முகப்பு
தமிழ்நாடு

300 கிலோ மீட்டருக்கு மேல் இயக்கப்படும் பிற கழக பஸ்களை பெறுவதில் சிக்கல்

அரசு உத்தரவிட்டு பல மாதங்களுக்கு மேலாகிவிட்டபோதும், பிற போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் 300 கிலோ மீட்டருக்கு அப்பால் இயக்கப்படும் பஸ்களை விரைவு போக்குவரத்து கழகத்துக்குப் பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Updated On : 24 டிசம்பர், 2012 at 5:53 AM
பகிர்:

அரசு உத்தரவிட்டு பல மாதங்களுக்கு மேலாகிவிட்டபோதும், பிற போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் 300 கிலோ மீட்டருக்கு அப்பால் இயக்கப்படும் பஸ்களை விரைவு போக்குவரத்து கழகத்துக்குப் பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். டெப்போக்களில் போதிய இடவசதி இல்லாததும் தாமதத்துக்குக் காரணம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

அரசு போக்குவரத்துக் கழகங் களால் 300 கிலோ மீட்டருக்கு மேல் இயக்கப்படும் தொலைதூர வழித்தடங்களைச் சீரமைக்கும் வகையில், தொலைதூர வழித் தட பஸ்கள் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தால் இனி இயக்கப்படும் என சட்டப் பேரவையில் கடந்த மே மாதம் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடரில், தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டது.

இதன் மூலம் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பஸ்களின் எண்ணிக்கை 905-லிருந்து 1,761-ஆக உயரும் எனவும் இதற்காக ஸ்ரீரங்கம், திண்டுக்கல், தேனி, காரைக்குடி, கரூர், ஈரோடு, ஓசூர் ஆகிய 7 இடங்களில் புதிய பணிமனைகள் அமைக்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்தது.

Advertisement

ஆனால், இந்த அறிவிப்பு வெளியாகி 6 மாதங்களுக்கு மேலாகிவிட்டபோதும், பிற போக்குவரத்துக் கழகங்களிடமிருந்து மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே பஸ்கள் பெறப்பட்டுள்ளன.

இதற்கு, பிற போக்குவரத்துக்கழகங்கள் பஸ்களை ஒப்படைப்பதில் வேண்டுமென்றே தாமதப்படுத்துகின்றன. அதேவேளையில் அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு இடப் பிரச்னையும் உள்ளது எனவும் பல்வேறு காரணங்களை அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக உயர் அதிகாரி ஒருவர் கூறியது:

பிற போக்குவரத்துக் கழகங்கள் பஸ்களை ஒப்படைக்கத் தயாராக உள்ளன. அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகத்துக்கு உள்ள இடப் பிரச்னையே, பஸ்களை பெற முடியாததற்கு காரணம்.

புதிதாக 7 பணிமனைகளை அமைக்க அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால், இவற்றில் ஒன்றுகூட செயல்பாட்டுக்கு வரவில்லை. இப்போது 3 பணிமனைகளுக்கு மட்டுமே இடம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 4 பணிமனைகளுக்கு இடம் கிடைக்கவில்லை. இந்த நிலையில், பிற கழகங்களிலிருந்து பஸ்களை பெற்றால், அவற்றை நிறுத்துவதற்கே இடம் இருக்காது என்றார்.

பயன் என்ன?

இப்போது பிற போக்குவரத்துக் கழகங்கள் சென்னைக்கும், சென்னையிலிருந்து 300 கி.மீ.க்கு மேலும் பஸ்களை இயக்குகின்றன. இதனால், சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் கடும் நெரிசல் ஏற்படுகிறது.

மேலும், குறிப்பிட்ட ஊருக்கு ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட போக்குவரத்துக்

கழகங்களின் பஸ்கள் புறப்படுவது தொடர்கதையாகிறது. இதனால், குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு அந்த ஊருக்கு பஸ்களே இல்லாத நிலை ஏற்படுகிறது.

ஆனால், பஸ்கள் ஒப்படைக்கப்பட்ட பிறகு, சென்னையிலிருந்து இயக்கப்படும் பெரும்பாலான பஸ்கள் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பஸ்களாக இருக்கும். இதனால், பணிமனைகளிலிருந்து கோயம்பேடு பஸ்நிலையத்துக்கு சீரான இடைவெளியில் பஸ்கள் இயக்கப்படும். இதனால் நெரிசல் இருக்காது.மேலும் அனைத்து ஊர்களுக்கும் சீரான நேர இடைவெளியில் பஸ்கள் இயக்கப்படும். இதனால் பயணிகளுக்கு இதுவரை இருந்துவந்த சிக்கல் நீங்கும். அதோடு, பிற போக்குவரத்துக்கழக பஸ்களில் மூன்றுக்கு இரண்டு என்ற அளவில் இருக்கைகள் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பஸ்களில் இரண்டுக்கு இரண்டு என்ற அளவில் இருக்கைகள் அமைக்கப்படும். இதனால், பயணிகள் வசதியாகப் பயணிக்க முடியும்.

இதுபோன்ற பலன்கள் பயணிகளுக்கு விரைவில் கிடைக்கும் வகையில், 300 கி.மீ.க்கு மேல் இயக்கப்படும் பஸ்களை பிற கழகங்கள் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திடம் விரைந்து ஒப்படைக்க அரசு உத்தரவிடவேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.