தமிழ்நாடு

தேயும் தேயிலை வளரும் ரியல் எஸ்டேட்

குன்னூர்: நீலகிரி மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் தொழிலுக்காக தேயிலைத் தோட்டங்கள் அழிக்கப்படுவது தேயிலை விவசாயிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில், 1832-ம் ஆண்டு ஆங்கிலேயரான டாக்டர் கிரி

ஜான்சன் சி. குமார்

குன்னூர்: நீலகிரி மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் தொழிலுக்காக தேயிலைத் தோட்டங்கள் அழிக்கப்படுவது தேயிலை விவசாயிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில், 1832-ம் ஆண்டு ஆங்கிலேயரான டாக்டர் கிரிஷ் என்பவரால் சோதனை முயற்சியாக தேயிலை பயிரிடப்பட்டது. இம்முயற்சி வெற்றிபெற்றதால், 1859-ல் முதன்முறையாக 1200 ஹெக்டேர் பரப்பில் தேயிலை பயிரிடப்பட்டது. பின்னர் நீலகிரியின் ஓர் அடையாளமாகவே தேயிலை மாறிப்போனது.

நாட்டின் விடுதலைக்குப் பிறகு, நீலகிரி தேயிலையின் தேவை உள்நாட்டில் மட்டுமன்றி, வெளிநாடுகளிலும் அதிகரித்தது. நல்ல அன்னியச் செலாவணியையும் ஈட்டித் தந்ததால் நீலகிரியில் தேயிலை பயிரிடும் பரப்பு பன்மடங்காகக் கூடியது. இதற்காக காடுகளும் ஏராளமாக அழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அரசும் பல்வேறு வகைகளில் தேயிலை விவசாயத்தை ஊக்கப்படுத்தியது. தேயிலை வாரியமும், உபாசி வேளாண்மை அறிவியல் மையமும் இணைந்து பயிர் மாற்றுத் திட்டத்தைச் செயல்படுத்தின. இதன் மூலமாக, ஆண்டுக்கு 10 லட்சம் நாற்றுகள் தயாரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.

1995-ல் 1 லட்சத்து 12 ஆயிரத்து 500 ஏக்கரில் தேயிலை பயிரிடப்பட்டது. இதன் மூலமாக, 92 மில்லியன் டன் தேயிலைத் தூள் தயாரிக்கப்பட்டது. நீலகிரித் தேயிலைக்கு எகிப்து, ஈரான், இராக், பாகிஸ்தான், ரஷியா, உள்ளிட்ட நாடுகளில் நல்ல வரவேற்பு கிடைத்தது; விலையும் கூடுதலாகக் கிடைத்தது.

இந்நிலையில், 2000-ம் ஆண்டு முதல் தேயிலைக்கு விலை சரிவரக் கிடைக்கவில்லை. மேலும், உற்பத்திச் செலவு அதிகரித்ததால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

தோட்டங்களைப் பராமரிக்க முடியாத விவசாயிகள் தங்களைக் காத்துக் கொள்ள அவற்றை அடிமாட்டு விலைக்கு விற்கத் தொடங்கினர். சமவெளிப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் தோட்டங்களை விலைக்கு வாங்கி, ரியல் எஸ்டேட் வியாபாரத்தை ஆரம்பித்து வைத்தனர்.

இதனால் ஏறக்குறைய 25 சதவீதத்திற்கும் மேலான தோட்டங்கள் இப்போது கான்கிரீட் காடுகளாக மாறிவிட்டன.

இது குறித்து தேயிலை வாரிய செயல் இயக்குநர் ஆர். அம்பலவாணன் கூறியது:

தேயிலைத் தோட்டங்களை அழித்து அதற்குப் பதிலாக வீட்டுமனைகள், சொகுசு பங்களாக்களைக் கட்டுவது வருத்தம் அளிக்கிறது. மாவட்ட நிர்வாகம் மற்றும் கட்டடம் சம்பந்தமான உள்ளூர் மற்றும் பிற இலாகாக்களுக்கு தேயிலை வாரியம் மூலம் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அரசின் பதிலுக்காக காத்திருக்கிறோம் என்றார்.

தேயிலைத் தோட்டங்கள் அழிக்கப்பட்டு, அதற்குப் பதிலாக பெருமளவில் மனைகள் உருவாகி வருவது, விவசாயிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. தேயிலைத் தொழிலைக் காக்க அரசு தீவிரமான முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்நோக்குகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT