தருமபுரி, ஜூலை 5: வீட்டு வேலைகளைச் செய்வதற்குக்கூட தயங்கும் மாணவிகளுக்கு முன்னுதாரணமாக விவசாய வேலைகளைச் செய்து பெற்றோருக்கு உதவியாக இருக்கிறார் ரம்யா கிருஷ்ணன் (13). அதிலும், வித்தியாசமாக தென்னை மரம் ஏறுவதில் ஆண்களை விஞ்சி நிற்கிறார் இவர்.
தருமபுரி மாவட்டம், அதகப்பாடியை அடுத்த ஏ. செக்காரப்பட்டி ஊராட்சிக்குள்பட்டது வடக்கத்தான் கொட்டாய். இந்த கிராமத்தைச் சேர்ந்த கட்டட மேஸ்திரி சின்னசாமி (41). இவரது மனைவி இளையதா (35). இந்தத் தம்பதியின் இளைய மகள் ரம்யா கிருஷ்ணன். இவர், இதே பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
தனது 8 வயதில் மரம் ஏறக் கற்றுக்கொண்டார் ரம்யா கிருஷ்ணன். தனது தந்தையின் தோட்டத்தில் உள்ள 5 தென்னை மரங்களில் இருப்பதிலேயே உயரம் குறைவான மரத்தை முதலில் தேர்வு செய்து மரம் ஏறக் கற்றுக் கொண்டார். பின்னர், 40 அடி, 50 அடி உயர மரங்களிலும் அனாயசமாக ஏறத் தொடங்கினார். இப்போது, இதுவே இவரது வாடிக்கையாகிவிட்டது.
இந்த மரங்களில் ஆண்டுக்கு ஆயிரம் தேங்காய்கள் கிடைக்கும். இதுபோக அவ்வப்போது இளநீர் காய்களையும் பறித்துக் கொள்கின்றனர். இந்தத் தேங்காய்கள், இளநீர் காய்கள் அனைத்தையும் பறிப்பது ரம்யா கிருஷ்ணன்தான்.
பனை, தென்னை மரம் ஏறும் தொழிலாளர்கள்கூட கயிறு அல்லது ரப்பரால் ஆன வளையத்தை உடல் மற்றும் கால்களில் கட்டிக் கொண்டுதான் மரம் ஏறுகின்றனர். ஆனால், இந்தச் சிறுமியோ எந்தவித பிடிமானமும் இல்லாமல் கை, கால்களை மட்டுமே உபகரணமாகக் கொண்டு மரத்தின் உச்சிக்குச் சென்றுவிடுகிறார். 50 அடி உயர மரத்தின் உச்சியை அதி விரைவாகச் சென்றடைகிறார்.
இந்தக் கிராமத்தைச் சேர்ந்த 14 வயதுக்கு மேற்பட்டவர்கள் இவரைப் பார்த்துதான் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்டனர். அதுமட்டுமல்லாது, இவரது அண்ணன் விஜயன், அக்காள் கீதா ஆகியோரும் இவரிடம்தான் சைக்கிள் கற்றுக் கொண்டனர்.
இப்போது, கிராமத்தில் உள்ள இளைஞர்கள், விவசாயக் கூலித் தொழிலாளர்கள் என அனைவரும் அண்ணாந்து பார்க்கும் வகையில் உள்ளார் ரம்யா கிருஷ்ணன். மரம் ஏறுவதற்கு இந்தக் கிராமத்தில் இவரை விஞ்ச யாரும் இல்லை. மரம் ஏறுவதில் மட்டுமல்லாது நடனம், சிலம்பாட்டம், கிராம விளையாட்டுகளிலும் அசத்துகிறார். கிராம மன்றங்கள், இளைஞர் அமைப்புகள் நடத்திய போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பரிசுகளையும் பெற்றுள்ளார். எழுத, படிக்கத் தெரியாத பெற்றோருக்கு பெருமை தேடித் தந்துள்ளார்.
இது குறித்து, ரம்யா கிருஷ்ணன் கூறியது:
சிறு வயதில் உடன் விளையாடும் நண்பர்களில் ஆண் நண்பர்கள் சிலர் மரத்தில் விளையாட்டாக ஏறுவர். ஆனால், என்னால் முடியாது. அவர்களைப் பார்த்து மரம் ஏறப் பழகினேன். இப்போது, கண் இமைக்கும் நேரத்தில் ஏறி, இறங்கிவிடுகிறேன். போல்வால்ட் எனும் கம்பு ஊன்றித் தாண்டும் போட்டியில் சாதனை படைக்க வேண்டும் என்பது ஆசை. அதற்கான பயிற்சி கிடைத்தால் சாதித்துக் காட்டுவேன் என்றார் அவர்.
அண்ணாந்து பார்க்கும் வகையில் மரத்தில் ஏறுவது மட்டுமல்லாது, அண்ணாந்து பார்க்க வைக்கும் விளையாட்டிலும் இவரது ஆசை நிறைவேற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தருமபுரி மாவட்ட நிர்வாகம் பயிற்சியும், ஊக்கமும் அளிக்க வேண்டும் என்பதே கிராம மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.