சென்னை: தமிழகத்தில் குற்றங்கள் 3.6 சதவிகிதம் குறைந்துள்ளது. ஆனால், தலைநகர் சென்னையில் 7.5 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த 2010-ம் ஆண்டில் மாநிலம் முழுவதும் 1,85,678 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 2011-ம் ஆண்டில் 1,92,879 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
இந்தப் புள்ளிவிவரத்தை மேலோட்டமாகப் பார்க்கும்போது வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது போன்று தெரிந்தாலும், மொத்த மக்கள்தொகையின் அடிப்படையில் முந்தைய குற்ற புள்ளிவிவரங்களை ஒப்பிடும்போது 3.6 சதவீதம் குறைந்து இருப்பதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இதேபோல கோயம்புத்தூர் மாநகர காவல் துறையில் 4.2 சதவீதம், திருச்சி மாநகர காவல் துறையில் 7.1 சதவீதம், திருநெல்வேலி மாநகர காவல் துறையில் 24.7 சதவீதம், மேற்கு மண்டலத்தில் 16.4 சதவீதம், மத்திய மண்டலத்தில் 9.7 சதவீதம், தெற்கு மண்டலத்தில் 3.5 சதவீதம் அளவுக்கு குற்றங்கள் குறைந்துள்ளன.
அதேவேளையில் சென்னை பெருநகர காவல் துறையில் 7.5 சதவீதம், மதுரை மாநகர காவல் துறையில் 6.7 சதவீதம், சேலம் மாநகர காவல் துறையில் 6.3 சதவீதம், வடக்கு மண்டலத்தில் 11.3 சதவீதம் அளவுக்கு குற்றங்கள் அதிகரித்துள்ளன.
ஆதாயக் கொலைகள், திருட்டு, பாலியல் பலாத்காரம் போன்ற குற்றங்கள் பெருமளவு குறைந்துள்ளன. இதற்கு நேர்மாறாக கொலை, வழிப்பறி போன்றவை அதிகரித்துள்ளன. இதில் வழிப்பறி முந்தைய ஆண்டுகளைவிட பல மடங்கு அதிகரித்து இருப்பதாகவும், கொலைக் குற்றங்கள் 2 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
கொலைக் குற்றங்கள் அதிகரிப்பதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. முக்கியமாக குடும்ப பிரச்னை, உறவுகளிடையே ஏற்படும் பிரச்னையின் காரணமாக கொலை சம்பவங்கள் அதிகரித்து இருப்பதாக காவல் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி கூறினார்.
மக்களிடம் குறைந்து வரும் சகிப்புத்தன்மை, பொறுமையின்மை கொலை சம்பவங்கள் அதிகரித்திருப்பதற்கு முக்கிய காரணம். ஆனால் இந்த குற்றங்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் தடுக்க முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.
சென்னை, சேலம், மதுரை போன்ற பெருநகரங்களில் வழிப்பறி அதிகரித்துள்ளது. சென்னையில் இக் குற்றங்களில் ஈடுபடுவோரில் 80 சதவிகிதம் பேர் புதிய குற்றவாளிகள். அதிலும் கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் அதிகமாக வழிப்பறியில் ஈடுபடுகின்றனர். இதனால் இக் குற்றங்களைத் தடுப்பதில் காவல் துறைக்கு பெரும் பின்னடைவு ஏற்படுள்ளது.
இதை தடுப்பதற்காக கடந்தாண்டு வழிப்பறியில் ஈடுபட்ட 90 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸôர் கைது செய்துள்ளனர்.
இடம் பெயர்ந்து வரும் மக்களாலும், தொழிலாளர்களாலும் மாநகரங்களில் வழிப்பறி, திருட்டு ஆகியவை அதிகரித்துள்ளன. எனவே, வெளிமாநில தொழிலாளர்களைக் கண்காணிக்க கடுமையான நடவடிக்கைகளை போலீஸôர் மேற்கொண்டு வருகின்றனர்.
குற்றங்களைத் தடுப்பதற்காக காவல் துறையினரின் அணுகுமுறையையும், நடவடிக்கையும் மேம்படுத்த உயர் அதிகாரிகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். இதன் மூலம் குற்றங்களை மேலும் குறைக்கலாம் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
புள்ளி விவரம்
பதிவான வழக்குகள் 2010 - 2011
சென்னை காவல்துறை 19,539 21,346
கோவை காவல்துறை 4,180 4,030
மதுரை காவல்துறை 2,672 2,873
திருச்சி காவல்துறை 3,741 3,496
சேலம் காவல்துறை 3,218 3,445
நெல்லை காவல்துறை 1,630 1,234
வடக்கு மண்டலம் 34, 924 41,852
மேற்கு மண்டலம் 39,731 37,709
மத்திய மண்டலம் 30,769 29,492
தெற்கு மண்டலம் 44,432 46,657
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.