தமிழ்நாடு

ஜவுளித் தொழில் பிரச்னை தீர்வுக்கு புதிய வழி! முனைப்பு காட்டுமா அரசு?

திருப்பூர்: விவசாயத்தை போன்றே ஜவுளித்தொழிலிலும் ஒவ்வொரு கால கட்டத்திலும் பல்வேறு பிரச்னைகள் தொடர்ந்து கொண்டே உள்ளது.  அப்பிரச்னைகளை அவ்வப்போதே ஆராயவும், உடனுக்குடன் தீர்வு காணவும் மாதாந்திர குறைதீர் க

என். தமிழ்ச்செல்வன்

திருப்பூர்: விவசாயத்தை போன்றே ஜவுளித்தொழிலிலும் ஒவ்வொரு கால கட்டத்திலும் பல்வேறு பிரச்னைகள் தொடர்ந்து கொண்டே உள்ளது.

 அப்பிரச்னைகளை அவ்வப்போதே ஆராயவும், உடனுக்குடன் தீர்வு காணவும் மாதாந்திர குறைதீர் கூட்டம் ஜவுளித் தொழில்களுக்கும் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

 பின்னலாடை உற்பத்தியில் சர்வதேச முக்கியத்துவம் பெற்று விளங்கும் திருப்பூர் ஏற்றுமதி, உள்நாட்டு வர்த்தகம் மூலம் ஆண்டுக்கு ரூ.18 ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய் ஈட்டுகிறது.

 தவிர, மாவட்டத்தின் அவிநாசி, பல்லடம், மங்கலம், வெள்ளக் கோயில் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் மூலம் நாளொன்றுக்கு சுமார் ரூ. 35 கோடி வீதம் ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் கோடிக்கு மேல் ஜவுளி உற்பத்தி செய்யப்படுகிறது.

 அதன்படி, மாவட்டத்திலுள்ள ஆயத்த ஆடை, விசைத்தறி ஜவுளி உற்பத்தி தொழில்கள் மூலம் சுமார் 10 லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.

 விவசாயத்துக்கு அடுத்தபடியாக வேலை வாய்ப்பு, வருவாய் ஈட்டும் முக்கியத் தொழிலாக விளங்கும் ஜவுளித்தொழிலில் பிரச்னைகள் என்பது தொடர்ந்து கொண்டே உள்ளன. அதன்படி, பஞ்சு, நூல் விலை ஏற்ற இறக்கம், சாய ஆலை பிரச்னை, வங்கி வட்டி விகிதத்தில் மாறுபாடு, மூலப்பொருட்கள் விலையேற்றம், மின்சார பிரச்னை, போக்குவரத்து பிரச்னைகள், திறன் மிகுந்த தொழிலாளர்கள் பற்றாக்குறை என பிரச்னைகள் தொடர் கதையாகிக் கொண்டுள்ளது.

 தவிர, சிறு, குறு நிறுவனங்களில் துவங்கி ஏற்றுமதி நிறுவனங்கள் வரை பல்வேறு நிலைகளாகக் காணப்படும் பின்னலாடை தொழிலில், உற்பத்தி நிலையிலேயே பின்னலாடை சரக்குகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்வதிலேயே உற்பத்தியாளர்கள் பல்வேறு பிரச்னைகளை சந்திக்க வேண்டியுள்ளது.

 ஜவுளித் தொழில்களில் நிலவும் தொடர் பிரச்னைகளையும், அதன் பாதிப்புகளை தவிர்க்க மாவட்ட ஆட்சியர் மூலம் அம்மாவட்ட தொழில்முனைவோர் சங்கங்களை இணைத்து குழு ஏற்படுத்தவும், அக்குழுவின் மூலம் 3 மாதங்களுக்கு ஒருமுறை

 குறைதீர் கூட்டம் நடத்தி தொழில் நிலவரம், அதன் பிரச்னைகள் அறிந்து உடனடி நிவாரணம் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்கிறார் சைமா சங்கத் தலைவர் ஏ.சி.ஈஸ்வரன். இதன்மூலம் அந்தந்த ஊர்களிலுள்ள தொழில்கள் தங்குதடையின்றி வளர்ச்சி பெறும் என்கிறார்.

 ஜவுளித்தொழில் என்பது கடல்போன்றது. இதன் பிரச் னைகளை ஏற்பட்ட பிறகு தெரிந்து தீர்ப்பது இயலாதது. இதனால், ஜவுளித் தொழிலை விரிவுபடுத்துவதிலும் சிக்கல்கள் ஏற்படுகிறது.

 ஆகவே, தொழில் பிரச்னைகளை உட னுக்குடன் தெரிந்து நிவர்த்தி செய்யவும், வர்த்தக வாய்ப்புகளை மேம்படுத்த ஆலோசனைகள் அளிக்கவும் தொழில் முனைவோர் குறைதீர்க்கும் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டியது அவசியம் என்கிறார் 2ம் நிலை பின்னலாடை உற்பத்தியாளர் சங்க (சிஸ்மா) பொதுச்செயலர் கே.எஸ்.பாபுஜி. திருப்பூர் தொழிற்கூட்டமைப்பு (டிஃப்) தலைவர் அகில் எம்.எஸ்.மணி கூறுகையில், ஜாப் ஒர்க் தொழில்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் நேரடி சலுகைகள்

 கிடைப்பதில்லை. இத்தகைய பாகுபாடான நிலைகளை சரிசெய்து சிறு, குறு, நடுத்தர ஜாப்ஒர்க் தொழில்களை ஊக்குவிக்கவும், அரசின் சலுகைகளை நேரடியாக கிடைக்கச் செய்யவும் மாதாந்திர ஜவுளித்தொழில் குறைதீர் கூட்டங்கள் நடத்துவது சிறந்தது என்றார்.

 குறைதீர் கூட்டங்கள் நடத்தும்போது பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. மாவட்ட நிர்வாகம்தான் இதற்கு முனைப்பு காட்ட வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

SCROLL FOR NEXT