தமிழ்நாடு

பருவமழை பற்றாக்குறை: 30 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் தமிழகத்தின் 30 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. கிருஷ்ணகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் மட்டுமே நீர்மட்டம் சற்று உயர்ந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

ஆ. கோபிகிருஷ்ணா

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் தமிழகத்தின் 30 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. கிருஷ்ணகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் மட்டுமே நீர்மட்டம் சற்று உயர்ந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

வடகிழக்குப் பருவமழை தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. இந்த ஆண்டு வழக்கத்தை விட கூடுதலாக மழை பெய்யும் என்று முதலில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வங்கக்கடலில் உருவான 2 புயல்களால் தமிழகத்தின் மழை வாய்ப்பு குறைந்தது.

கடந்த 2 மாதங்களில் வழக்கத்தை விட 30 சதவீதம் குறைவாக மழை பெய்துள்ளதாக வானிலை மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பருவமழைக் காலத்தில் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயரும் என்று விவசாயிகளும், பொதுமக்களும் காத்திருந்த நிலையில், அவர்களை ஏமாற்றியுள்ளது இந்த ஆண்டு பருவமழை.

மாநில நிலத்தடி நீர் ஆதார மையத்தின் தகவல்படி, கோவை மாவட்டத்தில் அதிகபட்சமாக நிலத்தடி நீர்மட்டம் 5.55 மீட்டர் கீழே சென்று விட்டது. திருவண்ணாமலையில் 3.85 மீட்டரும், விழுப்புரம், தேனியில் முறையே 3.18 மற்றும் 3.37 மீட்டரும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது.

விவசாய மாவட்டங்களில் பாதிப்பு: கோவை மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் கடந்த ஆண்டு தோராயமாக 8.5 மீட்டர் ஆழத்தில் நீர் இருந்தது. ஆனால் இந்த ஆண்டில் நீர்மட்டம் 14 மீட்டருக்கும் கீழே சென்றுவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே போல தேனியில் 11 மீட்டர் ஆழத்தில் கிடைத்த நீர், தற்போது 14.5 மீட்டர் ஆழத்துக்கு சென்றுவிட்டது.

வேளாண் தொழில் அதிகம் நடைபெறும் பெரும்பாலான மாவட்டங்களில் நிலத்தடி நீர் இருப்பு குறைந்து கொண்டே வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். அதிக தூரம் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்க வசதி இல்லாத சிறு விவசாயிகளின் நிலங்களில் பயிர்கள் கருகும் நிலையில் உள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

பருவமழை பொய்த்து போனதுதான் இதற்கு காரணம் என்று நிலத்தடி நீர் ஆதார மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:

கிருஷ்ணகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் மட்டும் நிலத்தடி நீர்மட்டம் 1.05 மீட்டர் உயர்ந்துள்ளது. பருவமழை பற்றாக்குறையால் மற்ற மாவட்டங்களில் நீர்மட்டம் குறைந்துள்ளது.

சென்னையில் நீர்மட்டம் குறைவு: சென்னையில் நீர்மட்டம் 1.30 மீட்டர் குறைந்துள்ளது. வேளச்சேரி பகுதியில் நீர்மட்டம் சற்று உயர்ந்துள்ளது. ஆனால் கோடம்பாக்கம் பகுதியில் குறைந்துள்ளது. டிசம்பரில் மழை அதிகரித்தால் மாநிலம் முழுவதும் நிலத்தடி நீர்மட்டம் ஓரளவு உயர வாய்ப்புள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

மாவட்ட வாரியாக

நிலத்தடி நீர் கிடைக்கும் விவரம் (மீட்டரில்)

மாவட்டம் கடந்த இந்த

ஆண்டு ஆண்டு

சென்னை 3.57 4.87

திருவள்ளூர் 2.96 3.33

காஞ்சிபுரம் 2.64 3.64

திருவண்ணாமலை 4.20 8.05

வேலூர் 6.50 7.32

தருமபுரி 6.26 7.61

கிருஷ்ணகிரி 7.15 6.10

கடலூர் 4.61 6.56

விழுப்புரம் 3.12 6.30

தஞ்சாவூர் 2.87 3.07

திருவாரூர் 2.53 3.1

நாகப்பட்டினம் 1.44 2.76

திருச்சி 8.86 11.30

கரூர் 7.07 8.22

பெரம்பலூர் 9.35 9.37

புதுக்கோட்டை 6.60 7.90

அரியலூர் 4.64 4.66

சேலம் 8.76 11.27

நாமக்கல் 11.19 11.72

ஈரோடு 9.69 8.64

கோவை 8.36 13.91

திருப்பூர் 10.91 11.98

நீலகிரி 1.73 1.98

திண்டுக்கல் 7.92 11.32

மதுரை 6.14 7.25

ராமநாதபுரம் 4.24 5.74

சிவகங்கை 5.27 8.06

தேனி 11.02 14.39

தூத்துக்குடி 5.31 6.36

திருநெல்வேலி 5.11 7.82

விருதுநகர் 7.10 9.03

கன்னியாகுமரி 5.68 5.85

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

SCROLL FOR NEXT