முகப்பு
தமிழ்நாடு

சத்துணவுத் திட்டம் மேம்படுத்தப்பட வேண்டும்

ஆலங்குடி: அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் சத்துணவுத் திட்டத்தை மேம்படுத்த வேண்டும் என மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.  புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி பகுதியில் கிராமப்புற மாணவர்களிடம் பரிசோதனை

Updated On : 28 டிசம்பர், 2023 at 3:49 PM
பகிர்:

ஆலங்குடி: அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் சத்துணவுத் திட்டத்தை மேம்படுத்த வேண்டும் என மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

 புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி பகுதியில் கிராமப்புற மாணவர்களிடம் பரிசோதனை மேற்கொண்டதில், 98 சதவீதம் பேருக்கு ரத்த சோகை, குறைவான எடை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

 இதனால், பள்ளிக்கு வருகை குறைவு, மாணவர்களுக்கு அடிக்கடி மயக்கம் உள்ளிட்டவை ஏற்பட்டு, அவர்களுக்கு படிப்பில் நாட்டம் குறைகிறது. இதற்கு சத்தான உணவு அமையாததே காரணம் என அரசு மருத்துவர் கார்த்திக் தெய்வநாயகம் தெரிவித்தார்.

 1960-ல் அப்போதைய முதல்வர் காமராஜரால் இலவச மதிய உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது.

 பிறகு, இந்தத் திட்டம் படிப்படியாக மேம்படுத்தப்பட்டு, தற்போது அரசு உயர்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் மதிய உணவு வழங்கப்படுகிறது.

 ஆனால், அரசு அளிக்கும் அரிசி, பருப்பு மற்றும் தேவையான உணவுப் பொருள்களைக் கொண்டு சமைக்கப்படும் மதிய உணவும், அதை மாணவர்களுக்கு அளிக்கும் முறையிலும்தான் இந்தத் திட்டம் மழுங்கடிக்கப் படுவதாகக் கூறப்படுகிறது.

 அதாவது, அரிசி, எண்ணெய், பருப்பு, காய்கறி என குறைவான உணவுப் பொருள்களை அரசு வழங்குவதால், மாணவர்களுக்கு உணவைக் குறைத்து வழங்க வேண்டியுள்ளதாகவும், மாணவர்கள் கூடுதலாக உணவு கேட்டால்கூட வழங்க முடியாத சூழல் ஏற்படுவதாகவும் சத்துணவு அமைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயிலும் பள்ளிகளில் போராட்டமான சூழலில்தான் உணவை மாணவர்களால் பெறமுடிகிறது. வரிசையில் இவர்களுக்குள் முந்திச்செல்வதில் போட்டியும் ஏற்படுகிறது.

 ஒரு முறை மட்டுமே வழங்கும் உணவு பெரும்பாலானோருக்கு போதுமானதாக இல்லாத சூழலில், மீண்டும் உணவு வழங்கப்படுவதில்லை. இதனால், மாணவர்களுக்கு உணவு சாப்பிட்ட திருப்தி ஏற்படுவதில்லை. மீண்டும் உணவை வாங்க முயலும் மாணவர்கள் அவமானத்தைச் சந்திக்க வேண்டியுள்ளது.

 ஒரு திட்டத்தை அறிவிப்பதோ, அமல்படுத்துவதோ முக்கியமல்ல. அந்தத் திட்டம் உரியவரிடம் முழுமையாகச் சென்றடையும் போதுதான் முழுமை அடைகிறது. கல்வியால் நாடு வளம் பெற கொண்டு வரப்பட்ட மதிய உணவுத் திட்டத்தை முறைப்படுத்தி வழங்கினால், இந்தத் திட்டம் மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமையும்.

 கோயில்களில் பக்தர்களுக்கு வழங்கும் அன்னதானத்தை மேஜை, நாற்காலி போட்டுத்தான் வழங்க வேண்டும், அவர்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டும் என தமிழக அரசு ஜூன் 28-ம் தேதி உத்தரவிட்டது.

 இந்தத் திட்டம் வரவேற்கக் கூடியதுதான். அதேசமயம், மதிய உணவை நாடும் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மேஜை, நாற்காலி இல்லாவிட்டாலும், உணவுக் கூடத்தை அமைத்து, அதில் அமரவைத்து தரமான சத்தான உணவை பரிமாறினாலே போதும் என மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

 எனவே, மாணவர்களுக்கு மதிய உணவுக்கான தொகையை உயர்த்தியும், உணவு பரிமாறுவதை ஒழுங்குபடுத்தினாலே மதிய உணவுத் திட்டத்தின் நோக்கம் முழுமை அடையும். இதன்மூலம், கல்வியின் தரமும் உயரும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →