முகப்பு
தமிழ்நாடு

கிராம நிர்வாக அலுவலர் கட்டடத்தில் இயங்கும் அங்கன்வாடி மையம்

அங்கன்வாடி மைய கட்டடம் பழுதடைந்து இடிந்துவிழும் அபாய நிலையில் உள்ளதால்

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:47 PM
பகிர்:

அங்கன்வாடி மைய கட்டடம் பழுதடைந்து இடிந்துவிழும் அபாய நிலையில் உள்ளதால், கிராம நிர்வாக அலுவலக வளாகத்தில் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. புதியக் கட்டடம் கட்டித்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருத்தணி ஒன்றியத்துக்கு உட்பட்டது கார்த்திகேயபுரம் ஊராட்சி. இக்கிராமத்தில் அங்கன்வாடி மையம் இயங்கிவருகிறது. இதில் கார்த்திகேயபுரம் காலனி, அருந்ததியர் காலனி ஆகிய பகுதிகளில் இருந்து 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த அங்கன்வாடி மையத்தில் கல்வி பயின்று வருகின்றனர். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 2 லட்சம் செலவில் இந்த அங்கன்வாடி கட்டடத்தை திருத்தணி ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் கட்டிக் கொடுத்தது.

முறையாக பராமரிக்கப்படாததால் கட்டடம் விரிசல் அடைந்துள்ளது. இந்நிலையில் கட்டடம் மேலும் விரிசல் அதிகமடைந்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளதால் கடந்த 3 மாதங்களாக அங்கன்வாடி மையம், கிராமத்தில் உள்ள வி.ஏ.ஓ. கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. இதனால் அங்கன்வாடிக்கு குழந்தைகளை அனுப்ப பெற்றோர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.

குழந்தைகளை அலுவலக வளாகத்திலேயே உட்கார வைத்து கல்வி மற்றும் விளையாட்டைக் கற்பிக்க முடியாமல் தினந்தோறும் சத்துணவு அமைப்பாளர் அவதிப்படுகின்றனர். மேலும் குடிநீர், கழிப்பிட போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததால் குழந்தைகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். அதேபோல் அங்கன்வாடி மையத்துக்கு மாதந்தோறும் வரும் அரிசி, பருப்பு, எண்ணெய், ஊட்டச்சத்துமாவு உள்ளிட்டவைகளைப் பாதுகாத்து வைக்கவும் இடம் இல்லாமல் ஊழியர்கள் அவதிப்படுகின்றனர்.

பழுதடைந்த அங்கன்வாடிக் கட்டடத்தை அகற்றி புதிய கட்டடம் கட்டித்தருமாறு ஒன்றிய நிர்வாகத்திடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் பலமுறை கோரிக்கை வைத்தும் இன்று வரை எவ்வித பயனுமில்லை என்கின்றனர் கிராம மக்கள்.

இதுகுறித்து ஒன்றிய அலுவலர் ஒருவர் கூறும்போது: கார்த்தியேகபுரம் கிராமத்தில் இருக்கும் அங்கன்வாடி மையக் கட்டடம் பழுதடைந்துள்ளது என்பது உண்மைதான். இந்த கட்டடத்தை இடித்துவிட்டு புதியக் கட்டடம் கட்டித்தருமாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனு கொடுத்துள்ளார்.

நாங்களும் புதியக் கட்டடம் கட்டுவதற்கான நிதியை ஒதுக்கித் தருமாறு மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்துள்ளோம். நிதி ஓதுக்கீடு செய்த பின்பு கார்திகேயபுரம் கிராமத்தில் புதிய அங்கன்வாடி கட்டடம் கட்டி பயன்பாட்டுக்கு விடப்படும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.