10,000 மெகாவாட் அளவைத் தாண்டியது மின் உற்பத்தி: மாவட்டங்களில் மின்வெட்டு 6 மணி நேரமாகக் குறைப்பு
தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த ஒரு மாத காலமாக 9000 மெகா வாட் அளவைத் தாண்டி மின் உற்பத்தி
தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த ஒரு மாத காலமாக 9000 மெகா வாட் அளவைத் தாண்டி மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 27-ம் தேதி மின் உற்பத்தி அதிகபட்சம் 10,017 மெகா வாட் அளவில் இருந்தது.
பற்றாக்குறை வெகுவாகக் குறைந்த காரணத்தால் மாவட்டங்களில் நிலவும் பல மணி நேர மின்வெட்டு கடந்த ஒரு மாத காலமாக 6 முதல் 7 மணி நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
Advertisement
2012 செப்டம்பர் மூன்றாம் வாரம் முதல் காற்றாலை மின் உற்பத்தி முழுவதுமாக தடைபட்டது. அனல் மின் நிலையங்களில் அவ்வப்போது ஏற்பட்ட கோளாறுகள் மற்றும் புது யூனிட்டுகளில் உற்பத்தி தாமதமானது என்பன உள்ளிட்ட காரணங்களால் மின் உற்பத்திக்கும் தேவைக்குமான இடைவெளி 4000 மெகா வாட் அளவைத் தாண்டியது.
இதன் காரணமாக சென்னையில் இரண்டு மணி நேர அறிவிக்கப்பட்ட மின்வெட்டும், பிற மாவட்டங்களில் 14 மணி நேரம் முதல் 16 மணி நேரம் வரை அறிவிக்கப்படாத மின்வெட்டும் அமல்படுத்தப்பட்டு வந்தது.
நவம்பர் மூன்றாம் வாரம் முதல் குளிர் அதிகரித்ததால், மின் பயன்பாடு அளவு வெகுவாகக் குறையத் தொடங்கியது. இதன் காரணமாக, மாவட்டங்களில் செய்யப்பட்டு வந்த அறிவிக்கப்படாத பல மணி நேர மின்வெட்டு ஓரளவு குறைக்கப்பட்டது. 10 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை மின்வெட்டு என்ற அளவில் இருந்துவந்தது.
இதற்கிடையே, மக்களுக்கு ஏற்படும் சிரமத்தை போக்கும் வகையில், அனல் மின் நிலையங்களில் ஏற்பட்ட பாதிப்புகளைச் சரிசெய்யும் பணிகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியது. இதன் மூலம், கடந்த ஒரு மாத காலமாக தமிழகத்தின் மின் உற்பத்தி 9000 மெகா வாட் அளவைத் தாண்டி கிடைத்து வருகிறது.
இதுகுறித்து மின் வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறியது: ஜனவரி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து அனல் மின் நிலையங்களிலும் எந்தவித பாதிப்பும் இன்றி உற்பத்தி நடைபெற்று வருகிறது.
அதாவது, மின் வாரியத்துக்குச் சொந்தமான 2,970 மெகா வாட் அளவு அனல் மின் நிலையங்களிலிருந்து கடந்த ஒரு மாத காலமாக சராசரியாக 2,600 மெகா வாட் அளவு மின்சாரம் கிடைத்து வருகிறது.
இதுபோல் மத்திய அரசுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வரும் மின் உற்பத்தி திட்டங்களிலிருந்து தமிழகத்துக்கு கிடைக்கவேண்டிய மொத்த பங்கான 3044 மெகா வாட்டில் கடந்த ஒரு மாத காலமாக சராசரியாக 2,500 மெகா வாட் அளவு கிடைத்து வருகிறது.
வல்லூர் புது யூனிட்டிலிருந்து தமிழகத்துக்கு 300 மெகா வாட் அளவுக்கு கிடைக்கிறது. இதுபோன்ற காரணங்களால் கடந்த ஒரு மாத காலமாக தமிழகத்துக்கு சராசரியாக 9,000 மெகா வாட் மின்சாரம் கிடைத்து வருகிறது. கடந்த 27-ம் தேதி மின் உற்பத்தி 10,017 மெகா வாட் அளவில் இருந்தது. செவ்வாய்க்கிழமை 9,950 மெகா வாட் அளவில் இருந்தது.
பற்றாக்குறை குறைந்த காரணத்தால் மாவட்டங்களில் மின் வெட்டு நேரம் 6 மணி முதல் 7 மணி நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
வரும் பிப்ரவரி இறுதி முதல் மின் உற்பத்தி இதே நிலையில்தான் இருக்கும். கோடை காலத்தில் மின் பயன்பாடு அதிகரிக்கும் என்பதால், நிலைமை மீண்டும் மோசமடையும் என்ற அச்சம் மக்களிடையே இருந்து வருகிறது.
ஆனால், அடுத்த 15 நாள்களில் வடசென்னை அனல் மின் நிலைய 2-வது யூனிட்டிலும், மேட்டூர் அனல் மின் நிலைய விரிவாக்கப்பட்ட 600 மெகா வாட் திறன் கொண்ட புது யூனிட்டிலும் மின் உற்பத்தி முழு அளவில் தொடங்கிவிடும். இவற்றின் மூலம் கூடுதலாக 1200 மெகா வாட் மின்சாரம் கிடைக்கும்.
எனவே, மின் வெட்டு நிலை இப்போது இருப்பதைவிட மோசமடைவதற்கு வாய்ப்பில்லை என்றார் அவர்.