வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் பள்ளிகளில் பூட்டி சீல் வைக்கப்பட்ட ஆயிரத்துக்கும் மேலான இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் ஓராண்டுக்கும் மேலாக பயன்பாடு இல்லாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கடந்த ஆட்சியின்போது இலவச வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டிகள் வழங்கும் சிறப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
வேதாரண்யம் பகுதி கிராமப்புறங்களில் இந்தத் திட்டம் படிப்படியாக நிறைவேற்றப்பட்டது.
இறுதிக் கட்டமாக சட்டப் பேரவை பொதுத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பாக வேதாரண்யம் நகராட்சிக்குள்பட்ட பகுதியைச் சேர்ந்த பயனாளிகளுக்கு டி.வி. வழங்கும் பணி தொடங்கப்பட்டது. ஏழு வார்டுகளைச் சேர்ந்த பயனாளிகளுக்கும் டி.வி.க்கள் அளிக்கும் பணி முடிக்கப்பட்டது. அந்த நேரத்தில் தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தேர்தல் விதிகள் காரணமாக பயனாளிகளுக்கு டி.வி.க்கள் அளிக்கும் பணி தாற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இதனால், மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய தொலைக்காட்சிப் பெட்டிகள் வேதாரண்யம் சி.க. சுப்பையா அரசு மேல்நிலைப் பள்ளி, தோப்புத்துறை அரசு உயர்நிலைப் பள்ளி சர்வகட்டளை சமுதாயக் கூடம் உள்ளிட்ட இடங்களில் அறைகளில் வைத்து பூட்டப்பட்டு, சீல் வைக்கப்பட்டன.
தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஆனாலும், இலவச டி.வி.க்கள் பயனாளிகளுக்கு வழங்கப்படும் என மக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், அந்தத் திட்டத்தின் செயல்பாடுகள் முற்றிலுமாக முடங்கின.
இதனிடையே, இலவசத் தொலைக்காட்சிப் பெட்டிகள் அரசினர் மாணவர் விடுதிகள், முதியோர் இல்லம், மருத்துவமனைகள் உள்ளிட்ட அரசு சார்ந்த அமைப்புகளுக்கு வழங்கப்படவுள்ளதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் பல லட்சம் மதிப்பில் வாங்கப்பட்ட டி.வி.க்கள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக வகுப்பறைகளில் பூட்டிய நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அவை நீண்ட நாள்களாக பயன்படுத்தப்படாமல் இருப்பதால் அரசு பணம் வீணாகும் நிலையுள்ளது. மேலும்,பள்ளி வகுப்பறைகளில் ஏற்கெனவே இட நெருக்கடி நிலவும் நிலையில், டி.வி.க்களை வைக்க கட்டடங்கள் நிரந்தரமாகப் பயன்படுத்தப்படுவதால் மாணவர்களும் அவதியுற நேரிடுகிறது.
எனவே, கிடப்பில் போடப்பட்டுள்ள சுமார் ஆயிரத்துக்கும் மேலான இலவச டி.வி.க்களை பயனாளிகளிடம் அளிக்க வேண்டும் அல்லது வேறு பயன்பாடுகளுக்காவது வகை செய்ய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்தால், மக்களின் வரிப் பணம் வீணாவதைத் தவிர்க்கலாம் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.