கோவை: மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான மாணவர்கள், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (யு.பி.எஸ்.சி.) சிவில் சர்வீஸ் போட்டித் தேர்வு எழுதி வரும் நிலையில், கோவை நகரில் முதல்நிலைத் தேர்வுக்கென தனித் தேர்வு மையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணியிடங்களுக்கான தேர்வுகளை, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) நடத்தி வருகிறது. தமிழகத்தில் சிவில் சர்வீஸ் தேர்வுகளை எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
நாடு முழுவதும் சுமார் 4.5 லட்சம் பேர், யு.பி.எஸ்.சி. முதல்நிலைத் தேர்வை (பிரி லிம்ஸ்) எழுதுகின்றனர். இதில், தமிழகத்தில் இருந்து சுமார் 20 ஆயிரம் பேர் முதல்நிலைத் தேர்வை எழுதுகின்றனர்.
இந்த 20 ஆயிரம் பேரில் மூன்றில் ஒரு பங்கு மாணவர்கள் கோவையைத் தலைமையிடமாகக் கொண்ட மேற்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவருகிறது. இவர்களில் பெரும்பாலானோர் கோவை, ஈரோடு, திருப்பூர், உதகை, நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.
சென்னைக்கு அடுத்து முக்கிய கல்வி மையமாகத் திகழும் கோவை நகரில் முதல்நிலைத் தேர்வு எழுத யு.பி.எஸ்.சி. தேர்வு மையம் இல்லாதது இங்குள்ள மாணவர்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.
இவர்கள் சென்னை, மதுரை, கொச்சி ஆகிய நகரங்களுக்குச் சென்று, அங்குள்ள தேர்வு மையங்களில் தேர்வு எழுதி வருகின்றனர். இதனால் வீண் அலைச்சலும் பண விரயமும் ஏற்படுகிறது.
கோவையில் பெருகி வரும் பயிற்சி மையங்கள்: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் அண்ணா ஐ.ஏ.எஸ். இலவசப் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு நூற்றுக் கணக்கான மாணவர்களுக்கு சிவில் சர்வீஸ் போட்டித் தேர்வுக்கு இலவசப் பயிற்சி வழங்கப்படுகிறது.
அதேபோல, கோவை மாநகராட்சி சார்பில் காந்திபுரம் அருகே உயர்கல்வி மைய அலுவலகத்தில் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மாணவர் நல இயக்ககம் சார்பில் சிவில் சர்வீஸ் தேர்வுக்கென தனிப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுதவிர சென்னையில் உள்ள சில தனியார் சிவில் சர்வீஸ் பயிற்சி மையங்களும், தங்களது கிளைகளை கோவை நகரத்தில் தொடங்கி மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றன.
தொழில் நகரமான கோவையில் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இங்கு முதல்நிலைத் தேர்வுக்கு தேர்வு மையம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
இதுகுறித்து, கோவை அரசு கலைக் கல்லூரி இணைப் பேராசிரியரும், மாநகராட்சி உயர்கல்வி மையத்தின் தலைவருமான பி.கனகராஜ் கூறியது: தமிழகத்தில் சென்னை, மதுரை மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் யு.பி.எஸ்.சி. முதல்நிலைத் தேர்வுக்கென தேர்வு மையங்கள் உள்ளன. இதன் அடுத்தகட்டத் தேர்வான முதன்மைத் தேர்வுக்கு சென்னையில் மட்டுமே தேர்வு மையம் உள்ளது.
அகில இந்திய அளவில் அதிக அளவில் மாணவர்கள் சிவில் சர்வீஸ் எழுதி வரும் நிலையில், முதல்நிலைத் தேர்வு மையம் கோவையில் இல்லாதது சரியல்ல. கோவை நகரத்தில் யு.பி.எஸ்.சி. தேர்வு மையம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
நடவடிக்கை வேண்டும்
இதுதொடர்பாக மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (யு.பி.எஸ்.சி.) முன்னாள் உறுப்பினரும், தமிழ்நாடு மாநில திட்டக் குழு உறுப்பினருமான இ.பாலகுருசாமி கூறியது: மகாராஷ்டிரம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் 3 முதல் 4 யு.பி.எஸ்.சி. தேர்வு மையங்கள் உள்ளன. தமிழகத்தில் சென்னை, மதுரை என 2 தேர்வு மையங்களே உள்ளன.
கோவையில் நூற்றுக் கணக்கான கல்லூரிகள் உள்ளன; சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. நீலகிரி மாவட்டம், உதகையில் இருந்தும், கேரள மாநிலம், பாலக்காட்டில் இருந்தும் மாணவர்கள் நீண்ட தூரம் பயணித்து தேர்வு எழுத வேண்டிய நிலை உள்ளது.
கோவையில் முதல்நிலைத் தேர்வு மையம் அமைக்க வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் மூலமாக யு.பி.எஸ்.சி. ஆணையத்துக்கும், மத்திய பணியாளர் துறைக்கும் கோரிக்கை வைக்க வேண்டும்.
மேலும், இங்குள்ள கல்வி நிலையங்களின் எண்ணிக்கை, சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை குறித்த விவரங்களையும் தெரியப்படுத்த வேண்டும். தமிழக அரசு மூலமாகவும், கோவையில் தேர்வு மையம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் யு.பி.எஸ்.சி. உறுப்பினராக இருக்கும்போதே, கோவையில் தேர்வு மையம் ஏற்படுத்துவதற்கு முயற்சி எடுத்தேன். அப்போதிருந்த மாவட்ட ஆட்சியர்கள் முழுமையான ஒத்துழைப்பு அளிக்கவில்லை. கோவையில் யு.பி.எஸ்.சி. தேர்வு மையம் அமைந்தால், மாணவிகள் அதிக அளவில் தேர்வு எழுத முன்வருவர் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.