முகப்பு
தமிழ்நாடு

தேர்வு முடிவு, சான்றிதழுக்காக காத்திருக்கும் "வருங்கால ஆசிரியர்கள்'!

அரக்கோணம்: 2010-11ஆம் கல்வியாண்டில் இரண்டாம் ஆண்டு தேர்வு எழுதிய ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் கிடைத்தும், மதிப்பெண் சான்றிதழ்கள் இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் தமிழகம் முழுவதும் சும

Updated On : 2 ஜனவரி, 2024 at 3:35 PM
பகிர்:

அரக்கோணம்: 2010-11ஆம் கல்வியாண்டில் இரண்டாம் ஆண்டு தேர்வு எழுதிய ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் கிடைத்தும், மதிப்பெண் சான்றிதழ்கள் இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் தமிழகம் முழுவதும் சுமார் 1.20 லட்சத்துக்கும் மேற்பட்ட வருங்கால ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாள்தோறும் சில மணி நேர பணி, விடுமுறை நாள்களும் அதிகம், டியூஷன் எடுத்தால் கூடுதல் வருவாய், பொதுத்தேர்வு, தேர்தல், சென்சஸ் போன்ற பணிகளுக்குச் சென்றால் கூடுதல் ஊக்கத் தொகை உள்ளிட்ட பல காரணங்களுக்காக ஆசிரியர் பணிக்குச் செல்வதை பெரும்பாலானோர் விரும்புகின்றனர்.

795 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள்: தமிழ்நாடு ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி இயக்ககத்தின் மேற்பார்வையில், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இப்போது தமிழகத்தில், மாவட்ட அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் 30-ம், அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் 8-ம், அரசு நிதியுதவி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் 47-ம், சுயநிதி நிறுவனங்கள் 710-ம் செயல்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் இந்தப் பட்டயப் படிப்பில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் சேர்ந்து பயிற்சி பெறுகின்றனர்.

இந்நிலையில் 2010-11ஆம் கல்வியாண்டில் இரண்டாம் ஆண்டு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் கிடைத்தும், மதிப்பெண் சான்றிதழ்கள் இதுவரை வழங்கப்படவில்லை.

மதிப்பெண் சான்றிதழ் கிடைக்கவில்லை?

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவர் ஒருவர் கூறியது, "இந்த பட்டயப் படிப்பின் 2010-11 ஆண்டு இரண்டாம் ஆண்டு முடித்த மாணவர்கள் 2011 ஜூலையில் இறுதி தேர்வுகளை எழுதினோம். தேர்வு எழுதி 5 மாதங்கள் கழித்து டிசம்பர் 31ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதிலும், தனித்தேர்வர்களுக்கு பிப்ரவரி மாதம் இரண்டாம் வாரம் தேர்வும் அறிவிக்கப்பட்டது. இதுவரை மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படவில்லை. இதனால், வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வை எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது' என்றார் அவர்.

முதலாம் ஆண்டு மாணவர்களும் பாதிப்பு: "அதே கல்வியாண்டில் படித்து முதல் ஆண்டு தேர்வு எழுதியவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தேர்வு முடிவே அறிவிக்கப்படவில்லை. இன்னும் 60 நாள்களில் இரண்டாம் ஆண்டு தேர்வை எழுத வேண்டிய நிலையுள்ளது. இருப்பினும், முதல் ஆண்டில் எந்தப் பாடங்களில் தேர்ச்சி பெற்றுள்ளோம், தேர்ச்சி பெறவில்லை என்பதை அறியாத நிலையுள்ளது' என்று இப்போது இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவர்கள் கூறுகின்றனர்.

யார் மீது தவறு? "தேர்வு நடத்துவது ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி பயிற்சி இயக்ககம். சான்றிதழ்கள் தருவது தமிழக அரசுத் தேர்வுகள் துறை. பிளஸ் 2, பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுகளுக்குச் சான்றிதழ் அளிக்க அரசுத் தேர்வுகள் துறை கவனம் செலுத்துகிறது. ஆனால், ஆசிரியர் பயிற்சி தேர்வு எழுதியுள்ள மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்க மெத்தனம் காட்டுகிறது' என்கின்றனர் கல்வியாளர்கள்.

"யாரை நாம் குற்றம் சொல்ல?' என்கின்றனர் சுமார் 1.20 லட்சத்துக்கும் மேற்பட்ட வருங்கால ஆசிரியர்கள்!



"2 ஆண்டு படிப்பு 3 ஆண்டுகளாகிறது'

இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனம் ஒன்றின் முதல்வர் எஸ்.சுப்பிரமணியனிடம் கேட்டபோது, அவர் கூறியது: கடந்த சில ஆண்டுகளாக ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் பட்டயப் படிப்பு படிக்கும் மாணவர்களின் தேர்வு முடிவுகள் தாமதமாகவே வருகின்றன.

ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி பயிற்சி இயக்ககம்தான் தாமதத்துக்கு முழு பொறுப்பேற்க வேண்டும். இந்த இயக்கத்தினரே அரசுத் தேர்வுத் துறையினரை முடுக்கிவிட்டு தேர்வு முடிவுகளை பெற வேண்டும். தாமதம் காரணமாக, 2 ஆண்டு படிப்பு மூன்று ஆண்டுகளாகிறது என்பதை தமிழக அரசு உணர வேண்டும் என்றார் எஸ்.சுப்பிரமணியன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.