முகப்பு
தமிழ்நாடு

தொடர் மின்வெட்டு: 80 ஆயிரம் நெசவாளர்கள் வேலை இழக்கும் அபாயம்

திருத்தணி, மார்ச் 6: தொடர் மின்வெட்டு காரணமாகத் திருத்தணி பள்ளிப்பட்டு தாலுகாவைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் உள்ள 80 ஆயிரம் நெசவாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  தமிழகம் முழுவதும், சென்

Updated On : 2 ஜனவரி, 2024 at 4:26 PM
பகிர்:

திருத்தணி, மார்ச் 6: தொடர் மின்வெட்டு காரணமாகத் திருத்தணி பள்ளிப்பட்டு தாலுகாவைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் உள்ள 80 ஆயிரம் நெசவாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

 தமிழகம் முழுவதும், சென்னை தவிர மற்ற ஊர்களில் நான்கு மணி நேரம் மின் நிறுத்தம் செய்யப்படும் என்றும், பிப்ரவரி 27-ம் தேதி முதல் இது நடைமுறைக்கு வரும் என, தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால் இந்த நடைமுறை திருத்தணி பள்ளிப்பட்டு தாலுகாவில் இது வரையில் பின்பற்றப்படவில்லை.

 திருத்தணியில் மின்சாரம் எப்போது வரும், எப்போது மின்வெட்டு ஏற்படும் என்பது தெரியாத நிலை உள்ளது. இதேபோல் தான் பள்ளிப்பட்டிலும் மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

 வரைமுறையில்லாமல் மின்சாரம் நிறுத்தப்படுவதால் விவசாயம் உள்பட அனைத்து தொழில்களும் முடங்கிவிட்டன. காலை பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள், அலுவலக பணிக்குச் செல்வோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 திருத்தணியில் மொத்தம் 12 மணி நேரம் தான் மின்சாரம் விநியோகிக்கப்படுதவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். குறிப்பிட்ட சில மணி நேரம் மட்டும் வரும் மின்சாரம், சீராக வருவதில்லை. அடிக்கடி மின்சாரம் நிறுத்தப்படுவதால் மக்கள் விரக்தியில் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கமும் மக்களை வாட்டத் தொடங்கிஉள்ளது.

 திருத்தணி நகரம் மற்றும் கிராமங்களான வேலஞ்சேரி, காசிநாதபுரம், அகூர், சூரிய நகரம், சரஸ்வதி மில், கார்த்திகேயபுரம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளில் வழக்கம் போல் மின் நிறுத்தம் செய்யப்பட்டு வருகிறது.

 தினமும் இரவு நேரத்தில் 4 அல்லது 5 முறை மின் வெட்டு செய்யப்பட்டுகிறது. ஒவ்வொரு முறையும், 45 நிமிடம் முதல், 50 நிமிடம் வரையில் மின் நிறுத்தம் செய்யப்பட்டுகிறது. இதனால் வீடுகளில் மின்விசிறிகள் இயங்காத நிலையில், புழுக்கம் காரணமாகத் தூங்க முடியாமல் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

 திருத்தணி அடுத்த பொதட்டூர்பேட்டை, அத்திமஞ்சேரிப்பேட்டை, சொரக்காய்பேட்டை, அம்மையார்குப்பம், ஆர்.கே.பேட்டை, மத்தூர், புச்சிரெட்டிபள்ளி ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான விசைத்தறிகள் உள்ளன. இவற்றை நம்பி 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவுத் தொழிலாளர்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக ஏற்பட்டுள்ள மின் வெட்டு காரணமாக இவர்கள் சரிவர வேலைவாய்ப்பு இல்லாமல் அவதிப்படுகின்றனர்.

 மேலும், எப்போது மின்சாரம் வரும், எப்போது நிற்கும் என்ற அறிவிப்பும் இல்லாத நிலையில், வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் காலை முதல் இரவு வரையில் காத்திருந்து பணி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

 திருத்தணி, பள்ளிப்பட்டு பகுதிகளில் நெசவுத் தொழில் அதிகம் உள்ள நிலையில், மின்சாரத்தை நம்பி பொருள்கள் உற்பத்தி செய்ய முடியாமல் முடக்கம் ஏற்பட்டுள்ளது. சில விசைத்தறிகள் ஜெனரேட்டர் மூலம் இயங்கினாலும், தொடர்ந்து அதனை இயக்கினால், உற்பத்தி செலவினம் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதால், ஜெனரேட்டர் இயக்கத்திலும் முழுமையாகப் பணிகள் செய்ய முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

 இதுகுறித்து மின்வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, இன்னும் சில நாட்களில் நான்கு மணி நேர மின் நிறுத்தம் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டது. எனினும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லாததால், மின் நிறுத்தம் தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.