நடராஜர் கோயில் மூன்றாவது பிரகாரத்தில் உள்ள கருங்கல் தரையை அகற்ற ஆட்சியரிடம் தீட்சிதர் கோரிக்கை
பிரசித்தி பெற்ற சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் மூன்றாவது பிரகாரத்தில் உள்ள கருங்கல் தரையை அகற்ற வேண்டும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமாரிடம், திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள்
பிரசித்தி பெற்ற சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் மூன்றாவது பிரகாரத்தில் உள்ள கருங்கல் தரையை அகற்ற வேண்டும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமாரிடம், திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நிகழ்ச்சியில் நடராஜர் கோயில் பொதுதீட்சிதர்களில் ஒருவரான சு.கைலாச சங்க தீட்சிதர் கோரிக்கை விடுத்து கடிதம் அளித்துள்ளார்.
அந்த கடிதத்தில், சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் உலகிலேயே மிகவும் பழமை வாய்ந்த கோயில். இந்த கோயில் சுமார் 2 லட்சத்து 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உள்ள புராதானமான 40 ஏக்கர் பரப்பளவில் உள்ள கோயில். இந்த கோயில் சேர, சோழ பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டு திருப்பணி செய்யப்பட்டது. மூலவர் ஸ்ரீநடராஜரை சுற்றி மூன்று பிரகாரங்கள் உள்ளன. மூன்றாவது பிரகாரம் மிக பெரியது.
கோயிலை கட்டி திருப்பணி செய்த அனைத்து மன்னர்களும் இந்த மூன்றாவது பிரகாரத்திற்கு கருங்கல் தரை போடவில்லை. ஏனென்றால் மழை பெய்தால், மழைநீர் அனைத்தும் இந்த கோயில் மூன்றாவது பிரகாரத்தில் விழுந்து, பூமிக்கடியில் சென்றுவிடும். மூன்றாவது பிரகாரத்தில் உள்ள கிணற்று நீரை கொண்டு கோயில் பூஜை சிறப்பாக நடைபெற்று வந்தது.
சுமார் 40 வருடங்களுக்கு முன்பு கோயிலை சுற்றி உள்ள மூன்றாவது பிரகாரத்தில் மக்கள் நடப்பதற்காக கருங்கல் தரை அமைத்தார்கள். அன்று முதல் இன்று வரை ஒரு துளி மழைநீர் கூட கோயிலை சுற்றி பூமிக்கு அடியில் செல்லாமல், வெளியேவே நின்று விடுகிறது. இதனால் கோயிலை சுற்றி நிலத்தடி நீர்மட்டம் குறைந்து போய் உள்ளது. பூமிக்கு அடியில் நீர் (சுமார் 100 அடிக்கு) குறைந்து போனதால், மூன்றாவது பிரகாரத்தில் வடக்கு கோபுரத்தின் அருகே அமைந்துள்ள ஸ்ரீபாண்டியநாயகர் கோயில் விரிசல் ஏற்பட்டு இடிந்துவிட்டது.
எனவே கோயிலில் உள்ள மற்ற சந்நிதிகளுக்கும் இந்த பாதிப்பு ஏற்படாமல் இருக்க கோயிலை சுற்றியும், கோயிலுக்கு வெளியேயும் உள்ள கிணறுகளில் நீர் கிடைக்க மூன்றாவது பிரகாரத்தில் உள்ள கருங்கல் தரைகளை அகற்றி கடல்கரையோரம் கொண்டு போட வேண்டும். மேலும் சுமார் 40 ஆண்டுகளாக மூன்றாவது பிரகாரத்தில் மழைநீர் இல்லாததால், மண் ஆற்றி போய் இருக்கும், எனவே அந்த மண்ணை சுமார் 6 அடிக்கு எடுத்து அப்புறப்படுத்தி, ஆற்று மண்ணையோ, கடல் மண்ணையோ போட வேண்டும். பின்னர் ஏரி நீரை குழாய் மூலம் மூன்றாவது பிரகாரத்தில் அதிகளவில் விட வேண்டும். அப்போதுதான் நீர்மட்டம் உயரும் என கடிதத்தில் கு.கைலாச சங்கர தீட்சிதர் தெரிவித்துள்ளார்.