தமிழ்நாடு

ஆனைமடுவு அணை சுற்றுலாத் தலமாக்கப்படுமா?

சேலம்: சேலம் மாவட்டம், பேளூர் அருகேயுள்ள ஆனைமடுவு அணையை மேம்படுத்தி சுற்றுலாத்தலமாக அறிவிக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். சேலத்தில் இருந்து இருந்து சுமார் 35 கி

க. தங்கராஜா

சேலம்: சேலம் மாவட்டம், பேளூர் அருகேயுள்ள ஆனைமடுவு அணையை மேம்படுத்தி சுற்றுலாத்தலமாக அறிவிக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேலத்தில் இருந்து இருந்து சுமார் 35 கி.மீ. தொலைவில் உள்ள குறிச்சி பகுதியில், கல்ராயன் மலைத்தொடரில் அருநூற்றுமலையில் இருந்து ஏராளமான நீரோடைகள் உற்பத்தியாகின்றன. இங்கிருந்துதான் புகழ்பெற்ற வசிஷ்ட நதி உற்பத்தி ஆகிறது.

இந்த நதி குறிச்சி, பேளூர், பெத்தநாயக்கன்பாளையம், ஆத்தூர், தலைவாசல் வழியாக பெரம்பலூர், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் சுமார் 85 கி.மீ. பயணம் செய்து வெள்ளாறுடன் இணைகிறது.

வசிஷ்ட நதியின் குறுக்கே 10-க்கும் மேற்பட்ட தடுப்பணைகள், பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோயில் உள்பட ஏராளமான, மிகவும் பழைமையான சோழர் கால சிவாலயங்கள் உள்ளன. வசிஷ்ட நதி தொடங்கும் இடத்திலேயே இரண்டு மலைகளுக்கு இடையே புழுதிக்குட்டை ஆனைமடுவு பகுதியில் நீர்தேக்கம் கட்டப்பட்டுள்ளது.

கடந்த 1982-ம் ஆண்டு திட்டமிடப்பட்டு 1993-ம் ஆண்டு சுமார் ரூ.12.40 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்ட இந்த அணையின் மூலம் புழுதிக்குட்டை, பேளூர் சுற்றுப் பகுதிகளில் உள்ள சுமார் 5,012 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. சுமார் 67 அடி உயரம் கொண்ட இந்த அணையில் அண்மையில் பெய்த மழையால் இப்போது 48 அடிக்கு தண்ணீர் உள்ளது.

பொதுப்பணித்துறையால் பராமரிக்கப்படும் இந்த அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் இருந்து சுமார் 3 மாதங்கள் ஏரி, ஆற்றுப் பாசன ஆயக்கட்டு பகுதிகளுக்கு பாசனத்துக்கு தண்ணீர் விடப்படும்.

சுதந்திரமாக நடமாடும் வன விலங்குகள் :

வசிஷ்ட நதி ஆண்டில் பெரும்பாலான மாதங்கள் வறட்சியுடன் இருந்தாலும், நதி தோன்றி கீழே இறங்கும் இடமான ஆனைமடுவு பகுதியில் ஆண்டுதோறும் நீர் வளத்துக்கு பஞ்சமிருக்காது.

இதனால் சுற்றுப் பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் தென்னை, பாக்கு மரங்கள், வயல்வெளிகள் செழிப்புடன் இருக்கும். அணையைச் சுற்றிலும், அணைக்கு செல்லும் வழியிலும் உள்ள காடு, வயல்கள், மலைகள் அனைத்தும் மனதை மயக்கும் எழிலுடன் உள்ளது.

மேலும் அணைக்கு நீர் குடிக்க வரும் காட்டெருமைகள், மான் உள்ளிட்ட காட்டு விலங்குகளும் பரவசத்தை அளிப்பதாக உள்ளன. இதனால் வார விடுமுறை நாள்களில் சுற்றுப்பகுதி மக்கள் ஏராளமானோர் இங்கு வந்து செல்கின்றனர்.

ஆனைமடுவு அணையை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டும் என்று கடந்த பல ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

150 ஏக்கர் அரசு நிலம் : அணையை ஒட்டி அரசுக்கு சொந்தமாக சுமார் 150 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் சில இடங்கள் மட்டும் ஆக்கிரமிப்பில் உள்ளன. இதையும் மீட்டு பூங்கா அமைத்து சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இதையடுத்து சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ.4 கோடி செலவில் பூங்கா உள்ளிட்ட கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ள அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டது. ஆனால் இன்று வரை அது

கிடப்பில் உள்ளதாக பொதுப்பணித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசு விரைந்து செயல்பட்டு அடிப்படை வசதிகளை செய்வதுடன், ஆனைமடுவு அணையை சுற்றுலாத்தலமாக்கி அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

SCROLL FOR NEXT