தமிழ்நாடு

கோவையில் கிரைண்டர் தொழில் அழியும் அபாயம்?

கோவை: கிரைண்டரைக் கண்டுபிடித்த தொழில்நகரமான கோவையில் தற்போது இத் தொழில் அழியும் அபாயத்தில் உள்ளது. இங்குள்ள கிரைண்டர் தயாரிப்புத் தொழிற்சாலைகளில் பணியாற்றிய பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்கள் சில மாதங்கள

ஆர். வேல்முருகன்

கோவை: கிரைண்டரைக் கண்டுபிடித்த தொழில்நகரமான கோவையில் தற்போது இத் தொழில் அழியும் அபாயத்தில் உள்ளது. இங்குள்ள கிரைண்டர் தயாரிப்புத் தொழிற்சாலைகளில் பணியாற்றிய பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்கள் சில மாதங்களாக வேலை இழந்துள்ளனர்.

தென்னிந்தியர்களின் விருப்ப உணவான இட்லியும் தோசையும் பண்டிகைகளின்போது தான் கிடைக்கும் என்பது முந்தைய பல ஆண்டு கால நிலைமை. இந்நிலையை மாற்றியதில் கிரைண்டருக்கு பெரும் பங்குண்டு.

கோவையில் கடந்த 1955-ல் முதன்முதலாக சபாபதி என்பவர் கிரைண்டரைக் கண்டுபிடித்தார். இந்த பாரம்பரிய மாடல் கிரைண்டர் தான் இப்போதும் பெரும்பாலானவர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. 1980-ல் டில்ட்டிங் மாடல் கிரைண்டரும், 1995-ல் டேபிள்டாப் கிரைண்டரும் அறிமுகப்படுத்தப்பட்டன. கோவையில் 2 லிட்டர் கிரைண்டர் முதல் 40 லிட்டர் கிரைண்டர் வரை தயாரிக்கப்படுகின்றன.

பாரம்பரிய மாடல் கிரைண்டர்கள் 60 சதவீதமும், டில்ட்டிங் மாடல் 10 சதவீதமும், டேபிள்டாப் மாடல் 20 சதவீதமும், வணிக ரீதியான உபயோகத்துக்கான கிரைண்டர்கள் 10 சதவீதமும் தயாரிக்கப்படுகின்றன.

கோவையில் மட்டும் கிரைண்டர்கள் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பதில் சுமார் 600 நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இவற்றில் சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்கள் நேரடியாகவும் சுமார் 50 ஆயிரம் பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்புப் பெற்றுள்ளனர்.

இந்தியாவில் மாதந்தோறும் தயாரிக்கப்படும் சுமார் 1 லட்சம் கிரைண்டர்களில் கோவையின் பங்கு மட்டும் 75 ஆயிரம். கோவையின் கிரைண்டர் உற்பத்தி மதிப்பு ஆண்டுக்கு ரூ. 225 கோடி.

கோவையில் இருந்து வெளிநாடுகளுக்கு கிரைண்டர்கள் ஏற்றுமதி செய்யப்படுவதுடன் பிற மாநிலங்களுக்கும் கிரைண்டர்கள் அனுப்பப்படுகின்றன.

கடந்த சட்டப் பேரவைத் தேர்தலின்போது தமிழகத்தில் அதிமுக தேர்தல் வாக்குறுதியாக கிரைண்டர், மின்விசிறி, மிக்ஸி ஆகியவற்றை இலவசமாக வழங்குவதாக அறிவித்தது. அதன்படி தற்போது தமிழக அரசு விலையில்லாப் பொருள்களை வழங்கி வருகிறது.

கடந்த 2012-13ம் ஆண்டில் 35 லட்சம் கிரைண்டர்களைக் கொள்முதல் செய்வதற்காக தமிழக அரசால் டெண்டர் விடப்பட்டது. தொழில்நுட்ப ரீதியாக 24 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டன. இவற்றில் டெண்டருக்கு 8 நிறுவனங்கள் மட்டுமே தகுதி பெற்றன.

சென்னையில் செயல்படும் பிரபல நிறுவனமொன்று 21 லட்சம் கிரைண்டர்களுக்கும் கோவையைச் சேர்ந்த நிறுவனங்கள் 14 லட்சம் கிரைண்டர்களுக்கும் ஆர்டர்களைப் பெற்றுள்ளன.

கோவையில் செயல்படும் கிரைண்டர் நிறுவனங்கள் அரசின் ஆர்டர் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருந்தன. எதிர்பார்த்தபடி ஆர்டர் கிடைக்காததால் பல நிறுவனங்களில் பணியாற்றிய பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்கள் வேலையை இழந்துள்ளனர்.

இது தொடர்பாக கோவை மாவட்ட கிரைண்டர் மற்றும் உதிரி பாகங்களை உற்பத்தி செய்வோர் சங்கத்தின் செயலர் டி.கிருஷ்ணமூர்த்தி கூறியது:

நாட்டின் தேவையில் 75 சதவீதத்தை கோவை கிரைண்டர்கள் பூர்த்தி செய்கின்றன. ஆனால் தமிழக அரசு கோவை நிறுவனங்களுக்கு டெண்டர் தரவில்லை. இந்த வாய்ப்பை கோவையைச் சேர்ந்த கிரைண்டர் உற்பத்தியாளர் சங்கத்துக்கு வழங்கி, தரமான கிரைண்டர்களைக் கொள்முதல் செய்ய வேண்டும்.

இல்லாவிட்டால் கிரைண்டர் தொழில் கோவையில் விரைவில் அழிந்துவிடும். இதை நம்பியுள்ள பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்கள் இப்போதே வேலை இழந்துள்ளனர் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

இறுதிப் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா பேட்டிங்..! மகளிர் ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்!

SCROLL FOR NEXT