முகப்பு
தமிழ்நாடு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாம்பழக் கூழ் உற்பத்தி பாதிப்பு!

கிருஷ்ணகிரி, ஜூன் 13: சிரியா, ஏமன், எகிப்து, லிபியா போன்ற அரபு நாடுகளில் நிலவும் உள்ளாட்டுப் போரால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாம்பழக் கூழ் உற்பத்தி குறைந்துள்ளது. இதனால், மாம்பழ விலையும் குறைந்து, வி

Updated On : 20 செப்டம்பர், 2012 at 8:07 AM
பகிர்:
Updated On : 28 டிசம்பர், 2023 at 11:19 PM

கிருஷ்ணகிரி, ஜூன் 13: சிரியா, ஏமன், எகிப்து, லிபியா போன்ற அரபு நாடுகளில் நிலவும் உள்ளாட்டுப் போரால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாம்பழக் கூழ் உற்பத்தி குறைந்துள்ளது. இதனால், மாம்பழ விலையும் குறைந்து, விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

 கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 40 ஆயிரம் ஏக்கரில் மா சாகுபடி செய்யப்படுகிறது. ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்துக்கு அடுத்தபடியாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட மாம்பழ கூழ் உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளன.

 இந்தியாவில் உற்பத்தியாகும் 4 லட்சம் டன் மாம்பழ கூழில், 2.5 லட்சம் டன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து சுமார் 1 லட்சம் டன் மாம்பழ கூழ் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.

Advertisement

 இவற்றில் 60 சதவீதம் ஏமன், சிரியா-வுக்கும், 20 சதவீதம் ஜப்பான், ஐரோப்பா-வுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. இதன் மூலம் ரூ.300 கோடி அன்னியச் செலாவணியும் கிடைத்தது.

 இந்தாண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாம்பழ கூழ் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

 இதுகுறித்து 20 ஆண்டுகளாக மாம்பழக் கூழ் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனநிர்வாக இயக்குநர் ஜி.வெங்கடசாமி கூறியது:

 ஜப்பான் நிலநடுக்கம், அரபு நாடுகளில் நிலவும் உள்ளாட்டு போர் போன்றவை மாம்பழ கூழ் உற்பத்தியாளர்களுக்கு சாதகமாக இல்லை. போரால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து மாம்பழக் கூழ் ஏற்றுமதிக்கான ஆர்டர்கள் போதிய அளவு கிடைக்கவில்லை. ஆர்டர்கள் கிடைத்தாலும், குறைந்த விலைக்குக் கேட்கின்றனர்.

 கடந்தாண்டு ரூ.800-க்கு விலைபோன ஒரு காட்டன் (3 லிட்டர் கொள்ளளவு கொண்ட 6 டின்கள் கொண்ட ஒரு பெட்டி), இப்போது ரூ.500-க்கும் குறைவாக விலைபோகிறது. இதனால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

 கடந்தாண்டு இறுதியிலேயே, வெளிநாட்டுச் சந்தையில் மாம்பழக் கூழ் விலை குறைந்ததால், 10 சதவீத மாம்பழக் கூழ் ஏற்றுமதி செய்யாமல் கிடங்குகளிலேயே தேங்கிக் கிடக்கின்றன.

 இதனால், வங்கியில் பெற்ற கடனை திருப்பிச் செலுத்த முடியாமலும், மீண்டும் வங்கிகளில் கடன் பெற்று உற்பத்தியைத் தொடங்க முடியாமலும் கிருஷ்ணகிரி மாவட்ட மாம்பழக் கூழ் உற்பத்தியாளர்கள் தவித்து வருகின்றனர். அரபு நாடுகளில் அமைதியான சூழல் நிலவினால்தான் மாம்பழக் கூழ் ஏற்றுமதிக்கான வாய்ப்பு அதிகரிக்கும் என்றார் அவர்.

 விவசாயிகள் பாதிப்பு: நடப்பாண்டு மாம்பழ உற்பத்தி அதிகளவில் இருப்பதாலும், மாம்பழக் கூழ் உற்பத்தி குறைந்துள்ளதாலும் மாம்பழங்களின் விலை 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது.

 ஒரு டன் மாம்பழம் குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரத்துக்கு விற்றால்தான் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச வருவாய் கிடைக்கும். கடந்தாண்டு ரூ.13 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட ஒரு டன் மாம்பழம் இந்தாண்டு ரூ.4 ஆயிரத்துக்கும் குறைவாக விற்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் பலர் மாம்பழங்களை அறுவடை செய்யாமலேயே உள்ளனர்.

 இதேநிலை தொடர்ந்தால் வயிற்றுப் பிழைப்புக்குக்கூட மற்றவர்களிடம் கையேந்த வேண்டிய நிலை ஏற்படும் என்றனர் கிருஷ்ணகிரி மாவட்ட மா விவசாயிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.