கோவையில் ஐ.எஸ். சமூக வலைதளப் பக்க நண்பர்கள்?
இஸ்லாமிய தேச அமைப்பு (ஐ.எஸ்.) சார்ந்த முகநூல், சுட்டுரை பக்கங்களை கோவையில் அதிகமானோர் பின்பற்றி வருவதாக சிறப்புப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாடுகோவையில் ஐ.எஸ். சமூக வலைதளப் பக்க நண்பர்கள்?
இஸ்லாமிய தேச அமைப்பு (ஐ.எஸ்.) சார்ந்த முகநூல், சுட்டுரை பக்கங்களை கோவையில் அதிகமானோர் பின்பற்றி வருவதாக சிறப்புப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் தெரிவிக்கின்றனர்.
இஸ்லாமிய தேச அமைப்பு (ஐ.எஸ்.) சார்ந்த முகநூல், சுட்டுரை பக்கங்களை கோவையில் அதிகமானோர் பின்பற்றி வருவதாக சிறப்புப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் தெரிவிக்கின்றனர்.
ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு இந்தியாவில் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இணையதளம் வாயிலாக அந்த அமைப்பின் நடவடிக்கைகளைப் பார்ப்போர், இந்திய இறையாண்மைக்கு எதிராகச் செயல்படாத வரை அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
ஐ.எஸ். அமைப்புக்கு உலகம் முழுவதும் எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், இணையதளம் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் வாயிலாக அந்த அமைப்பு இளைஞர்களிடம் வேகமாகப் பரவி வருகிறது.
உதாரணமாக, ஐ.எஸ். அமைப்பில் ஆள்களைச் சேர்ப்பதற்கும், பயங்கரவாத அமைப்புடன் தகவல்களைப் பரிமாற்றம் செய்வதற்கும் உதவியாக இருந்ததாக மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மெஹ்தி மஸ்ரூர் பிஸ்வாஸ் என்ற இளைஞரை பெங்களூரில் போலீஸார் சில தினங்களுக்கு முன்பு கைது செய்தனர். மெஹ்தி மஸ்ரூர் பிஸ்வாஸின் சுட்டுரை கணக்கை 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பின்பற்றி வந்துள்ளனர்.
இதே போல, தமிழகத்தில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் ஒன்றான கோவையில் ஐ.எஸ். அமைப்பின் முகநூல், சுட்டுரை கணக்குகளை அதிகமானோர் பின்பற்றி வருகின்றனர் என்ற தகவலை கோவை மாநகர சிறப்புப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர்.
மாநிலத்தில் ஐ.எஸ். அமைப்பை பின்பற்றி வருவோரில், அதிக எண்ணிக்கை கொண்ட ஒருசில பகுதிகளில் கோவையும் ஒன்றாக உள்ளது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், அவர்கள் எந்த அளவுக்குக் கண்காணிக்கப்படுகிறார்கள் என்பதுதான் கேள்வியே.
இதுகுறித்து கோவை சிறப்புப் புலனாய்வுப் பிரிவு அதிகாரி ஒருவரிடம் நேரில் பேசியபோது, முக்கியத்துவம் வாய்ந்த கோவையில் ஐ.எஸ். அமைப்பின் முகநூல், சுட்டுரை கணக்குகளை அதிகமானோர் பின்பற்றி வருகின்றனர் என்பது விசாரணையில் தெரிந்துள்ளது. தடை செய்யப்பட்ட அமைப்புகளின் செயல்பாடுகளை நேரடியாகப் பின்பற்றுவது குற்றமாகக் கருதப்படும்.
அதே நேரத்தில், சம்பந்தப்பட்ட அமைப்புகளின் நடவடிக்கைகளை இணையதளம் வாயிலாகப் பார்ப்போர், பின்பற்றுவோரைக் குறிப்பிட்டு நாம் தடை செய்ய இயலாது. இணையதளங்களில் யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். அவற்றைப் பற்றி பேசலாம். இந்த உரிமை அனைவருக்கும் உள்ளது.
ஆனால், இந்திய இறையாண்மைக்கு எதிரான விஷயமாகக் கருதப்படும் செயல்பாடுகளில் ஈடுபட்டால், சட்டவிரோதச் செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள்.
உதாரணமாக, கூட்டுச் சேர்ந்து தடை செய்யப்பட்ட இயக்கங்களின் தகவல்களைப் பரப்புவது உள்ளிட்டவற்றைக் கூறலாம். கோவையில் எங்களுக்குத் தெரிந்த வரை அதைப் பற்றி யாரும் சிந்திக்கவில்லை என்று சொல்லி விட முடியாது. செயல்படுவோர் யாரும் கிடையாது.
தவிர, இவ்வாறு இணையதளங்கள் வாயிலாகப் பின்பற்றுவோர், உண்மையில் எங்கிருந்து செயல்படுகிறார்கள் என்பதைத் தொடர்ச்சியாகப் பின்பற்றுவது எளிதல்ல. இருப்பினும், கோவையில் இதுகுறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்றார்.
முன்னதாக, ஐ.எஸ். அமைப்புக்கு இந்தியாவில் தடை விதிக்கும் முன்னர், ஐ.எஸ். அமைப்பின் பெயரை அச்சடித்து டீ-சர்ட்கள் திருப்பூரிலிருந்து உற்பத்தி செய்யப்பட்டது தொடர்பாக சிலர் மீது தமிழக போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில போராட்டங்கள் நடைபெற்றன. கோவையிலிருந்தும் சில ஐ.எஸ். ஆதரவு குரல்கள் வெளிப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
தடை செய்யப்பட்ட இந்த அமைப்பை தகவல் பரிமாற்ற தளங்கள் மூலமாகப் பின்பற்றுவோரைக் கண்காணிக்க வேண்டியது இன்றைய சூழலில் கட்டாயமாக மாறியுள்ளது.
இதுகுறித்து மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனிடம் கேட்டபோது, இது தொடர்பாக தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். கோவையில் இதுவரை சட்ட விரோதமாகச் செயல்படுவோர் யாரும் இல்லை என்றார்.