பதவி உயர்வின்றி 28 ஆண்டுகளாக பணியாற்றும் சிறைத் துறை காவலர்கள்
லால்குடி,: தமிழக சிறைத் துறையில் பணிபுரியும் இரண்டாம் நிலைக் காவலர்கள் சுமார் 300 பேர் 28 ஆண்டுகளாக பதவி உயர்வு இல்லாமல் பணியாற்றி வருகின்றனர். தமிழகத்தில் 9 மத்திய சிறைகளும், 214 கிளைச் சிறைகளும், 3
லால்குடி,: தமிழக சிறைத் துறையில் பணிபுரியும் இரண்டாம் நிலைக் காவலர்கள் சுமார் 300 பேர் 28 ஆண்டுகளாக பதவி உயர்வு இல்லாமல் பணியாற்றி வருகின்றனர்.
தமிழகத்தில் 9 மத்திய சிறைகளும், 214 கிளைச் சிறைகளும், 3 மகளிர் மத்திய சிறைகளும் உள்ளன. இந்தச் சிறைகளில் 1983-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இரண்டாம் நிலைக் காவலர்களாகப் பணியில் சேர்ந்த 300 பேர் இன்று வரை பதவி உயர்வு இல்லாமல் பணியாற்றி வருவதாகத் தெரிவிக்கின்றனர் சிறைத் துறை ஊழியர்கள்.
தங்களுடன் பணியில் சேர்ந்த காவல் துறையில் பணியாற்றும் அதே நிலை தகுதியுள்ள காவலர்களுக்கு தர ஊதியமாக 4,800 ரூபாயை அரசு வழங்குகிறது. ஆனால், சிறைத் துறை ஊழியர்களுக்கோ தர ஊதியமாக ரூ. 2,800 மட்டுமே வழங்கப்படுகிறது. ஊதிய உயர்வு மட்டுமே அரசு வழங்குகிறது. ஆனால், பதவி உயர்வு என்பது இல்லாமல் இருப்பது ஏனென்று புரியவில்லை என சிறைத் துறை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
பதவி உயர்வு இல்லாமல் இருப்பதால், சிறைத் துறையில் நிர்வாகக் கோளாறு மட்டுமல்லாது, சிறைத் துறையில் உள்ள கீழ் நிலை ஊழியர்களின் அடிப்படை உரிமைகள் பெருமளவில் பாதிக்கப்படுவதாகவும் புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும், இது ஒருபுறமிருக்க மகளிர் சிறையில் கடந்த 10 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வரும் பெண் ஊழியர்களுக்கு தினக் கூலியாக நாள் ஒன்றுக்கு ரூ. 100 மட்டுமே வழங்கி வருகின்றனர். இவர்களுக்கு பணிப் பாதுகாப்புகூட கிடையாது என்றும் கூறப்படுகிறது.
ஒரு சிறையில் ஜெயிலர், உதவி ஜெயிலர், முதல்நிலை தலைமைக் காவலர், தலைமைக் காவலர் ஒருவரும், 8 காவலர்களும் என 12 பேர்
பணியில் உள்ளனர். இது சிறைவாசிகளின் எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது மிகவும் குறைவாகவே உள்ளது.
திருச்சி, மதுரை, சேலம் ஆகிய மத்திய சிறைகளில் டி.ஐ.ஜி. பதவிக்கு அதிகாரியே இல்லை என்ற நிலை கடந்த சில ஆண்டுகளாக உள்ளது என்றும் சிறைத் துறை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட முல்லா கமிஷன் அறிக்கையையும், அதன் பிறகு அமைக்கப்பட்ட இஸ்மாயில் கமிஷன் அறிக்கையையும் செயல்படுத்தினால், சிறைத் துறை ஊழியர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
இந்நிலையில், தற்போது சிறைத் துறையில் 1000 காலிப் பணியிடங்கள் உள்ளன. 500 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர். பயிற்சி முடித்த பிறகு விரைவில் பணியில் சேர உள்ளனர். அதனால், சிறைத் துறையில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், பதவி உயர்வு மட்டும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. எனவே, பதவி உயர்வு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பில் சிறைத் துறை காவலர்கள் உள்ளனர்.