சித்தேரி ரயில் விபத்து: தண்டவாள வெல்டிங் குறைபாடே காரணம்: முதல் கட்ட அறிக்கையில் தகவல்
அரக்கோணம் அருகே சித்தேரியில் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதற்கு தண்டவாளத்தில் வெல்டிங் குறைபாடே காரணம் என்று மத்திய அரசுக்கு
அரக்கோணம் அருகே சித்தேரியில் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதற்கு தண்டவாளத்தில் வெல்டிங் குறைபாடே காரணம் என்று மத்திய அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள முதல்கட்ட விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் சித்தேரியில் ஏப்ரல் மாதம் 10-ஆம் தேதி, பிகார் மாநிலம் முசாபர்பூர் - யஷ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்து, 32 பேர் காயமடைந்தனர்.
விபத்து குறித்த காரணங்களை கண்டறிய தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சதீஷ் குமார் மிட்டல் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.
Advertisement
இது குறித்த விசாரணை ஏப்ரல் 16-ஆம் தேதி விபத்து நடைபெற்ற சித்தேரியில் தொடங்கியது. அங்கு பொதுமக்கள், ரயில்வே ஊழியர்களிடம் சில ஆதாரங்களை சேகரித்தது விசாரணை குழு.
மேலும் தெற்கு ரயில்வே சென்னைக் கோட்ட அலுவலகத்தில் ஏப்ரல் 15, 17 தேதிகளில் விசாரணை நடைபெற்றது. மொத்தமாக சுமார் 80 பேரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதில் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளான சித்தேரி பகுதி மக்களும் நேரில் பார்த்த சாட்சியங்களும் பங்கேற்றனர்.
இதன்பிறகு,முதல்கட்ட விசாரணை அறிக்கை ஒரு மாதத்துக்குள் ரயில்வே அமைச்சகத்துக்கு அளிக்கப்படும். முழு விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க 6 மாதங்களாகும் என்று தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சதீஷ் குமார் மிட்டல் தெரிவித்திருந்தார்.
அறிக்கை: சித்தேரி ரயில் விபத்து குறித்த முதல்கட்ட அறிக்கை மத்திய அரசிடம் புதன்கிழமை அளிக்கப்பட்டுள்ளது. அதில், சித்தேரி பகுதியில் உள்ள தண்டவாளப் பகுதியில் வெல்டிங் குறைபாடே ரயில் தடம் புரண்டதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ 20 கோடி சேதம்: சித்தேரி அருகே நடந்த ரயில் விபத்தில் ரூ.20 கோடிக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தினால் அருகில் உள்ள உயர் அழுத்த மின் டிரான்ஸ்ஃபார்மர் முற்றிலும் சேதமடைந்துள்ளது. விபத்து பகுதியில் ரூ 20 லட்சம் மதிப்பிலான தண்டவாளம் புதிதாக பொருத்தப்பட்டது.
மேலும் இதே சித்தேரியில் பல தடவை ரயில் விபத்து நிகழ்ந்துள்ளதால் அந்த விபத்துகள் குறித்தும் மத்திய அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.