தமிழ்நாடு

7 மாதங்களாக ஊதியமின்றி தவிக்கும் நூலகர்கள்!

நாமக்கல்: நாமக்கல் நகராட்சியுடன் இணைக்கப்பட்ட 9 ஊராட்சிகளிலுள்ள அண்ணா மறுமலர்ச்சித் திட்ட நூலகங்களில் பணிபுரியும் நூலகர்களுக்கு கடந்த 7 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.  ஏற்கெனவே மிகக் குறைந்த ஊதியம்

என். தமிழ்ச்செல்வன்

நாமக்கல்: நாமக்கல் நகராட்சியுடன் இணைக்கப்பட்ட 9 ஊராட்சிகளிலுள்ள அண்ணா மறுமலர்ச்சித் திட்ட நூலகங்களில் பணிபுரியும் நூலகர்களுக்கு கடந்த 7 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.

 ஏற்கெனவே மிகக் குறைந்த ஊதியம் பெற்று வரும் நிலையில், அந்தத் தொகையும் வழங்கப்படாததால் நூலகர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

 கடந்த திமுக ஆட்சியில் அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ், 12,620 கிராம ஊராட்சிகளில் நூலகங்கள் அமைக்கப்பட்டன. அந்த நூலகங்களில் நூலகர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு, அந்தந்த ஊராட்சி மன்ற நிர்வாகங்கள் மூலம் மாதம் ரூ.750 ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.

 இந்த நூலகர்கள் தினமும் காலை 8 முதல் 1 மணி வரையும், மாலை 4 முதல் 7 மணி வரையும் பணியாற்றுகின்றனர். வெள்ளிக்கிழமை வார விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

 இந் நிலையில், நாமக்கல் நகராட்சியுடன் அருகில் இருந்த கொண்டிச்செட்டிப்பட்டி, கொசவம்பட்டி, பெரியபட்டி, காவேட்டிப்பட்டி, நல்லிபாளையம், அய்யம்பாளையம், தும்மங்குறிச்சி, முதலைப்பட்டி, சின்னமுதலைப்பட்டி ஆகிய 9 ஊராட்சிகள் இணைக்கப்பட்டு, நகராட்சியின் எல்லைகள் விரிவுபடுத்தப்பட்டன. அத்துடன், அந்த ஊராட்சி நிர்வாகங்களின் கட்டுப்பாட்டிலிருந்த ஊராட்சி மன்றக் கட்டடங்கள், அண்ணா மறுமலர்ச்சித் திட்ட நூலகங்கள், சமுதாயக் கூடங்கள், இதர அலுவலகங்களும் நகராட்சி நிர்வாகக் கட்டுப்பாட்டில் வந்தன.

 அதன்படி, நகராட்சி நிர்வாகக் கட்டுப்பாட்டில் இணைக்கப்பட்ட பிறகு அந்த நூலகங்களில் பணியாற்றும் நூலகர்களுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் முதல் இதுவரை ஊதியம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், அந்நூலகர்கள் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

 இதுகுறித்து சின்னமுதலைப்பட்டி அண்ணா மறுமலர்ச்சித் திட்ட நூலகர் சுப்பிரமணியம் கூறியது:

 ஊராட்சி மன்ற நிர்வாகக் கட்டுப்பாட்டில் இருந்தவரை நூலகர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாத ஊதியம், நகராட்சியுடன் இணைக்கப்பட்ட பிறகு கடந்த 7 மாதங்களாக வழங்கப்படவில்லை. ஏற்கெனவே வழங்கப்படும் ரூ.750 ஊதியம் மிகக் குறைவாக உள்ள நிலையில், தற்போது அதுவும் வழங்கப்படாதது பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

 தவிர, நூலகத்துக்கு 2 நாளிதழ்கள் வாங்க ஊராட்சி நிர்வாகம் அளித்திருந்த அனுமதியையும் தற்போது நகராட்சி நிர்வாகம் ரத்து செய்துள்ளது. இதனால், தனியார் உதவியுடனேயே நாளிதழ்கள் வாங்க வேண்டியுள்ளது. இப்பாதிப்புகளை உணர்ந்து ஊராட்சி நூலகர்களுக்கு ஊதியம் வழங்க நகராட்சி நிர்வாகம் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

 இதுகுறித்து நாமக்கல் நகர்மன்றத் தலைவர் கரிகாலன் கூறியது:

 இணைக்கப்பட்ட 9 ஊராட்சிகளின் கட்டடங்கள், பணியாற்றும் ஊழியர்கள், அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊதியம் உள்ளிட்ட விவரங்களை ஒன்றிய நிர்வாகம், நகராட்சி நிர்வாகத்துக்கு இதுவரை அளிக்கவில்லை.

 தவிர, இணைக்கப்பட்ட ஊராட்சிகளில் பணியாற்றிய ஊழியர்களும் இதுவரை நகராட்சி அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு விவரம் தெரிவிக்கவில்லை. இதையடுத்து, அந்தப் பணிகளுக்கு ஆள்கள் இல்லாததாகக் கருதி புதிய ஆள்கள் நியமித்தல் குறித்து வழிமுறைகளைத் தெரிவிக்கும்படி ஆட்சியருக்கு நகராட்சி நிர்வாகம் கடிதம் அனுப்பியுள்ளது என்றார் அவர்.

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

SCROLL FOR NEXT