளுக்கு கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும் என்று தெற்கு ரயில்வே கோரியுள்ளது. ஆனால், ரயில்வே பட்ஜெட்டில் அகலப் பாதைத் திட்டங்களுக்கு தேவைப்படும் ரூ. 10 ஆயிரம் கோடி நிதி பணப் பத்திரங்கள் மூலம் திரட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது, கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் ரயில்வே பட்ஜெட் அறிவிப்புகள் நடைமுறைக்கு வந்துள்ளன. இதன்படி பணப் பத்திரங்களை ரயில்வே வாரியம் விரைவில் வெளியிடும் என்று தெரியவந்துள்ளது.
ரயில்வேயின் பொதுத்துறை நிறுவனமான இந்திய ரயில்வே நிதிக் கழகம் ஆண்டுதோறும் ரயில்வே வேகன்கள், என்ஜின்கள், பெட்டிகளை ஐ.சி.எஃப். உள்ளிட்ட பல்வேறு துணை நிறுவனங்களிடம் வாங்கி (ரோலிங் ஸ்டாக்) ரயில்வேத் துறைக்கு அவற்றை குத்தகைக்கு வழங்கும். கடந்த ஆண்டில் ரூ. 9,000 கோடி அளவுக்கு இதன் மூலம் நிதி திரட்டப்பட்டுள்ளது.
தமிழக ரயில்பாதை திட்டங்கள்: இதே போல இந்த ஆண்டு ரயில்வே வரலாற்றில் முதல் முறையாக பணப் பத்திரங்களை வெளியிட்டு, அதன் மூலம் கிடைக்கும் நிதியில் இருந்து அகலப் பாதைப் பணிகளை நிறைவேற்ற ரயில்வேத் துறை திட்டமிட்டுள்ளது.
ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள அகலப் பாதை திட்டப் பணிகள் மற்றும் அதற்கான நிதி ஒதுக்கீடு குறித்த விவரம் ரயில்வேயின் பிங்க் புத்தகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விவரம் (நிதி ஒதுக்கீடு கோடி ரூபாயில்):
புதிய அகலப் பாதைகள்: கரூர்- சேலம் (சேலம்-மேட்டூர் 2-வது அகலப் பாதை)- 30.
திண்டிவனம்- செஞ்சி- திருவண்ணாமலை (70 கிலோ மீட்டர்) 30.
திண்டிவனம்-நகரி (179 கிலோ மீட்டர்)- 71.
அத்திப்பட்டு- புத்தூர் (88 கிலோ மீட்டர்)- 7.
ஈரோடு- பழனி (91 கிலோ மீட்டர்)- 33.
சென்னை- கடலூர் வழி மாமல்லபுரம் (179 கிலோ மீட்டர்)- 7.
அகலப் பாதை மாற்றப் பணிகள்: நாகப்பட்டினம்-வேளாங்கண்ணி-திருத்துறைப் பூண்டி- 10.
கொல்லம்- திருநெல்வேலி- திருச்செந்தூர்- தென்காசி- விருதுநகர்- 75.
மதுரை- ராமேசுவரம் (161 கிலோ மீட்டர்)- 25.
தஞ்சாவூர்- விழுப்புரம் (192 கிலோ மீட்டர்)- 10.
கடலூர்- சேலம் (விருத்தாசலம் வழி-191 கிலோ மீட்டர்)- 10.
திருச்சி-மயிலாடுதுறை (150 கி.மீ)- 1.
விழுப்புரம்- காட்பாடி (161 கி.மீ.)-10.
மானாமதுரை- விருதுநகர் (66 கி.மீ.)- 10.
திண்டுக்கல்-பொள்ளாச்சி- பாலக்காடு மற்றும் பொள்ளாச்சி- கோயம்புத்தூர்
(224 கிலோ மீட்டர்)- 150.
நீடாமங்கலம்-மன்னார்குடி, மண்னார்குடி- பட்டுக்கோட்டை- 150.
மதுரை- போடிநாயக்கனூர் (90)- 15.
2-வது, 3-வது அகலப்பாதை திட்டங்கள்: அத்திப்பட்டு-கொருக்குப்பேட்டை (3-வது அகலப்பாதை)- 5.50.
சென்னை கடற்கரை- கொருக்குப்பேட்டை (3-வது அகலப் பாதை)- 75.
சென்னை கடற்கரை- அத்திப்பட்டு (4-வது அகலப் பாதை)- 62.
மதுரை திண்டுக்கல் (அம்பாத்துறை- கொடைக்கானல் சாலை)- 41.
செங்கல்பட்டு- விழுப்புரம் (தாம்பரம்-செங்கல்பட்டு 3-வது அகலப் பாதை உள்பட)- 100.
விழுப்புரம்- திண்டுக்கல் (மின்மயமாக்கல் உள்பட)- 150.
திருவள்ளூர்- அரக்கோணம் 4-வது அகலப்பாதை-1.
ஓமலூர்- மேட்டூர் அணை 2-வது அகலப் பாதை (மின் மயமாக்கல் உள்பட)-2.
இந்நிலையில், பண பத்திரம் மூலம் நிதி திரட்டும் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு மட்டும் ரூ. 10 ஆயிரம் கோடி திரட்ட நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கு வரும் ஆண்டுகளில் மேலும் அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து டி.ஆர்.இ.யூ. ரயில்வே தொழிற்சங்கத்தின் செயல் தலைவர் ஆர். இளங்கோவன் புதன்கிழமை கூறியதாவது:
பணப் பத்திரங்கள் மூலம் நிதியை திரட்டி, அதை ரயில்வே நிதிக் கழகத்திடம் இருந்து ரயில்வே வாரியம் பெற்று பின் அந்த நிதியை, அந்தந்த மண்டல கட்டுமானப் பிரிவு அல்லது ரயில் விகாஸ் நிகம் நிறுவனம் (ஆர்.வி.என்.எல்.) ஆகியவற்றுக்கு வழங்க பல மாதங்கள் தாமதம் ஏற்படும் எனத் தெரியவந்துள்ளது.
அதுவரை, அகலப் பாதை உள்ளிட்ட திட்டப் பணிகளை பகுதி, பகுதியாக நிறைவேற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு பணம் வழங்குவதிலும் சிக்கல் ஏற்படும். இதனால், வரையறுக்கப்பட்ட திட்ட காலத்துக்குள் பணிகளை நிறைவேற்றுவதிலும் தேக்கம் ஏற்பட்டு திட்டச் செலவு பல மடங்கு உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திட்டப் பணிகள் பாதிக்கப்படாது: பணப் பத்திரம் வெளியிடும் திட்டத்தை ரயில்வே வாரியம் மேற்கொள்ளும். எனினும், தமிழகத்தில் அகலப் பாதை திட்டப் பணிகளுக்கு இந்த ஆண்டு ரூ. 1,500 கோடி நிதியை ரயில்வே துறை அனுமதித்துள்ளது. எனவே, நிதி பற்றாக்குறையால் அகலப் பாதைப் பணிகள் பாதிக்கும் வாய்ப்பு இல்லை என்று தெற்கு ரயில்வே தலைமை நிர்வாக அதிகாரி ஆர். ராமநாதன் புதன்கிழமை தெரிவித்தார்.