தமிழ்நாடு

எம்ஜிஆர், கருணாநிதி போல திறமையாகப் பேசி காவிரி நீரை ஜெயலலிதாவால் பெற முடியவில்லை: விஜயகாந்த்

தினமணி

எம்ஜிஆர், கருணாநிதி போல கர்நாடகத்திடம் பேசி காவிரி நீரை ஜெயலலிதாவால் தமிழகத்திற்கு பெற்றுத் தர முடியவில்லை என்று, தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டினார்.

உதகையில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை விஜயகாந்த் கூறியது:

எதிர்க்கட்சி என்றால் ஆளுங்கட்சியை விமர்சனம் செய்தே தீர வேண்டும். தமிழகத்தில் நிலவும் மின் தட்டுப்பாடு, விவசாயிகள் பாதிப்பு போன்றவை குறித்துப் பேசினால் அவதூறு வழக்கு தொடரப்படுகிறது. இதற்கு நான் அஞ்ச மாட்டேன். தமிழகத்தில் தற்போது 9 மாவட்டங்களில் தான் என்மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. 32 மாவட்டங்களிலும் வழக்கு தொடர்ந்தாலும் சந்திப்பேன். தொகுதியில் நிலவும் பிரச்னைகள் குறித்து முதல்வருடன் நேரில் விவாதிப்பதற்காக அனுமதி கோரி மனு கொடுக்கப்பட்டு ஒரு மாதமாகியும் இதுவரை பதில் கிடைக்கவிலை. அரசியலில் போட்டி ஆரோக்கியமாக இருக்க வேண்டும். எதிர்க்கட்சிகளை விரோதிகளாகப் பார்க்கக் கூடாது.

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு திமுக ஆதரவு அளித்திருப்பது துரதிர்ஷ்டவசமானது. தேர்தல் கூட்டணி குறித்துப் பேசுவதற்கு காலம் அதிக அளவில் உள்ளது. மக்கள் பிரச்னைகளுக்காகவும், பொதுப் பிரச்னைகளுக்காவும் தேமுதிக தனியாகவே போராடும். எதையும் தனியாகச் சந்திக்கும் சக்தி தேமுதிகவுக்கு உள்ளது.

காவிரி நீர்ப் பிரச்னையை தமிழக, கர்நாடக அரசுகள் அரசியலாக்கி வருகின்றன. இப்பிரச்னையை சுமுகமாக அணுகி, எம்ஜிஆர், கருணாநிதி போல கர்நாடகத்திடம் பேசி தண்ணீரை பெற்றுத் தர ஜெயலலிதா தவறி விட்டார்.

நதிகளை தேசியமயமாக்கினால் மட்டும் பிரச்னை தீராது. அதற்குப் பதிலாக, நதிகளை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தால்தான் நதிநீர்ப் பிரச்னைகளுக்குத் தீர்வு ஏற்படும்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருகிறது. கூடங்குளம் விவகாரம், இலங்கை தமிழர் பிரச்னை, கச்சத்தீவு உள்ளிட்ட பிரச்னைகளில் அரசு இரட்டை வேடம் போடுகிறது. இதற்கெல்லாம் வரும் மக்களவைத் தேர்தலில் தேமுதிக உரிய பதிலடி தரும். வருங்காலத்தில் கோயில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம்களை அந்தந்தக் கோயில்களிலேயே நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஜயகாந்த் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

SCROLL FOR NEXT