முகப்பு
தமிழ்நாடு

ரயில்வே பட்ஜெட்: தமிழகத்துக்கு அதிக நிதி ஒதுக்கப்படுமா?

நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 26-ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள 2013-2014-ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:35 AM
பகிர்:

நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 26-ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள 2013-2014-ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

நிதிப் பற்றாக்குறையால் தமிழகத்தில் பல ரயில்வே திட்டங்கள் ஆமை வேகத்தில் நிறைவேற்றப்படும் நிலையில் தமிழக திட்டங்களை நிறைவேற்ற குறைந்தபட்சம் பட்ஜெட்டில் ரூ.1,300 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டியது அவசியம் என தெற்கு ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

2012-2013-ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் இன்னும் நிறைவேறாத நிலையில், இந்தப் பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டால்தான் தேங்கியிருக்கும் பணிகளையும் விரைவாக முடிக்க முடியும். கடந்தாண்டு ரயில்வே பட்ஜெட்டில் மொத்தமாக ரூ.57,630 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

Advertisement

இதில் சென்னைக்கு 9 புதிய புறநகர் ரயில்கள், தமிழகத்திற்கு 2 துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிவிக்கப்பட்டன. சென்னை - மதுரைக்கு புதிய துரந்தோ எக்ஸ்பிரஸ் அறிமுகம் செய்யப்பட்டு இப்போது இயங்கி கொண்டிருக்கிறது. மேலும் சென்னை - திருவனந்தபுரம் இடையிலான ரயில்களும் இயக்கப்பட்டன.

மக்களை சென்றடையாத ரயில்கள்: பாலக்காட்டில் இருந்து கோவை வழியாக ஈரோட்டுக்கு இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட மின்சார ரயில் இன்னும் இயக்கப்படவில்லை.

அதேபோல் தென் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கைப்படி திருநெல்வேலி- தாதர்(மும்பை) இடையே மடகான் (கோவா) வழியாக வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும் என்ற கடந்தாண்டு அறிவிப்பும் கிடப்பில் உள்ளது. மதுரை - கச்சேகுடா (ஹைதராபாத்) இடையே திண்டுக்கல், திருச்சி, கரூர், ஈரோடு, காட்பாடி, சித்தூர் வழியாக இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலும் தயாராகவில்லை. டேராடூன் - சண்டீகர் - சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரயில் ஈரோடு வழியாக மதுரை வரை இயக்கப்படும் என்ற அறிவிப்பும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

விழுப்புரம் - காட்பாடி இடையே தினமும் மூன்று பயணிகள் ரயில் இயக்கப்படும் என்ற அறிவிப்பும் நடைமுறைக்கு வரவில்லை.

நிறைவேற்றப்பட வேண்டிய பணிகள்: சென்னை சென்ட்ரல், எழும்பூர் போல தாம்பரம் மற்றும் ராயபுரத்தில் முனையங்கள் அமைக்கப்படும் என்று ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. மேலும், தாம்பரத்தில் 3-வது முனையம் அமைக்கும் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுகின்றன. இதற்கு போதிய நிதி ஆதாரமில்லாததே காரணம் என்று கூறப்படுகிறது.

தாமதத்துக்கு காரணம் என்ன? ரயில்வேயில் பணியாளர்கள் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. இதனால் பணிகள் தாமதமாகின்றன. மேலும் தமிழகத்தின் சார்பாக திட்டங்களை நிறைவேற்ற ரயில்வே துறைக்கு அழுத்தம் கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் இப்போதுள்ள சூழ்நிலையில் வட மாநிலங்களின் தேவை அதிகளவில் இருப்பதால், ரயில்வே துறையால் தென் மாவட்டங்களில் குறிப்பாக தமிழகத்தின் மீதான பார்வை போதியளவில் விழவில்லை.

மேலும் தெற்கு ரயில்வேயில் ரயில் பெட்டிகள் பற்றாக்குறை இருப்பதாலும், புதிய ரயில்களை இயக்குவதற்கு சாத்தியங்கள் இல்லாமல் இருப்பதாகவும் சில உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments