மகளிர் ஆணைய உறுப்பினர்கள் நியமனம் எப்போது?
சென்னை: தமிழ்நாடு மகளிர் ஆணைய உறுப்பினர்களை உடனடியாக நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் மகளிர் நலனைப் பாதுகாக்கவும், பண்புணர்வு குறித்த ம
சென்னை: தமிழ்நாடு மகளிர் ஆணைய உறுப்பினர்களை உடனடியாக நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் மகளிர் நலனைப் பாதுகாக்கவும், பண்புணர்வு குறித்த மகளிர் நிலையை உயர்த்தவும் தேவைப்படும் நடவடிக்கைகளை அரசுக்குப் பரிந்துரைக்க தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் 1993, மார்ச் 19-ம் தேதி தொடங்கப்பட்டது.
அதிகாரங்கள்: பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகளில் இருந்து அவர்களுக்குப் பாதுகாப்பு கொடுப்பது, விசாரணை செய்வது, நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்டவர்களுக்குப் பரிந்துரைப்பது ஆகியன இந்த ஆணையத்தால் மேற்கொள்ளப்படுகின்றன.
அதோடு கல்வி, வேலைவாய்ப்பு, இட ஒதுக்கீடு போன்றவற்றில் பெண்களின் பங்கேற்பு குறித்து ஆலோசனை வழங்குவது, பெண்கள் சிறைச்சாலைகள், மகளிருக்கான இல்லங்கள், குழந்தைகள் காப்பகங்களைப் பார்வையிட்டு அரசுக்கு அறிக்கை அனுப்புவது போன்ற பணிகளிலும் இந்த அமைப்பு ஈடுபட்டு வருகிறது.
Advertisement
நியமனம்: ஒவ்வொரு முறை புதிய அரசு அமையும்போதெல்லாம், இந்த அமைப்புக்கான தலைவி மற்றும் உறுப்பினர்களை புதிதாகத் தேர்வு செய்வது வழக்கம். இந்தமுறை அதிமுக அரசு பொறுப்பேற்றதும், தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவியாக சரஸ்வதி ரங்கசாமி, செப்டம்பர் 30-ம் தேதி நியமிக்கப்பட்டார். ஆனால் இதுவரை உறுப்பினர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை. மொத்தம் உள்ள 9 உறுப்பினர்களில், 2 எம்எல்ஏக்கள், ஒரு ஐஏஎஸ் அதிகாரி, ஐபிஎஸ் அதிகாரி, சமூக சேவகர், வழக்குரைஞர், கல்வியாளர் என 7 பேரை அரசு நியமிக்கும். இதன் உறுப்பினர் செயலராக சமூக நலத்துறை இயக்குநரும், இதன் உறுப்பினராக சமூக நலத்துறைச் செயலரும் இருக்கின்றனர். இதில் சமூக நலத்துறை அதிகாரிகள் இருவர் தவிர மற்ற 7 பேர் இதுவரை அறிவிக்கப்படவில்லை. கடந்த இரு மாதங்களாக உறுப்பினர்கள் இன்றி, தலைவி சரஸ்வதி ரங்கசாமி மட்டும் பணியாற்ற வேண்டிய சூழல் இருக்கிறது. இதனால் மகளிர் ஆணையப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டிருக்கிறது.
பணிகள் தாமதம்: பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள், வரதட்சணைக் கொடுமைகள், சொத்துத் தகராறு எனப் பல்வேறு பிரச்னைகள் குறித்து விசாரிப்பது, கவுன்சலிங் நடத்துவது போன்ற பணிகளை இப்போது தலைவி சரஸ்வதி ரங்கசாமி மட்டுமே செய்து வருகிறார்.
2006 முதல் 2010 வரை பெறப்பட்ட 6,598 மனுக்களில் 3,204 மனுக்களுக்கு மட்டுமே தீர்வு காணப்பட்டுள்ளன. 2011-ல் பெறப்பட்ட 955 மனுக்களில் சில மனுக்கள் மட்டுமே தீர்க்கப்பட்டிருக்கின்றன. பெண் கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வுப் பணிகள், ஆலோசனைக் கூட்டங்கள் ஆகியவற்றை நடத்த முடியவில்லை. பணியிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் வன்கொடுமை குறித்து 2 புகார்கள் வந்துள்ளன. உறுப்பினர்கள் இல்லாததால், அவை பற்றி விசாரணை நடத்த சிறப்புக் குழு அமைக்க முடியாத சூழல் இருப்பதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் மகளிர் ஆணையத் தலைவிக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குவதும், பெண்கள் அளிக்கும் மனுக்களில் சட்டச் சிக்கல்கள் இருந்தால் அது தொடர்பாக விவாதித்து நிவர்த்தி செய்வதும் உறுப்பினர்களின் முக்கியப் பணி. கடந்த இரு மாதங்களாக உறுப்பினர்கள் இல்லாததால், இந்தப் பணிகள் மெதுவாகவே நடந்து வருகின்றன.எனவே மகளிர் ஆணைய உறுப்பினர்களை நியமிக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முதல்வர் முடிவெடுப்பார்...
இது குறித்து மகளிர் ஆணையத் தலைவி சரஸ்வதி ரங்கசாமி கூறியது:
மகளிர் ஆணையத்துக்கு என்னை தலைவியாக முதல்வர் ஜெயலலிதா நியமித்தது முதல், தொடர்ந்து வாரத்துக்கு இரு முறை வெளியூர்களுக்குச் சென்று, நிலுவையில் உள்ள மனுக்கள் மீது விசாரணை நடத்தி வருகிறேன். கரூரில் 2008 முதல் 2010 வரை நிலுவையில் இருந்த 27 மனுக்களை விசாரித்து, அதில் 25க்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அதேபோல, நாமக்கல்லில் 13 மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டத்தில் 7 மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுளளது. மனைவி கொடுமைப்படுத்துவதாக இரு ஆண்கள், தமிழ்நாடு மகளிர் ஆணையத்தில் மனு அளித்துள்ளனர். அது தொடரபாக கவுன்சிலிங் நடத்தவுள்ளேன்.
உறுப்பினர்கள் இல்லை என்ற குறையின்றித் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். உறுப்பினர்களை நியமிப்பது பற்றி முதல்வர்தான் முடிவெடுப்பார் என்றார்.