இந்திய முட்டைகளுக்கு ஓமன் நாட்டில் தடை விலக்கப்பட்டு, ஏற்றுமதி வாய்ப்பு அதிகரித்துள்ளபோதிலும் முட்டைகளுக்கான அட்டைப் பெட்டிகள் தயாரிப்புத் தொழில் பாதிப்படைந்துள்ளது. மூலப்பொருள்கள் விலையேற்றம், கடுமையான மின் வெட்டு, தொழிலாளர் பற்றாக்குறையே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
தேசிய அளவில் கோழி முட்டை உற்பத்தியில் தனி இடத்தைப் பிடித்துள்ள நாமக்கல் மண்டலத்தில் (சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர்) சராசரியாக தினசரி சுமார் 3.2 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில் சுமார் 50 லட்சம் முதல் 70 லட்சம் முட்டைகள் வரை பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. பறவைக் காய்ச்சல் பீதியை அடுத்து, 2012 மார்ச் 27-ம் தேதி முதல் ஓமன் நாட்டில் இந்திய முட்டைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை கடந்த செப்டம்பர் 19-ம் தேதியுடன் விலக்கிக் கொள்ளப்பட்டது. கால்நடை மற்றும் விவசாயப் பண்ணை வர்த்தகர்கள் சங்கத்தின் (எல்ஐஎஃப்டி) வேண்டுகோளை ஏற்று, மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் இந்தத் தடையை ஓமன் அரசு விலக்கிக் கொண்டது. இதையடுத்து, செப்டம்பர் 24 முதல் நாமக்கல் மண்டலத்திலிருந்து ஓமன் நாட்டுக்கு தினசரி 20 லட்சத்துக்கும் அதிகமான முட்டைகள் ஏற்றுமதியாகின்றன. மேலும், ஆப்கானிஸ்தான், ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கும் தினமும் 35 லட்சம் முட்டைகளும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
அதன்படி, நாமக்கல் மண்டல முட்டை வர்த்தகத்துக்கு முக்கியச் சந்தையாக விளங்கும் ஓமன் நாட்டுக்கு ஏற்றுமதி வாய்ப்பு அதிகரித்துள்ளதால், முட்டை வர்த்தகத்தின் சார்புத் தொழிலான அட்டைப் பெட்டி தயாரிப்புத் தொழில் சூடுபிடித்துள்ளது.
எனினும், மூலப்பொருள்கள் விலையேற்றம், தொழிலாளர்கள் பற்றாக்குறை பிரச்னைக்கு மத்தியில் கடுமையான மின் வெட்டு காரணமாக முட்டைகளுக்கான அட்டைப் பெட்டித் தொழிலுக்கு தொடர்ந்து பாதிப்புகள் ஏற்பட்டு வருவதாக அதன் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நாமக்கல் மண்டலத்தில் சுமார் 10 நிறுவனங்கள் முட்டைகளுக்கான அட்டைப் பெட்டி தயாரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. நாள்தோறும் 5 லட்சம் முதல் 8 லட்சம் அட்டைப் பெட்டிகள் தயாரிக்கும் இந்த நிறுவனங்கள் மூலம் 300-க்கும் மேற்பட்டோர் நேரடி வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். அட்டைப் பெட்டி தயாரிப்பதற்கான காகிதம், பசை, பின் உள்ளிட்ட மூலப்பொருள்களின் விலை கடந்த ஆண்டைக் காட்டிலும் 35 சதம் உயர்ந்துள்ளது. தவிர, போக்குவரத்துச் செலவு, தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, மின் கட்டண உயர்வு போன்றவற்றால் 360 முட்டைகளுக்கான ஒரு பெட்டியின் உற்பத்திச் செலவு 40 சதம் உயர்ந்துள்ளது. எனினும், தொழில் போட்டி காரணமாக, அட்டைப் பெட்டிகளின் விலையை குறிப்பிட்ட அளவுக்கு மேல் உயர்த்த முடியாத சூழல் நிலவுகிறது என்கிறார் நாமக்கல் அட்டைப் பெட்டி உற்பத்தி நிறுவன மேலாளர் ராஜேந்திரன்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியது:
14 மணி நேரத்துக்கு மேலாக தடை செய்யப்படும் மின்சாரம் காரணமாக அட்டைப்பெட்டித் தயாரிப்புப் பணி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், குறிப்பிட்ட நேரத்தில் அட்டைப் பெட்டிகளைத் தயாரிக்க முடியாமல் ஆர்டர்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு பிரிந்துவிட்டன. இதனால், முட்டை ஏற்றுமதி அதிகரித்த போதிலும், அதன் பலன் அட்டைப் பெட்டி தயாரிப்போருக்கு கிடைக்காத சூழல் நிலவுகிறது என்றார் அவர்.
இதுகுறித்து முட்டை ஏற்றுமதி நிறுவன மேலாளர் சண்முகம் கூறியது:
மூலப்பொருள்கள் விலை உயர்வு, தொடர் மின் வெட்டு காரணமாக முட்டை அட்டைப் பெட்டி விலை (360 முட்டைகளுக்கான ஒரு பெட்டி) ரூ.36-லிருந்து ரூ.52-ஆக உயர்ந்து ள்ளது. இந்த விலையுயர்வை முட்டை விலையில் சேர்த்தால் இந்திய முட்டை ஏற்றுமதி வர்த்தகத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும். எனினும், தொடர்ந்து அந்தச் செலவினங்களின் உயர்வை முட்டை விலையில் சேர்க்காமலும் தொடர முடியாது என்றார் அவர்.
எனவே, அட்டைப் பெட்டிகளுக்கான மூலப்பொருள்கள் விலை உயர்வை கட்டுப்படுத்தவும், குடிசைத் தொழில்போல் இயங்கும் அட்டைப் பெட்டித் தொழிலுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அட்டைப்பெட்டி உற்பத்தியாளர்களின் எதிர்பார்ப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.