நாமக்கல்: பல்வேறு நெருக்கடிகள் மற்றும் அதிகரித்து வரும் போட்டிகளால் லாரி போக்குவரத்துத் தொழில் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகிறது.
எனினும், இந்தத் தொழிலின் முக்கியத்துவம் கருதி, லாரி போக்குவரத்துக்கு தொழில் அங்கீகாரம் வழங்கி மத்திய, மாநில அரசுகள் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் அத்தியாவசியப் பொருள்களிலிருந்து தொழில்சாலைகளுக்குத் தேவையான அனைத்து சரக்குகள், பெட்ரோலிய பொருள்களைப் பாதுகாப்பாகவும், விரைவாகவும் எடுத்துச் செல்வதில் 80 சதத்துக்கும் மேல், லாரிகள் மூலமாக மேற்கொள்ளப்படுகின்றன. அதனடிப்படையில், நாமக்கல்லில் மட்டும் சுமார் 57 ஆயிரம் லாரிகள் இயக்கப்படுகின்றன.
மாநிலம் தழுவிய அளவில் 2.75 லட்சம் லாரிகள் சரக்குப் போக்குவரத்துத் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பல லட்சம் தொழிலாளர்கள் ஓட்டுநர்களாகவும், உதவியாளர்களாகவும் (கிளீனர்) பணியாற்றி வருகின்றனர்.
சில ஆண்டுகளாக லாரி போக்குவரத்துத் தொழில் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, கடந்த 4 ஆண்டுகளில், லாரி டயர்களின் விலை ரூ.20 ஆயிரத்திலிருந்து ரூ.35,500 ஆகவும், டீசல் விலை லிட்டர் ரூ.32-லிருந்து ரூ.44.93 ஆகவும், உதிரிப் பாகங்களின் விலை 50 சதத்துக்கும் அதிகமாகவும், 3-ம் நபர் காப்பீட்டுத் தொகை ஓராண்டுக்குள் 65 சதம் வரையும் உயர்த்தப்பட்டுள்ளன.
தவிர, மத்திய, மாநில அரசுகளுக்கு தனித்தனியாக சாலை வரி செலுத்தப்பட்ட போதும், சுங்கச் சாவடிகள் மூலம் பெருமளவில் கட்டணம் வசூலிக்கப்படுகின்றது. இத்தகைய பாதிப்புகளால் கனரக லாரி போக்குவரத்துத் தொழில் பெரும் பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது.
இதற்கிடையே, கடந்த ஓரிரு ஆண்டுகளாக ஓட்டுநர் பற்றாக்குறை என்பது லாரி தொழிலில் முக்கிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. ஓட்டுநர் உரிமத்துக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சியைக் கட்டாயப்படுத்துவதும், லாரி தொழிலில் ஓட்டுநர் பற்றாக்குறை ஏற்பட முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. ஓட்டுநர் பற்றாக்குறையால் மட்டுமே நாமக்கல்லில் சுமார் 10 சத லாரிகள் இயங்காமல் நிறுத்தப்பட்டுள்ளதாக நாமக்கல் லாரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவிக்கிறது.
லாரி தொழிலில் தொடர்ந்து நெருக்கடிகள் அதிகரித்தபோதும், அதற்கேற்ப போட்டிகளும் அதிகரித்து வருவதால், சரக்குப் போக்குவரத்துக் கட்டணத்தை உயர்த்துவதிலும் சிக்கல் நிலவுகிறது என்கிறார் தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயற்குழு உறுப்பினரும், நாமக்கல் வட்டார லாரி உரிமையாளர் சங்க செயலருமான என்.சுப்பிரமணியம்.
அவர் மேலும் கூறியது: அண்மைக்காலமாக சற்று வசதியுள்ள ஓட்டுநர்களே லாரிகளை வாங்கி இயக்குவதால், இந்தத் தொழிலில் போட்டிகள் அதிகரித்துள்ளன. தவிர, அபரிமிதமான சுங்க வரி, டயர் விலை, உதிரிப்பாகங்கள் விலையேற்றம் உள்ளிட்ட நெருக்கடிகளால் லாரி தொழில் லாபகரமானதாக இருப்பதில்லை. லாரி தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் நலன்களைக் காக்க தனி நல வாரியம் அமைக்கவும் வேண்டும் என்றார்.
தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் கே.நல்லசாமி கூறியது:
பல்வேறு வரிச் சுமைகள், செலவினங்கள் அதிகரிப்புக்கு மத்தியில் சுங்கச் சாவடிகளில் அபரிமிதமான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. லாரி போக்குவரத்துத் தொழிலைப் பாதுகாக்க, சுங்கச்சாவடிக் கட்டணத்தையும், 3-ம் நபர் காப்பீட்டுத் தொகை உயர்வையும் அரசு முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
மேலும், அதிகரித்து வரும் போட்டிகளைக் கவனத்தில் கொண்டு, சரக்குக் கட்டணத்தை அரசே நிர்ணயம் செய்யவும், மாநில எல்லைகளில் எடைமேடை அமைத்து அதிகச் சுமையைக் கட்டுப்படுத்தவும் வேண்டும். அடிக்கடி டயர், உதிரிப் பாகங்கள் மற்றும் டீசல் விலை உயர்த்தப்படுவதைக் கட்டுப்படுத்தவும் வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.