முகப்பு
தமிழ்நாடு

கட்சித் தலைமையை விமர்சிக்க இவர் யார்? கார்த்தி ப.சிதம்பரம் மீது யுவராஜா விமர்சனம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமையை விமர்சிக்க கார்த்தி ப.சிதம்பரத்துக்கு என்ன தகுதி இருக்கிறது என்று இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் யுவராஜா கேள்வியெழுப்பியுள்ளார்.

Updated On : 13 மே 2013, 1:43 am IST
பகிர்:

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமையை விமர்சிக்க கார்த்தி ப.சிதம்பரத்துக்கு என்ன தகுதி இருக்கிறது என்று இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் யுவராஜா கேள்வியெழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் மேலிடம் கார்த்தி சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் யுவராஜா ஞாயிற்றுக்கிழமை கூறியது:

Advertisement

Advertisement

அண்மையில் திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாட்டை கார்த்தி சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

48 ஆண்டுகளாக தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெறவில்லை.

எனினும் தற்போது உள்ள காங்கிரஸ் தலைமை காமராஜர், மூப்பனார் போன்றோரின் வழியைப் பின்பற்றி செயல்படுவதால் காங்கிரஸ் உயிரோட்டத்துடன் திகழ்கிறது.

மாநில காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் மக்கள் பிரச்னையை முன்னிலைப்படுத்தி இதுவரை 6 பொதுக்கூட்டங்களை நடத்தியுள்ளார்.

கட்சியில் உள்ள அனைத்துத் தலைவர்களையும் ஒருங்கிணைத்து ஞானதேசிகன் வழிநடத்திச் செல்கிறார்.

இன்னும் ஓரிரு வாரங்களில் காங்கிரஸின் மாநில நிர்வாகிகள் பட்டியல் வெளிவர உள்ளது.

இதற்குக் களங்கத்தை ஏற்படுத்தும் வகையிலும், தொண்டர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலும் கார்த்தி சிதம்பரம் பேசியுள்ளார்.

2009-ஆம் ஆண்டு முதல் மாணவர் காங்கிரஸ் மற்றும் இளைஞர் காங்கிரஸ் தேர்தல் 2 முறைகள் நடைபெற்றுள்ளன.

இரண்டு தேர்தல்களும் ஜனநாயக முறையில்தான் நடைபெற்றுள்ளன.

இந்தத் தேர்தல்களை கார்த்தி குறை கூறுகிறார். இது ஏற்புடையது இல்லை.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக கார்த்தி சிதம்பரம் 2005-ஆம் ஆண்டு முதல் இருந்து வருகிறார்.

இவர் எத்தனை முறை சத்தியமூர்த்தி பவனுக்கு வந்துள்ளார்?

கட்சி விவகாரம் தொடர்பாக ஒரு தடவையாவது தலைவர் ஞானதேசிகனைச் சந்தித்துப் பேசி இருக்கிறாரா?

இதற்கு மாறாக, தனது அணியைச் சேர்ந்த நிர்வாகிகளின் தோல்வியை மறைப்பதற்காகவும் தனது தவறான செயல்பாட்டை மறைப்பதற்காகவும் காங்கிரஸ் தலைமை மீது பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்துகிறார்.

மாதத்தில் 20 நாள்கள் வெளிநாடுகளில் இருக்கும் கார்த்தி, 10 நாள்களே தமிழகத்தில் சொந்தத் தொழிலைக் கவனிப்பதற்காக இருக்கிறார்.

பகுதி நேர அரசியல்வாதியான அவருக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல்பாட்டை விமர்சிக்கும் தகுதி கிடையாது. கட்சித் தலைமையை விமர்சிக்க இவர் யார்?

காங்கிரஸ் மேலிடம் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் யுவராஜா.

அண்மையில் நடைபெற்ற மாணவர் காங்கிரஸ் தேர்தலில் ஜி.கே.வாசனின் ஆதரவாளர் கலையரசன் போட்டியிட்டார். இவர் தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்டதாக கார்த்தி ப.சிதம்பரம் புகார் தெரிவித்தார்.

இது தொடர்பாக தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தி, கலையரசன் வெற்றிபெற்றதாக அறிவித்தனர்.

இதனை கார்த்தி ஆதரவாளர்கள் ஏற்க மறுத்து வருகின்றனர்.

இது தொடர்பாக திருச்சியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மாணவர் காங்கிரஸ் தேர்தலில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக ராகுல் காந்தியிடம் புகார் கூறப்போவதாகவும், தமிழக காங்கிரஸ் சிறப்பாகச் செயல்படவில்லை என்றும் கார்த்தி குற்றம்சாட்டியிருந்தார்.

யுவராஜா குற்றச்சாட்டு தொடர்பாக கார்த்தி ப.சிதம்பரத்திடம் கருத்துக் கேட்டபோது, "இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கும் யுவராஜாவின் குற்றச்சாட்டுகளுக்கு தான் பதிலளிக்க விரும்பவில்லை' என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.