சென்னை சங்கமம்: அரசு விளம்பரத்தில் தமிழ் மையத்தின் பெயர் கூடாது- உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை, ஜன. 8: சென்னை சங்கமம் கலை விழா தொடர்பாக அரசு செய்யும் விளம்பரத்தில் தமிழ் மையத்தின் பெயர் இடம் பெறக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. விசாரணைக்குள்ளான தமிழ் மையத்துடன் இணைந்து
சென்னை, ஜன. 8: சென்னை சங்கமம் கலை விழா தொடர்பாக அரசு செய்யும் விளம்பரத்தில் தமிழ் மையத்தின் பெயர் இடம் பெறக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
விசாரணைக்குள்ளான தமிழ் மையத்துடன் இணைந்து சென்னை சங்கமம் கலை விழாவை தமிழக அரசு நடத்துவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கூறி வழக்கறிஞர் புகழேந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, உயர் நீதிமன்றம் ஏற்கெனவே கோரியபடி, அரசு தனது விளக்கத்தை அளித்தது.
அதில் கூறியிருப்பது:
இந்த ஆண்டு நடைபெறவுள்ள சென்னை சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்கும் கலைஞர்களுக்கு சம்பளம் வழங்க ரூ.67 லட்சம்; அது தொடர்பாக விளம்பரம் செய்ய ரூ.33 லட்சம் என ரூ.1 கோடியை வழங்க வேண்டும் என்று சுற்றுலாத் துறை அரசு செயலருக்கு திட்ட வரைவு அளித்துள்ளது. தனியார் அறக்கட்டளையான தமிழ் மையம், சென்னை சங்கமம் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கான கலைக் குழுக்களைத் தேர்வு செய்யும் பணியைச் செய்கிறது. இந்த மையத்துக்கும், அரசுக்கும் பண பரிவர்த்தனை எதுவும் கிடையாது. கலைஞர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்துக்கு அவர்களிடமிருந்து நேரடியாக ரசீது பெறப்படும். நிகழ்ச்சி தொடர்பாக சுற்றுலாத் துறை விளம்பரம் செய்யும். திறந்தவெளியில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த நிகழ்ச்சி தனியார் அமைப்புக்குக் கொடுக்கப்பட்டுவிட்டது என்பது தவறு என்று விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பது:
அரசுக்கும் தமிழ் மையத்துக்கும் இடையே எந்தவிதப் பண பரிவர்த்தனையும் இல்லை. அரசு செய்யும் விளம்பரத்தில் அந்த மையத்தின் பெயர் பயன்படுத்தப்பட மாட்டாது என்று அரசு அளித்த விளக்கத்தை நீதிமன்றம் பதிவு செய்து கொள்கிறது. தவிர, சென்னை சங்கமம் சிறப்பாக நடத்தப்பட தமிழ் மையம் தனது பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.