ஈரோடு மாநகராட்சி நூலகம் நூலகர், நூல்கள் இல்லாமல் இயங்கி வருகிறது. புத்தக அலமாரிகள் 2 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தப்படாமல் பூட்டிய அறைக்குள் வைக்கப்பட்டுள்ளதால் அவை பாழாகும் அவல நிலை உருவாகியுள்ளது.
ஈரோடு, பெரியார் நகரில் மாநகராட்சிக்குச் சொந்தமான உயர்கல்வி மற்றும் பொது நூலகம் என்னும் பெயரில் நூலகம் இயங்கி வருகிறது.
மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரே நூலகம் இது மட்டும்தான். இந்த நூலகம் 28.4.2010-ல் ரூ.40 லட்சம் செலவில் கட்டப்பட்டது.
தரைத்தளம், மேல் தளம் என இரு அடுக்குகள் உள்ளன. தரைத்தளத்தில் மட்டும்தான் இப்போது நூலகம் இயங்கி வருகிறது. மேல் தளத்தில் புத்தக அலமாரிகள் பூட்டி வைக்கப்பட்டுள்ளன. கீழ்தளத்தில் தினசரி பத்திரிகைகள், வார இதழ்கள் தவிர வேறு எந்த நூல்களும் இல்லை.
ஆனால், 50,000-க்கும் அதிகமான எண்ணிக்கையில் நூல்கள் வைக்கப் போதுமான அளவுக்கு இடவசதி, அலமாரி இருந்தும் இந்த நூலகத்தில் 2 ஆண்டுகளாக எவ்வித நூல்களும் வைக்காமல் இருப்பது வாசகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நூலகத்தில் இதுவரை நூலகர் நியமிக்கப்படவில்லை. துப்புரவுத் தொழிலாளிதான் நூலகத்தைக் கண்காணித்து வருகிறார். வாரந்தோறும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் காலை 7 முதல் 12 மணி வரையும், மாலை 3 முதல் 6 மணி வரையும், ஞாயிறு மற்றும் விடுமுறை நாள்களில் காலை 7 முதல் 10 மணி வரையும் நூலகம் செயல்பட்டு வருகிறது.
இந்த நூலகத்தில் புதிய நூல்களை வாங்கி வைக்கவும், நூலகரை நியமிக்கவும் மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாசகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்த நூலகத்துக்கு கடந்த ஒன்றரை ஆண்டாக செல்லும் வாசகரும், வணிகவரித் துறையில் இருந்து ஓய்வு பெற்ற அலுவலருமான இராம.அழகர்சாமி கூறியது:
ஈரோட்டின் மையப் பகுதியில் இந்த நூலகம் இயங்கி வருகிறது. வேறு நூலகத்துக்குச் செல்ல வேண்டுமெனில் 1 கி.மீ. செல்ல வேண்டும்.
இந்த நூலகம் துப்புரவுத் தொழிலாளி மூலம்தான் கண்காணிக்கப்படுகிறது. பொது நூலகத் துறையின் கட்டுப்பாட்டில் இந்த நூலகத்தை ஒப்படைத்தால் விடுமுறை நாள்களில் தினசரி பத்திரிகைகளை படிக்க இயலாது. எனவே, மாநகராட்சி மூலம் முழுமையான நூலகத்தை இயக்க வேண்டும் என்றார்.
இது குறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையர் மு.விஜயலட்சுமி கூறியது: புதிய மாநகராட்சியாக உருவாக்கப்பட்டதால் போதுமான அளவுக்கு நிதி, ஊழியர்கள் இல்லை.
எனவே, புதிய நூல்கள் வாங்கி, இந்த நூலகத்தை முழுமையாக இயக்குவது சிரமம். நூலகத்தின் மேல்தளத்தை, நூலகத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் நூலகத்துக்கு வாடகைக்குவிட மன்றக் கூட்டத்தில் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
இதுகுறித்து ஈரோடு மேயர் ப. மல்லிகா பரமசிவம் கூறுகையில், "மாநகராட்சி ஆணையருடன் கலந்துபேசி நூலகத்தில் புதிய நூல்கள் வாங்கி வைக்கவும், நூலகரை நியமிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.