முகப்பு
தமிழ்நாடு

குருமன்ஸ் இன மக்களுக்கு கிடைக்குமா பழங்குடியினச் சான்றிதழ்?

கிருஷ்ணகிரி: பழங்குடியினருக்கான சாதிச் சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கலால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குருமன்ஸ் இன மக்கள் அவதிப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மற்று

Updated On : 20 செப்டம்பர், 2012 at 7:45 AM
பகிர்:
Updated On : 28 டிசம்பர், 2023 at 9:17 PM

கிருஷ்ணகிரி: பழங்குடியினருக்கான சாதிச் சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கலால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குருமன்ஸ் இன மக்கள் அவதிப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் குருமன்ஸ் இனத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். குறிப்பாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேல்சோமார் பேட்டை, ராயக்கோட்டை, தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், தளி ஆகிய பகுதிகளில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரம், ஒகேனக்கல், காரிமங்கலம் போன்ற பகுதிகளில் கணிசமாக உள்ளனர். கன்னடத்தைத் தாய் மொழியாகக் கொண்ட இவர்களது முக்கியத் தொழில் ஆடு மேய்ப்பதாகும். ஆட்டு ரோமங்களைச் சேகரித்து, கம்பளி நெய்தும் விற்கின்றனர்.இப்போது மேய்ச்சல் நிலம் குறைந்து வருவதால், விவசாயம் மற்றும் கூலித் தொழில்களிலும் ஏராளமானோர் ஈடுபட்டு வருகின்றனர்.

குருமர், குரும்பர்,குருபர் என பல பெயர்களில் அழைக்கப்படும் இவர்களுக்கு ஆங்கிலேயர் காலத்தில் குருமன்ஸ் என்ற பொதுப்பெயர் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த இனம் இந்திய அரசின் பழங்குடியினர் பட்டியலில் ( வரிசை எண்: 18) இடம்பெற்றுள்ளது.

Advertisement

ஆனால், தமிழகத்தில் குரும்பா என்ற பெயரில் இவர்களுக்கு மிகவும் பிற்பட்ட பிரிவினருக்கான சான்றிதழே வழங்கப்பட்டு வருகிறது.இதனால், தங்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உரிமைகள் மறுக்கப்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட குருமன்ஸ் நல சங்கத்தின் தலைவர் வி. கணேசன் கூறியது:

ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்டமாக இருந்தபோது, 1989, 1992,மற்றும் 1996-ம் ஆண்டுகளில் குருமன்ஸ் இன மக்களுக்கு பழங்குடியினருக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. இப்போதுதான் மிகவும் பிற்பட்ட பிரிவினருக்கான சான்றிதழ் கொடுக்கப்படுகிறது என்றார். மாவட்ட ஆட்சியர் சி.நா. மகேஸ்வரனிடம் கேட்டபோது, "பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்கான தகுந்த ஆதாரங்களை அளித்தால், குருமன்ஸ் இன மக்களுக்கு பழங்குடியினச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

இது தொடர்பாக, ஒரு குழுவை அமைத்து, தகுதியானவர்களுக்கு பழங்குடியினச் சான்றிதழ் வழங்க மாவட்ட நிர்வாகமும், அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் நாங்கள் சமூக, பொருளாதார நிலையில் உயர வாய்ப்பு ஏற்படும் என்கின்றனர் குருமன்ஸ் மக்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.