முகப்பு
தமிழ்நாடு

நெல் வயலிலும் மீன் வளர்க்கலாம்

அரக்கோணம்: நெல் வயலில் மீன் வளர்த்து இரட்டிப்பு லாபம் பெறலாம் என தமிழக அரசு வேளாண் துறை நெமிலி வட்டார உதவி இயக்குநர் ஒய். முகமது முபாரக் தெரிவித்துள்ளார்.  நெல் வயலில் மீன் வளர்ப்பதால் குறைந்த பரப்புள

Updated On : 22 ஜூலை, 2025 at 10:05 AM
பகிர்:

அரக்கோணம்: நெல் வயலில் மீன் வளர்த்து இரட்டிப்பு லாபம் பெறலாம் என தமிழக அரசு வேளாண் துறை நெமிலி வட்டார உதவி இயக்குநர் ஒய். முகமது முபாரக் தெரிவித்துள்ளார்.

 நெல் வயலில் மீன் வளர்ப்பதால் குறைந்த பரப்புள்ள நிலத்திலேயே நமக்கு அதிக லாபம் கிடைக்கிறது. கூலி ஆட்களின் தேவை குறைகிறது. அறுவடை முடிந்த பின்னும் வருமானம் கிடைக்கிறது.

 வயலை தயார் செய்தல்:

 வட்ட வடிவ குழிகள் தோண்டி கரைகள் கட்ட வேண்டும். குளம் போன்று உருவாக்கிய பின் அதில் ஹெக்டேருக்கு 10 ஆயிரம் வரை மீன்குஞ்சுகளை விட வேண்டும். அவற்றிற்கு உணவாக அரிசி, உமி, புண்ணாக்கு ஆகியவற்றை மீனின் உடல் எடைக்கு ஏற்றவாறு அளிக்கலாம்.

 நெல் ரகங்கள்:

 மீன் வளர்ப்புக்கு ஏற்ற நெல் ரகங்களான பனிதன், துளசி, சி.ஆர்.260, 77 போன்ற நெல் ரகங்களை தேர்வு செய்ய வேண்டும்.

 நெல் வயலில் மீன் வளர்ப்பு இரு முறைகளில் செய்யப்படுகிறது. 1. சம காலத்தில் இரண்டையும் வளர்த்தல். 2.சுழற்சி முறை வளர்ப்பு.

 சமகால வளர்ப்பு முறை: 0.1 ஹெக்டேர் பரப்பளவு நிலமே போதுமானது. நெல் வயல்களில் மேக்ரோ பிராக்சியம் ரோசன் பெர்ஜி என்ற இறால் வகைகளை வளர்க்கலாம். மீன்களைப் போலன்றி இறால் வளர்ப்புக்கு 4 மாதத்துக்கு, 12 செ.மீ. ஆழத்திற்கு சல்லடைத்தடுப்பு அமைத்து பாதுகாக்க வேண்டும். நாற்று நட்டு வேர்பிடித்தபின் ஒரு ஹெக்டேருக்கு 2-3 செ.மீ. அளவுடைய ஆயிரம் குஞ்சுகளை விட வேண்டும்.

 சுழற்சி முறை: இம்முறையில் மீன் மற்றும் நெல் அடுத்தடுத்து பயிர் செய்யப்படுகிறது. நெற்பயிரை அறுவடை செய்த பின் அவ்வயல் மீன் வளர்க்கும் குளமாக மாற்றப்படுகிறது. இம்முறையில் பயிர்களுக்கு களைக்கொல்லி மற்றும் பூச்சி கொல்லிகளைப் பயன்படுத்துதல் இயலும். அதோடு மீன்களுக்கு தேவையான அளவு 60 செ.மீ. வரை நீரின் ஆழத்தைப் பராமரிக்க இயலும்.

 நெல் அறுவடை முடிந்த ஓரிரு வாரங்களில் வயலை மீன் வளர்ப்புக்குத் தயார் செய்ய வேண்டும். கெண்டை இன மீன் வகைகள் இம்முறைக்கு மிகவும் ஏற்றவை. 2-3 செ.மீ. அளவுள்ள நுண்குஞ்சுகளாக இருப்பின் ஹெக்டேருக்கு 20 ஆயிரம் குஞ்சுகளும், விரல் அளவு குஞ்சுகளாக இருப்பின் ஹெக்டேருக்கு 6 ஆயிரம் குஞ்சுக்களும் விட வேண்டும்.

 வண்டல் களிமண் மீன் மற்றும் இறால் வளர்ச்சிக்கு மிகவும் ஏற்றது. நல்ல மழை பெய்த பின் மீன் வளர்த்தல் நல்லது. காரணம் நீரின் உப்புத்தன்மை குறைந்திருக்கும்.

 அறுவடை: 10 வாரங்களுக்குப் பிறகு மீனை அறுவடை செய்யலாம். மீன்களை கைகளால் பிடித்தோ அல்லது நீரை வடித்தோ அறுவடை செய்யலாம். பிடிக்கப்பட்ட இறால்களை ஐஸ் பெட்டிக்குள் வைத்து சந்தைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.