தமிழ்நாடு

பாரதியாரின் படைப்புகளை தொகுத்த ரா.அ. பத்மநாபன் மறைவு

தினமணி

பாரதியாரின் படைப்புகளை தொகுத்தளித்த மூத்த பத்திரிகையாளர் ரா.அ. பத்மநாபன் (97) சென்னை, பெசன்ட் நகரில் உள்ள அவரது இல்லத்தில் திங்கள்கிழமை (ஜனவரி 27) காலமானார்.

 மறைந்த ரா.அ. பத்மநாபனுக்கு மனைவி, 3 மகன்கள் மற்றும் 3 மகள்கள் உள்ளனர்.

 மூத்த பத்திரிகையாளரும் வரலாற்றுவியலாளருமான அவர், பாரதியாரின் படைப்புகள் பலவற்றை தொகுத்து, பாரதி அறிஞராகத் திகழ்ந்தவர். பாரதியாரின் படைப்புகளை ஆய்வு செய்தவர். பாரதியாரின் 5 அரிய புகைப்படங்களில் 2 புகைப்படங்கள் ரா.அ.பத்மநாபன் தேடிக் கண்டுபிடித்தவையாகும். பாரதியாரின் கவிதைகள், கட்டுரைகள், இந்தியா இதழில் பாரதியார் எழுதிய படைப்புகள் போன்றவற்றை தொகுத்து வழங்கியுள்ளார்.

 தனது 16-ஆம் வயதில் "ஆனந்த விகடன்', பத்திரிக்கையில் பணியைத் தொடங்கிய ரா.அ. பத்மநாபன், "தினமணிக் கதிர்' இதழின் ஆசிரியராகவும் சிறிது காலம் பணியாற்றினார். இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனர் ராம்நாத் கோயங்காவின் தனிச்செயலாரகவும் இருந்துள்ளார். "தி ஹிந்து' நாளிதழிலும் பணியாற்றியுள்ளார். பாரதியார் குறித்த படங்களின் தொகுப்புகளை "சித்திர பாரதி' என்ற பெயரில் வெளியிட்டுள்ளார். முதன்முதலாக 1957-ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட இந்த தொகுப்பின் மூலம் பரவலாக அவர் அறியப்பட்டார்.

 தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதும் திறன் பெற்ற ரா.அ. பத்மநாபன், அந்தக் கால வரலாற்றைப் பதிவு செய்தவர். குறிப்பாக சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கையை எளிய முறையில் பொதுமக்களிடம் கொண்டு சேர்த்தார். வ.வே.சு., நீலகண்ட பிரமச்சாரி, சுப்பிரமணிய சிவா போன்ற சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வரலாற்றையும் அவர் எழுதியுள்ளார். மேலும் தமிழ் இதழியலின் தொடக்க கால வரலாற்றையும் சிறந்த முறையில் பதிவு செய்துள்ளார்.

 இவர் புது தில்லி அனைத்திந்திய வானொலியில் பணியாற்றியபோது, மகாத்மா காந்தியின் அஸ்தி கரைப்பு நிகழ்ச்சியை தமிழில் அறிவிப்பு செய்தார். பாரதியார், வ.உ.சி., டாக்டர் ருக்மணி லட்சுமிபதி போன்றோரின் வாழ்க்கை வரலாற்றையும் சேர்த்து 32 புத்தகங்களை எழுதியுள்ளார். குழந்தைகளுக்காக இவர் எழுதிய "பாரதி' என்ற புத்தகம் தேசிய புத்தக அறக்கட்டளை மூலம் 16 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மறைந்த ரா.அ. பத்மநாபனின் இறுதிச் சடங்கு பெசன்ட் நகர் மயானத்தில் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் நடைபெறும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்புக்கு: 9841035351, 044-24462769.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

SCROLL FOR NEXT