பல்லாங்குழிகளாக மாறிய பள்ளிப்பட்டு பஸ் நிலையம்
திருத்தணி, செப்.1: பருவமழையின் தொடக்கத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் பல்லாங்குழிகளாக மாறிய பள்ளிப்பட்டு பஸ் நிலையப் பகுதியை உடனடியாக சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அகத்தி
திருத்தணி, செப்.1: பருவமழையின் தொடக்கத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் பல்லாங்குழிகளாக மாறிய பள்ளிப்பட்டு பஸ் நிலையப் பகுதியை உடனடியாக சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதை போன்று ஒரு நகரத்தின் அழகு, அதன் முக்கிய இடங்களைப் பார்த்தால் தெரிந்துவிடும். ஆனால் பள்ளிப்பட்டு பேரூராட்சியின் அடிப்படை வசதிகளை பார்த்தால் முகம் சுழிக்கும் நிலைதான் ஏற்பட்டுள்ளது. இதற்கு ஒரு உதாரணம்தான் பஸ் நிலையம்.
பள்ளிப்பட்டு பஸ் நிலையம் கடந்த 1962-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அப்போது பள்ளிப்பட்டு மையப் பகுதியில் செயல்பட்டு வந்த பழைய பஸ் நிலையம் மூடப்பட்டது. பின்னர் வேறு இடத்துக்கு அதாவது பழைய பஸ் நிலையத்திலிருந்து சற்று தள்ளி, புதிய பஸ் நிலையம் திறக்கப்பட்டது.
பள்ளிப்பட்டு பஸ் நிலையத்தை பொருத்தவரையில் எப்போதும் பஸ்கள் வருவதும் செல்வதுமாக இருக்கும். ஏனெனில் ஆந்திர எல்லையில் பள்ளிப்பட்டு அமைந்துள்ளதால் திருப்பதி, நகரி, புத்தூர், ரேணிகுண்டா, சித்தூர், வேலூர், சோளிங்கர், திருத்தணி ஆகிய இடங்களிலிருந்து பஸ்கள் பள்ளிப்பட்டு வந்து செல்கின்றன. இதனால் எப்போதும் பயணிகள் கூட்டம் இங்கு அதிகளவில் காணப்படுகிறது.
பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை. பேரூராட்சி சார்பில் குடிநீர் வசதி சரியாக செய்யப்படவில்லை. பஸ் நிலையத்தில் பேரூராட்சி சார்பில் சின்டெக்ஸ் டேங்க் ஒன்று அமைக்கப்பட்டது. இதில் தினமும் பேரூராட்சி குடிநீர் டிராக்டர், லாரி மூலம் குடிநீர் கொண்டுவந்து நிரப்பப்பட்டது. ஆனால் தற்போது சின்டெக்ஸ் டேங்க் பராமரிப்பு இன்றி பாழடைந்துள்ளது.
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் நகரின் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுவோம் என்று வாக்குறுதிகளை அள்ளி வீசினர். ஆனால் வெற்றி பெற்றவர்கள் இதை இப்போது மறந்துவிட்டனர்.
பஸ் நிலையத்தில் சின்டெக்ஸ் டேங்க் அமைத்து தினமும் பயணிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இலவசக் கழிப்பறை வசதி போதுமானதாக இல்லை. இருக்கின்ற இலவச கழிப்பறை அருகேயும் செல்ல முடியாத அளவுக்கு சுகாதார சீர்கேடுகள் மலிந்துள்ளன. மழை காலங்களில் பஸ் நிலையப் பகுதி முழுவதும் துர் நாற்றம் வீசுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்ட நிலையில், கடந்த சில நாட்களாக பெய்த கன மழைக்கு பள்ளிப்பட்டு பஸ் நிலையத்தில் பெரிய மரணப் பள்ளங்கள் உருவாகியுள்ளன. மேலும் சாலைகள் தாக்குப்பிடிக்க முடியாமல் பல்லாங்குழிகளாக மாறிவிருகின்றன. இதனால் பஸ் ஓட்டுநர்களுள் அவதிப்படுவதுடன் பயணிகளும் பரிதவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். வயதானவர்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்துகளை சந்திக்கின்றனர். பஸ் நிலையப் பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க பேரூராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.
பஸ் நிலையத்தில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைக்க வேண்டும், பஸ் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பேரூராட்சி நிர்வாகம் செய்துகொடுக்க வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.