முகப்பு
தமிழ்நாடு

தண்டவாளத்தில் ஏற்படும் கோடை கால பாதிப்புகள்

கோடை வெப்பத்தில் தண்டவாளங்கள் விரிவடையும் என்பதால் ரயில்கள் தடம்புரள வாய்ப்புள்ளதாகவும், அவற்றை தவிர்க்க பராமரிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் தெற்கு ரயில்வே பொறியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:16 AM
பகிர்:

கோடை வெப்பத்தில் தண்டவாளங்கள் விரிவடையும் என்பதால் ரயில்கள் தடம்புரள வாய்ப்புள்ளதாகவும், அவற்றை தவிர்க்க பராமரிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் தெற்கு ரயில்வே பொறியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

ஆனால் ரயில் தண்டவாளப் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு போதிய பணியாளர்கள் இல்லை. ரயில்வே தண்டவாள பராமரிப்புப் பணியாளர்கள் தேவையில் 4 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பபடவில்லை என்று கூறப்படுகிறது. கோடைக் காலத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமிருக்கும். இதனால் ரயில் தண்டவாளங்களில் பாதிப்பு அதிகமிருக்கும். கோடை காலத்தில்தான் தண்டவாளங்களில் விரிசல், வெல்டிங் விட்டுப் போவது போன்றவை அதிகமாக ஏற்படும்.

இது குறித்து ரயில்வே பொறியாளர் ஒருவர் கூறுகையில், வெப்பத்தால் பொருள்கள் விரிவடையும் என்பது விதி. இரும்பு வெப்பத்தால் சூடேறும்போது இரும்பின் மூலக்கூறுகள் விரிவடைகிறது. இதன் காரணமாக தண்டவாளம் உடையவோ, பிறழவோ வாய்ப்பு உண்டு.

Advertisement

இந்த விரிவை தண்டவாளங்களில் விடப்பட்ட இடைவெளி சாதாரண நேரங்களில் சரி செய்துகொள்ளும். ஆனால் இடைவிடாத அதிக வெப்பம் காரணமாக தண்டவாளங்கள் சேதமடையும். இதனை கேங்மேன், கீமேன் ஆகியோர் தினமும் பார்வையிட வேண்டும்.

ஆனால் இந்தப் பணிப் பதவிகளில் ஏராளமான காலியிடங்கள் உள்ளன. பணியில் இருக்கும் குறைந்சபட்ச ரயில்வே ஊழியர்களுக்கு இதனை கவனிப்பதற்கு கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது என்றார்.

இது குறித்து தட்சிண ரயில்வே ஊழியர்கள் சங்கத்தின் பொது செயலாளர் ஜானகிராமன் கூறியது: தண்டவாளப் பராமரிப்பு மற்றும் இதர பொறியாளர் பணிகளுக்கான காலியிடங்களை ரயில்வே துறை மிகவும் மந்தகதியில் நிரப்பி வருகிறது. மேலும் கோடை காலத்தில் தண்டவாளங்கள் விரிவடைவது தவிர்க்க முடியாத ஒன்று. அதற்கு முறையான கண்காணிப்பும், பராமரிப்புப் பணிகளும் அவசியம்.

தண்டவாளத்தை கண்காணித்து பராமரிக்கும் கீமேன் தினமும் 16 கிலோ மீட்டர் நடந்து சென்று பார்வையிட வேண்டும். இதில் கீமேனுக்கு கண்காணிப்பு பணியை மட்டுமே ஒப்படைக்க வேண்டும் என்று ரயில்வே வாரியத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். கீமேனுக்கு பராமரிப்பு பணியையும், கண்காணிப்பையும் ஒன்று சேர கவனிப்பது கூடுதல் சுமையாக உள்ளது.

மேலும் தெற்கு ரயில்வே நிர்வாகம் சிறப்பு ரயில்களை இயக்குகிறது. இதனால் தண்டவாளம் கூடுதல் சுமையைச் சுமந்து எளிதில் சேதமடைகிறது என்றார் ஜானகிராமன்.

ரயில்களின் வேகம் குறைப்பு

அரக்கோணம் அருகே சித்தேரியில் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதையடுத்து அவ்வழியே சென்று வரும் அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகமும் குறைக்கப்பட்டுள்ளது.

ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதால் அரக்கோணம்-காட்பாடி இடையிலான ரயில் தண்டவாளங்களின் பராமரிப்பு பணிகள் வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு நிறைவடைந்ததாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

புதிதாக சீரமைக்கப்பட்ட பாதை என்பதால் சித்தேரி - அரக்கோணம் இடையிலான பாதையில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் விபத்து பகுதியை நெருங்கும்போது மட்டும் 15 முதல் 20 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக சென்னை சென்ட்ரல் வந்தடையும் ரயில்கள் சற்று தாமதமாக வருகின்றன.

இன்னும் சில நாள்களுக்கு அப்பகுதியில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் குறைவான வேகத்திலேயே இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments