முகப்பு
தமிழ்நாடு

கிருஷ்ணகிரியில் மலைப் பாம்பு சரணாலயம் அமைக்க பரிந்துரை

கிருஷ்ணகிரியில் மலைப் பாம்பு சரணாலயம் அமைக்க அரசுக்கு மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்துள்ளது. இதையடுத்து, நாட்டிலேயே முதலாவது மலைப் பாம்பு சரணாலயம் இங்கு அமைக்க வாய்ப்புள்ளதாக வனத் துறையினர் தெரிவித்தனர்.

Updated On : 3 ஜனவரி, 2014 at 2:54 AM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 9:37 AM

கிருஷ்ணகிரியில் மலைப் பாம்பு சரணாலயம் அமைக்க அரசுக்கு மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்துள்ளது. இதையடுத்து, நாட்டிலேயே முதலாவது மலைப் பாம்பு சரணாலயம் இங்கு அமைக்க வாய்ப்புள்ளதாக வனத் துறையினர் தெரிவித்தனர்.

இந்தியாவில் காடுகள் பரந்துள்ள பகுதியாக கிருஷ்ணகிரி மாவட்டம் விளங்குகிறது. இந்த மாவட்ட வனப் பகுதிகளில் யானை, கரடி, கழுதைப் புலி, சிறுத்தை, மான், நரி, மயில், முள்ளம்பன்றி, எறும்புத் தின்னி, மலைப் பாம்பு, உடும்பு போன்ற ஏராளமான விலங்குகள் உள்ளன. குறிப்பாக கிருஷ்ணகிரி வனச் சரகத்தில் ஏராளமான மலைப் பாம்புகள் காணப்படுகின்றன.

பட்டியல் 1-இல் உள்ள இந்த அரிய வகையானப் பாம்புகளைப் பாதுகாப்பதில் கிருஷ்ணகிரி மாவட்ட வனத் துறை தனிக் கவனம் செலுத்தி வருகிறது.

Advertisement

மூன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாம்பு வகைகளில் மலைப் பாம்புதான் மிகப் பெரியது. இந்த வகைப் பாம்பு 13 கோடியே 10 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியதாகக் கருதப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குறிப்பாக, கிருஷ்ணகிரி அதன் சுற்றுப் பகுதிகளில் அதிக அளவில் காணப்படும் மலைப் பாம்புகள் மனிதர்களுக்கு எவ்வித தீங்கையும் விளைவிக்காதவை. இதனால், இவற்றை யாரும் கொல்வது இல்லை. விளை நிலங்களில் மலைப் பாம்பு புகுந்தால் விவசாயம் சிறப்பாக இருக்கும் என்பது இந்தப் பகுதி மக்களின் நம்பிக்கை.

இந்த வகைப் பாம்புகளை அழிவிலிருந்து காக்க கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மலைப் பாம்பு சரணாலயம் அமைக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து, மாவட்ட நிர்வாகமும் மாவட்டத்தில் மலைப் பாம்பு சரணாலயம் அமைக்க அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை அரசு விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிருஷ்ணகிரி வனச் சரகத்தில் மலைப் பாம்புக்கான சரணாலயம் அறிவிக்கப்பட்டால், அவற்றின் நடமாட்டம் பரவலாக்கப்படுவதுடன், வனச் சுழற்சியும் மேம்படும். மலைப் பாம்பு சரணாலயம் அறிவிக்கப்பட்டால், இந்தியாவிலேயே முதல் மலைப் பாம்பு சரணாலயமாக கிருஷ்ணகிரி இருக்கும். இந்த சரணாலயத்துக்கு அதியமான் மலைப் பாம்பு சரணாலயம் எனப் பெயரிட வாய்ப்புள்ளதாக வனத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.