கோவை: கோவை, ஈரோடு, நீலகிரி மற்றும் திருப்பூர் ஆகிய 4 மாவட்டங்களில் படிக்கும் சுமார் 4 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட உள்ளது.
இந்த ஆண்டில் ஸ்மார்ட் கார்டு வடிவில் பஸ் பாஸ் தரும் நடைமுறை அறிமுகப்படுத்தியதால் பள்ளிகளில் இருந்து விண்ணப்பங்களை பெறுவது காலதாமதமானது. இதனால் செவ்வாய்க்கிழமை (ஜூலை 3) நிலவரப்படி 2,500 பாஸ் மட்டுமே மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த 4 லட்சம் பஸ் பாஸ்களை அச்சிட்டு வழங்க 20 நாள்கள் வரை ஆகும் எனத் தெரிகிறது.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளிகளில் முதல் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியர், அரசு தொழில்நுட்பப் பயிலகங்கள், தொழில் பயிற்சிக் கூடம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகின்றன.
நடப்பாண்டில் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்ட் வடிவில் நவீன முறையில் பஸ் பாஸ் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் பள்ளிகள் தொடங்கி ஒரு மாதமான நிலையில், இன்னும் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படவில்லை. இதனால், மாணவர்கள் பேருந்துகளில் கட்டணம் செலுத்தி செல்ல வேண்டி உள்ளது. இதனால் ஏழை, எளிய மாணவர்கள் பாதிகப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக, அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் தரப்பில் கூறியது:
இந்த ஆண்டில் பள்ளி மாணவருக்கான இலவச பஸ் பாஸ் வழங்குவதற்கு புதிய படிவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் படிவம் 1-ல் ஐந்து மாணவர்களின் விவரங்கள் மட்டுமே எழுத முடியும். எனவே, ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கும் பள்ளியில் புதிய முறையிலான படிவத்தை நிரப்புவதும், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் எடுத்து தருவதற்கும் கொஞ்சம் காலதாமதமாகி வருகிறது. இருந்தாலும் மாணவர்களின் சிரமத்தைக் கருத்தில் கொண்டு படிவங்களை நிரப்பி, பாஸ்போர்ட் புகைப்படம் ஒட்டி, குறுந்தகட்டில் விவரங்களை பதிவு செய்து விரைவில் பாஸ் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.
இதுதொடர்பாக கோவை அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியது:
இலவச பஸ் பாஸ் பெறுவதற்கு அரசு போக்குவரத்துக் கழக அலுவலகங்கள் மூலம் படிவம் 1, படிவம் 2 என்று இரு வடிவில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த விண்ணப்பத்தின் முதல் படிவத்தில் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்ட வேண்டும். படிவம் 1-ல் மாணவர் பெயர், படிக்கும் வகுப்பு, பிரிவு, முகவரி, கதவு எண், வீதி பெயர், ஊர் பெயர், பின்கோடு எண், புறப்படும் விவரம், சேரும் இடம் ஆகிய விவரங்களை ஆங்கிலத்தில் நிரப்ப வேண்டும். படிவம் 2-ல் அந்தந்த பள்ளிகளின் ஆசிரியர் வரிசை எண் தந்து வகைப்படுத்த வேண்டும். வகுப்பு, பிரிவு, முகவரி 1, முகவரி 2 ஆகிய விவரங்களை ஆங்கிலத்தில் டைப் செய்து நிரப்ப வேண்டும். படிவம் 2 முழுவதும் ஆங்கிலத்தில் கட்டாயம் டைப் செய்திருக்க வேண்டும்.
விண்டோஸ் எக்செல் 2003-ல், ஏரியல் என்ற ஆங்கில எழுத்துருவில் டைப் செய்ய வேண்டும். 10 முதல் 12 வரையில் எழுத்துரு அளவு இருக்க வேண்டும் எனவும், இந்த விவரங்கள் அனைத்தும் குறுந்தகட்டில் பதிவு செய்து, போக்குவரத்து அலுவலகத்திற்கு கொடுத்து அனுப்ப வேண்டும்.
கோவை மாவட்ட கல்வி அலுவலர் பாலமுரளி கூறியது:
இலவச பஸ் பாஸ் பெற தகவல்களை போக்குவரத்துக் கழக அலுவலகத்திற்கு விரைவாக அனுப்பி வைக்க பள்ளிகளை கேட்டுக் கொண்டுள்ளோம். இதன் மூலம் மாணவர்களுக்கு விரைவில் பஸ் பாஸ் கிடைக்கும் என்றார்.
தயாரானது 2500 மட்டுமே
கோவை கோட்டத்தைப் பொருத்தவரையில் கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் ஆகிய 4 மாவட்டங்களில் சுமார் 4 லட்சம் பாஸ் வழங்கப்பட உள்ளது.
நடப்பாண்டில் இதுவரை சுமார் 2,500 பாஸ் வழங்கியுள்ளோம். மேலும், 6 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. நாளொன்றுக்கு 20,000 பஸ் பாஸ் என 20 நாளில் சுமார் 4 லட்சம் பஸ் பாஸ்களை தயார் செய்து வழங்கத் தயாராக உள்ளோம். சீருடை அணிந்து பஸ்சில் பயணிக்கும் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது என்று ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி அரசு பஸ்களில் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்று தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.