தண்டவாள பராமரிப்பு பணிகள் இல்லாததே ரயில் விபத்துக்கு காரணம்?
வேலூர் மாவட்டம் சித்தேரியில் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளான சம்பவத்துக்கு தண்டவாளம் வெல்டிங் இணைப்பு
வேலூர் மாவட்டம் சித்தேரியில் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளான சம்பவத்துக்கு தண்டவாளம் வெல்டிங் இணைப்பு துண்டிப்பும், பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளாததுமே முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
விபத்து நேரிட்ட பகுதியில் மூன்று நாள்களாக பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
அரக்கோணம் - காட்பாடி இடையிலான வழித்தடத்தில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் ஊழியர்களில் சிலர் தொழிற்சங்க தேர்தல் பணிகளுக்குச் சென்றுவிட்டதால் பணிகளை மேற்கொள்ள ஆள்கள் இல்லை என்று கூறப்படுகிறது.
Advertisement
இது தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சதீஷ் குமார் மிட்டல் தலைமையில் நடைபெற்ற பொது விசாரணையில் அதிகாரிகளை சாடியதாகத் தெரிகிறது.
வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள சித்தேரியில் ஏப்ரல் 10ஆம் தேதி முசாபூர் - யஷ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்து 33 பேர் காயமடைந்தனர்.
இதன் காரணமாக ஏப்ரல் 11, 12-ம் தேதிகளில் சென்ட்ரல் மார்க்கமாக வந்து செல்லும் ரயில்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ரயில்வே துறையினர் 24 மணி நேரமாக போராடி சேதமடைந்த தண்டவாளத்தை சீர்படுத்தினர்.
அரக்கோணம் - காட்பாடி இடையில் விபத்தில் பாதிக்கப்பட்ட 200 மீட்டர் தொலைவுக்கு புதிய தண்டவாளம் அமைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ரயில் போக்குவரத்து ஏப்ரல் 12ஆம் தேதி மாலையில் இருந்து சீரானது.
விசாரணை: இந்த விபத்து குறித்து ஆராய்வதற்கு தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் தலைமையிலான விசாரணைக் குழு கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் பொது விசாரணை மேற்கொண்டது. இந்த விசாரணையின்போது சுமார் 70 ரயில்வே ஊழியர்களும் 4 பொது மக்களும் பங்கேற்றனர். அவர்கள் தங்களுக்கு தெரிந்த உண்மைகள் மற்றும் சாட்சியங்களை அளித்தனர். சித்தேரி ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது குறித்த முதல் கட்ட விசாரணை அறிக்கை அடுத்த மாதம் சமர்ப்பிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் தண்டவாளப் பராமரிப்பு பணியில் ஈடுபட்ட அதிகாரிகளிடம் விசாரணைக் குழு விசாரணை நடத்தியதாக தெரிகிறது. கேட் கீப்பர், கேங்மேன், கீமென் ஆகியோரிடம் விசாரணை நடத்தியதில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளாதது தெரிய வந்துள்ளது.
ரயில் தண்டவாளம் பராமரிப்பு என்பது ரயில்வேயில் தினம்தோறும் மேற்கொள்ளப்படும் மிகவும் அத்தியாவசியப் பணி. ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் பணியாக தண்டவாளப் பராமரிப்புப் பணி பார்க்கப்படுகிறது. ஆனால் விபத்து நடைபெறுவதற்கு முன் 3 நாள்களாக பராமரிப்புப் பணியில் ஈடுபடும் கேங்மேன்கள் சுமார் 50 பேர் ஒரு தொழிற் சங்கத்தின் வற்புறுத்தலின்பேரில் ரயில்வே ஊழியர்கள் தொழிற்சங்க தேர்தல் வேலைக்கு சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
அவர்களை அந்த குறிப்பிட்ட தொழிற் சங்கத்தினர் தங்களது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஊழியர்கள் வருகை பதிவில் கையெழுத்திட வைத்து தேர்தல் பணிக்கு கொண்டு சென்றதாக ரயில்வே வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இது குறித்து ரயில்வே ஊழியர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர் கூறியதாவது: ஏற்கெனவே ரயில் தண்டவாளப் பராமரிப்பு பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்படாமலேயே உள்ளன. இந்நிலையில் ரயில்வே ஊழியர்கள் தங்களது அடிப்படை பணிகளை செய்யவிடாமல் தொழிற்சங்க தேர்தல் பணியில் ஈடுபடுத்துவது முறையில்லை. தண்டவாளப் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் ஊழியர்கள் நேரம் காலம் பார்க்காமல் உழைக்கக்கூடியவர்கள். அவர்களை தங்களது பணியை செய்யவிடாமல் இடையூறு செய்வர்களை இனி அதிகாரிகள் கண்காணித்து தண்டிக்க வேண்டும் என்றார் அவர்.