தமிழ்நாடு

ஆசிரியர் பற்றாக்குறையால் அவதியுறும் அரசு ஹோமியோபதி கல்லூரி மாணவர்கள்

மதுரை, மார்ச் 8: மதுரை திருமங்கலம் அரசு ஹோமியோபதி கல்லூரியில் மருத்துவப் பேராசிரியர்கள் பற்றாக்குறையால் மாணவர்கள் அவதியுறும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 8 மாதங்களாக மருத்துவ ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க

ஜெயப்பாண்டி

மதுரை, மார்ச் 8: மதுரை திருமங்கலம் அரசு ஹோமியோபதி கல்லூரியில் மருத்துவப் பேராசிரியர்கள் பற்றாக்குறையால் மாணவர்கள் அவதியுறும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 8 மாதங்களாக மருத்துவ ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது.

ஆசிரியர் பற்றாக்குறை, விடுதி வசதியின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு இடையே மருத்துவத் தேர்வு மையமாகச் செயல்பட்ட நிலையும் இப்போது பறிபோயிருப்பதாக மாணவர்களும், மருத்துவப் பேராசிரியர்களும் கூறுகின்றனர்.

நமது நாட்டில் சித்த மற்றும் அலோபதி மருத்துவத்துக்கு இணையாக ஹோமியோபதி மருத்துவத்திலும் சிகிச்சை பெற மக்கள் விரும்புகின்றனர். ஜெர்மனி நாட்டு மருத்துவ முறையை அடிப்படையாகக் கொண்ட ஹோமியோபதி மருத்துவத்துக்கு வரவேற்பு இருப்பதால் அதற்கான மருத்துவ சிகிச்சை மையங்கள் மாவட்டத் தலைநகரங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் முதன்முதலாக 1975 செப்டம்பரில் அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி சென்னையில் தொடங்கப்பட்டது. இதில் 22 மாணவர்கள் சேர்ந்தனர்.

1982-ஆம் ஆண்டு மதுரை மாவட்டம் திருமங்கலத்துக்கு மருத்துவக் கல்லூரி இடமாற்றம் செய்யப்பட்டது. திருமங்கலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்ட இக்கல்லூரிக்கு 2000 ஆம் ஆண்டில் திருமங்கலம் அருகே கண்மாய் பகுதியில் 20 ஏக்கருக்கும் மேலாக நிலம் ஒதுக்கப்பட்டு கட்டடம் கட்டப்பட்டது.

இப்போது ஆண்டுக்கு 50 மாணவ, மாணவியர் இதில் சேர்க்கப்படுகின்றனர். மொத்தத்தில் 300 மாணவ, மாணவியர் படித்துவருகின்றனர். இதில் மாணவியரே அதிகம். கல்லூரியில் 12 பாடப்பிரிவுகள் உள்ளன. ஆனால், நிரந்தரப் பணியில் மருத்துவப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் இல்லை. மொத்தம் 13 பேராசிரியர்கள் இருக்கவேண்டிய இடத்தில் 3 தாற்காலிகப் பேராசிரியர்கள் மட்டுமே உள்ளனர். அதில் ஒருவர் கல்லூரி முதல்வர் பொறுப்பையும் கவனித்துவருகிறார். இணைப் பேராசிரியர்கள் இல்லை. இப்போது 8 விரிவுரையாளர்கள் கணக்கு காட்டப்படும் நிலையில், அதில் 6 பேர் நீண்ட மருத்துவ விடுப்பில் சென்றதாகவும் கூறப்படுகிறது. இரண்டு விரிவுரையாளர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். இவர்களைத் தவிர, உதவி மருத்துவப் பயிற்றுநர்கள் 4 பேர் உள்ளனர்.

அகில இந்திய மருத்துவக் குழு விதிமுறைப்படி 43 மருத்துவ ஆசிரியர்கள் இருக்கவேண்டிய கல்லூரியில் இப்போது 9 பேர் மட்டுமே உள்ளனர். இதில் பேராசிரியர், விரிவுரையாளர்களுக்கு கடந்த 8 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் புகார் எழுந்துள்ளது.

கல்லூரியில் உடற்கூறியல் துறைக்கான பதப்படுத்தப்பட்ட மனித உடல் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் வேலூரில் இருந்து வாங்கப்பட்டது. அந்த உடல் சிதைந்த நிலையில், அதன் மூலம் மாணவர்கள் செயல்முறைப் பயிற்சி பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மழைக்காலங்களில் கல்லூரியை மழைநீர் சூழ்ந்துவிடுவதால் பெரும்பாலான நாள்கள் வகுப்புகள் நடத்தப்படுவதில்லை. மாணவியர் விடுதியில் 64 பேர் உள்ளனர். விடுதியில் இரு மோட்டார் பம்ப்பில் இப்போது ஒன்று மட்டுமே இயங்குகிறது. இதனால் போதிய நீரைப் பெறமுடியவில்லை.

மூன்று தளம் உடைய விடுதியில் ஒவ்வொரு தளத்திலும் 7 அறைகள் உள்ளன. ஆனால் ஒவ்வொரு தளத்திலும் 3 கழிப்பறைகளே உள்ளன. விடுதியில் 34 மாணவியருக்கு படுக்கை வசதியே இல்லை. சுற்றுச்சுவர் இல்லாததால் மாணவியருக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. மாணவர்óக்கான விடுதி இல்லை. இதனால் தங்கிப் படிக்க வாடகை வீடு தேடி மாணவர்கள் அலைந்துவருகின்றனர்.

ஆன்-லைன் தேர்வு எழுதும் வசதியை உடைய நூலக கட்டடம் இக்கல்லூரியில் உள்ளது. இக்கல்லூரி விரிவுரையாளர்கள் 2 பேர் சென்னையில் தேர்வுக்கான பயிற்சியும் பெற்றுள்ளனர். ஆனால், கடந்த ஆண்டு வரை கல்லூரி வளாகத்திலே நடத்தப்பட்ட தேர்வானது, நடப்பாண்டில் மதுரை மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் மாணவ, மாணவியர் வாடகை வேன் பிடித்து தேர்வுக்குச் சென்றுவருகின்றனர். ஆனால், சமீபத்தில் கிராம நிர்வாக அலுவலர் தேர்வு இக்கல்லூரியிலேயே நடத்தப்பட்டது.

தமிழகத்தில் உள்ள ஒரே அரசு ஹோமியோபதி கல்லூரிக்கு போதிய மருத்துவப் பேராசிரியர்களை நியமிப்பதுடன், அவர்களுக்கு உரிய ஊதியத்தையும் வழங்கி மருத்துவக் கல்லூரியை தொடர்ந்து சிறப்பாக நிர்வகிக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

SCROLL FOR NEXT