தமிழ்நாடு

பாசத்தின் பிடியில்... நினைவுகள் கோயிலாய்...

நாகப்பட்டினத்தில் ஆழிப் பேரலையின் கோரத் தாண்டவத்துக்குத் தன் 2 குழந்தைகளையும் பறிகொடுத்த ஒருவர், தனது வீட்டுக்குள்ளேயே கோயில் கட்டி, தன் குழந்தைகளையே கடவுளாக்கி வாழ்கிறார்.

சி.ராஜசேகரன்

நாகப்பட்டினத்தில் ஆழிப் பேரலையின் கோரத் தாண்டவத்துக்குத் தன் 2 குழந்தைகளையும் பறிகொடுத்த ஒருவர், தனது வீட்டுக்குள்ளேயே கோயில் கட்டி, தன் குழந்தைகளையே கடவுளாக்கி வாழ்கிறார்.

நாகப்பட்டினம், துறைமுகம் கலங்கரை விளக்கம் அருகேயுள்ள மரவாடித் தெருவில் உள்ள குடிசை வீட்டில், தனது மனைவி புனிதா, வளர்ப்பு மகள் சிவரஞ்சனி ஆகியோருடன் வாழ்ந்து வரும் மாசிலாமணி தான், தன் குழந்தைகளுக்குத் தன் வீட்டிலேயே கோயில் கட்டியவர்.

ஆழிப்பேரலைக்குப் பின்னர் காடம்பாடி, அந்தணப்பேட்டை, மகாலட்சுமி நகர், செல்லூர், புதிய நம்பியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பாக அமைக்கப்பட்ட சுனாமி வீடுகளுக்கு மரவாடித் தெரு மக்கள் குடிப்பெயர்ந்ததால் அந்தத் தெருவே வெறிச்சோடியது. ஆனால், ஒரு குடும்பம் மட்டும் அங்கிருந்து அகலவில்லை. அது, சுனாமியில் தன் 2 குழந்தைகளை பறிக்கொடுத்து விட்டு, தன் குழந்தைகளுக்காக வீட்டிலேயே கோயில் கட்டி வணங்கி வரும் மாசிலாமணியின் குடும்பம்.

மீனவர் மாசிலாமணியிடம் பேசியதிலிருந்து...

கடலில் தான் என் பிழைப்பு. அதனால், கடற்கரை பகுதியில் தான் எங்கள் வாழ்க்கையின் பெரும் பகுதி போகும். அன்றைக்கும் அப்படி தான், நான் கடற்கரை பகுதியில் நடந்து போய்க் கொண்டிருந்தேன். அப்போது, கடலிலிருந்து திடீரென ஒரு அலை வாரிச் சுருட்டியபடி உயரமாக கிளம்பி வந்தது. அதைப் பார்த்ததும் எல்லோரும் ஓட்டம் எடுத்தோம்.

ஆனால், எங்களை விட வேகமாக வந்த அலை எங்களை சுருட்டி தண்ணீரில் அழுத்தியது. அலையுடன் அடித்துச் செல்லப்பட்ட நான், கலங்கரை விளக்கத் தடுப்புச் சுவரில் மோதி விழுந்தேன். சில நிமிஷங்களுக்கு என்ன நடந்தது என்றே தெரியாது. பின்னர், தண்ணீர் வடிந்த பின் தான், நான் உயிரோடு இருப்பதையே என்னால் உணர முடிந்தது. அய்யோ, வீட்டிலிருந்தவங்க என்ன ஆனாங்களோ என வீட்டை நோக்கி ஓடினேன். ஆனால், நான் வாழ்ந்து பழகிய தெரு அடையாளம் தெரியாத வகையில் உருக்குலைந்திருந்தது. என் வீடு எனக்குத் தெரியல. எல்லாம் உடைஞ்சி கிடந்தது.

கடவுளே என் குழந்தைகள் எங்கேன்னு நினைச்சிக்கிட்டு தெருவை சுற்றிலும் பார்த்தேன். அப்போ என் மனைவி புனிதா எங்கிருந்தோ அழுது புலம்பிக் கொண்டு, தலையில் அடித்துக் கொண்டே ஓடிவந்தாள். சுனாமியில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டு ஒரு கழிப்பறையில் சிக்கியிருந்து மீண்ட என் மனைவியின் கையிலிருந்த 3 வயது மகள் சிவரஞ்சனியையும், வீட்டிலிருந்த 5 வயது மகன் சஞ்சய்யையும் காணோம் எனக் கூறி அவள் கதறியபோதே நான் பாதி செத்துட்டேன்.

இருந்தாலும், வேண்டாத தெய்வத்தையெல்லாம் வேண்டிக்கிட்டு அங்கேயும், இங்கேயும் தேடினோம். ஆனால், என் பிள்ளைங்களோட பிணம் தாங்க கிடைச்சுது...

என் பிள்ளைங்களோட என் தம்பி பிள்ளைங்க, அக்கா குழந்தைகள்ன்னு 9 குழந்தைகளோட சடலங்கள், அங்கங்க கிடந்ததைப் பார்த்தப்போ, வாழ்க்கையே வெறுத்துடுச்சுங்க. பின்னர், எங்களின் திருப்திக்காக ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்த்து வருகிறோம். என்னோட மகளின் நினைவாக, நாங்கள் தத்தெடுத்த குழந்தைக்கும் சிவரஞ்சனி என்றே பெயர் வைத்துள்ளோம். 10 வயதாகும் அவருக்கு காது கேட்கவில்லை. திக்கி திக்கி பேசுகிறார். அவருக்கு சிகிச்சை அளிக்கக் கூட வசதியில்லை.

அரசு எங்களுக்கு சுனாமி வீடுகளை கட்டித் தந்தது. ஆனால் அந்த வீட்டுக்கு செல்வதற்கு எங்களுக்கு மனமில்லை. இந்த வீட்டில் இருக்கும்போது ஒரு நிம்மதி. சுனாமியில போன என் மகளும், மகனும் இங்க எங்கக் கூடவே இருப்பது போன்ற உணர்வு. இது போதும். வாழ்க்கையில் வேறெதுவும் வேண்டாம் என்கிறார் மாசிலாமணி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT