மழைக் காலத்தில் உபரிநீரைச் சேமிக்க தேவை தடுப்பணைகள்!
அம்பாசமுத்திரம்: மழைக் காலத்தில் தாமிரபரணி ஆற்றில் வீணாகும் உபரிநீரை சேமித்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்குப் பயன்படுத்தும் வகையில் புதிய அணைகள், தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை
அம்பாசமுத்திரம்: மழைக் காலத்தில் தாமிரபரணி ஆற்றில் வீணாகும் உபரிநீரை சேமித்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்குப் பயன்படுத்தும் வகையில் புதிய அணைகள், தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாமிரபரணி ஆறு மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள பொதிகை மலையில் பூங்குளம் என்ற இடத்தில் உற்பத்தியாகி திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டப் பகுதி வழியாக 120 கி.மீ. பயணம் செய்து கடலில் கலக்கிறது. இவ்விரு மாவட்டங்களில் தாமிரபரணி ஆற்றுப் பாசனத்தில் 2.55 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவமழைக் காலங்களில் நீர்வரத்து இருப்பதால் தாமிரபரணி வற்றாத ஜீவநதியாக திகழ்கிறது.
தாமிரபரணி நதியின் குறுக்கே பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த அணைகளில் இருந்து பாசனம், குடிநீர் தேவைக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது.
வீணாகும் தண்ணீர்: மழைக் காலங்களில் தாமிரபரணி நதியில் இருந்து 13,800 மில்லியன் கனஅடி நீர் வீணாக கடலில் கலப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
வீணாகும் நீரை வறட்சியானப் பகுதிக்குத் திருப்பிவிடும் வகையில் ரூ.369 கோடி மதிப்பீட்டில் வெள்ளநீர்க் கால்வாய் திட்டப் பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன. இருப்பினும், மேலும் பல தடுப்பணைகளைக் கட்டினால், தண்ணீரை வீணாக்காமல் முழுமையாகப் பயன்படுத்த முடியும்.
இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழையால் சேர்வலாறு, கடனாநதி, ராமநதி அணைகள் நிரம்பிவிட்டன. பாபநாசம் அணையிலும் நீர்மட்டம் 140 அடியை எட்டியுள்ளது. இந்த அணைகளில் இருந்து உபரிநீர் ஆற்றில் திறந்துவிடப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி தாமிரபரணி ஆற்றில் பாபநாசம் அணையில் இருந்து 1,585 கனஅடியும், சேர்வலாறு அணையில் இருந்து மின் உற்பத்திக்காக திறக்கப்படும் சுமார் 1,000 கனஅடியும் உபரியாக தாமிரபரணி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. பாபநாசம் கீழ்அணைப் பகுதியில் பெய்யும் மழையின் மூலம் கிடைக்கும் நீரும் ஆற்றில்தான் கலக்கிறது.
புதிய அணை கட்டப்படுமா? தாமிரபரணி ஆற்றில் வீணாகும் நீரை சேமித்துவைத்து பாசனம், குடிநீர்த் தேவைக்கு பயன்படுத்தும் வகையில் தடுப்பணைகள் கட்ட வேண்டும்; நீர் ஆதாரம் அதிகம் உள்ள பகுதியில் புதிதாக அணைகள் கட்ட வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சிகள், விவசாயிகள், பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
பாபநாசம் அருகே மலையடிவாரத்தில் அனவன்குடியிருப்புப் பகுதியில் கோரையாற்றின் குறுக்கேயும், கல்லிடைக்குறிச்சி அருகே பொட்டல் கிராமத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவில் மலையடிவாரத்தில் எலுமிச்சையாற்றின் குறுக்கேயும் அணை கட்டலாம் என திட்டமிடப்பட்டது. ஆனால், ஆரம்பகட்ட பணிகள்கூட தொடங்கப்படவில்லை.
மழைக் காலங்களில் பாபநாசம், சேர்வலாறு அணைகள் விரைவில் நிரம்புகின்றன. ஆனால் மணிமுத்தாறு அணை எளிதில் நிரம்புவதில்லை. எனவே, வீணாகும் நீரை பாபநாசம் கீழ்அணை வழியாக மணிமுத்தாறு அணைக்குத் திருப்பிவிடும் வகையில், டணல் (சுரங்கம்) அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது.
கோடைக்காலத்தில் தண்ணீருக்காக திண்டாடுவதைத் தவிர்க்க, இப்படி தடுப்பணைகள், புதிய அணைகள் கட்டி மழைவளத்தை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பு.